Published : 25 Oct 2016 07:33 PM
Last Updated : 25 Oct 2016 07:33 PM

கேரளத்தின் மருத்துவக் கழிவுகளால் குப்பைத் தொட்டியாகும் தமிழகம்: ஆளுங்கட்சியினர் துணைபோவதாக குற்றச்சாட்டு

கேரளத்தின் மருத்துவக் கழிவுகளுக்கு கோவை குப்பைத்தொட்டியாவது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இது ஆளுங்கட்சியினரின் துணையுடனே நடக்கிறது. அதனால் லஞ்சம், மாமூல் என்ற அளவில் இருந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதை தடுக்க கடுமையான முறையில் தண்டிக்கக்கூடிய சட்ட திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள் பொதுநோக்கர்கள்.

கோவை மதுக்கரையை அடுத்துள்ள எட்டிமடை அருகே உள்ள ஒரு தோட்டத்தில் கேரள மாநிலம் கோழிக்கோட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவக்கழிவுகள் மற்றும் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சுமார் 300 டன் மூட்டை, மூட்டையாக கொட்டப்பட்டிருந்தது நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது. இப்படி கொட்டப்பட்டிருந்த கழிவுகள் மட்டும் 200 லாரிகளுக்கும் மேல் இருக்கும் என்ற நிலையில், அன்றைய தினம் கழிவுகளை ஏற்றிக் கொண்டு இங்கே இறக்க வந்த 24 லாரிகளையும் பொதுமக்கள் முற்றுகையிட்டு பிடித்தனர்.

தொடர்ந்து வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதில் தோட்டத்துக்காரர் செல்லப்பாவிடம் விசாரணை நடத்தியதில் 9 மாதங்களுக்கு முன்பு பாலக்காட்டை சேர்ந்த முகம்மது இலியாஸ் என்பவர் பிளாஸ்டிக்கழிவுகள் கொண்டு வந்து தரம் பிரிப்பதற்காக நிலவாடகைக்கு இடம் கேட்டதன் அடிப்படையில் நிலத்தை கொடுத்ததாகவும், கடந்த 1 மாத காலமாக இந்த கழிவுகள் கொண்டு வரப்பட்டு தனித்தனியே பிரிக்கப்பட்டு தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப் படுவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்தக் கழிவுகளை தரம்பிரித்து எடுப்பதற்காக ஒடிஷா, பிஹார் போன்ற வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் கூலி அடிப்படையில் 20க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. அதையடுத்து சிறைப்பிடிக்கப்பட்ட 24 லாரிகள், மருத்துவக்கழிவுகளை கொண்டு வந்து தரம் பிரித்த முகம்மது இலியாஸ் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. லாரிகளில் உள்ள கழிவுகளை எங்கிருந்து எடுத்து வந்தார்களோ, அங்கேயே திரும்பக் கொண்டு செல்லுமாறு டிரைவர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

(சிறைபிடிக்கப்பட்ட லாரிகள்)

இதுகுறித்து இப்பகுதி அரசியல் பிரமுகர்கள் சிலரிடம் பேசியபோது, ''இந்த மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது என்பது ஆறு மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இது தமிழக- கேரளா எல்லைப்பகுதியானதால் வாளையாறு அருகே அமைந்துள்ள காவல்துறை, வணிகவரித்துறை, வனத்துறை சோதனைச் சாவடியில் உள்ளவர்கள் லாரிக்கு இவ்வளவு என்று மாமூல் வாங்கிக் கொண்டே அனுமதித்துள்ளனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக இப்பகுதியை சேர்ந்த ஆளுங்கட்சியினர் சிலரே லாரிக்கு ரூ. 5 ஆயிரம் வீதம் வாங்கிக் கொண்டு கேரளா ஆட்களுக்கு உதவி புரிந்துள்ளனர். அவர்களே பல்வேறு துறை அதிகாரிகளையும் சரிகட்டியும் வந்துள்ளனர். இதை கவனித்த இன்னொரு ஆளுங்கட்சியினர் கோஷ்டி இந்த மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களிடம் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளது. இந்த மாமூல் விவகார சண்டையில்தான் பாதிக்கப்பட்ட கோஷ்டி பொதுமக்கள் என்ற பெயரால் லாரிகளை சிறைப்பிடித்து மாவட்ட உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்துள்ளது. அதையடுத்தே வேறு வழியில்லாது உள்ளூர் அதிகாரிகள் விவகாரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது'' என்று தெரிவித்தனர்.

இப்பகுதியில் கொட்டப்பட்டிருக்கும் கழிவுகளையும், சிறைபிடிக்கப்பட்ட லாரிகளையும் ஆய்வு செய்து கொண்டிருந்த அலுவலர்கள் சிலரிடம் இதுகுறித்து கேட்டபோது, 'இது பெரிய இடத்து சமாச்சாரம். எங்களிடம் எதுவும் கேட்காதீர்கள்!' என்று கழன்று கொண்டனர்.

கழிவுகள் கொட்டப்பட்டிருந்த தோட்டத்தை சுற்றி வந்ததில் மருத்துவக்கழிவுகளின் வாசம் மூச்சு முட்டியது. 'இந்த மருத்துவக் கழிவுகள் கொட்ட ஆரம்பித்த பிறகு நல்லவேளை இங்கே மழை இல்லை.ஒரு வேளை பெருமழையொன்று பெய்திருந்தால் சுற்றுப்புற விவசாய நிலங்களில் எல்லாம் இந்த கழிவுகளின் சாறு ஊடுருவியிருக்கும். நிலங்களே பாழ்பட்டிருக்கும்' என்று குறிப்பிட்டனர். கழிவுகள் கொட்டப்பட்டிருந்த நிலத்துக்காரர்களிடம் பேசியபோது, 'மாதம் 7 ஆயிரம் நில வாடகை தருவதாக சொன்னார்கள். அதற்காக வாடகைக்கு விட்டோம். இந்த அளவுக்கு இது வில்லங்கமாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியாது' என்றனர்.

பிடிபட்டிருக்கும் லாரியின் டிரைவர்கள் மற்றும் கிளீனர்களிடம் பேசியபோது, ''நாங்கள் பெரும்பாலும் பாண்டிச்சேரி, நாமக்கல், விழுப்புரம் பகுதியை சேர்ந்தவர்கள். கேரளாவில் வேறு லோடு ஏற்றிப்போனபோது இதை குறிப்பிட்ட இடத்தில் இறக்குமாறு கேட்டு வாடகையும் பேசினார்கள். ஏற்றும்போது கோழிக்கோட்டில் கேரள அமைச்சர் முன்னிலையிலேயே ஏற்றினார்கள். ரோட்டில் எங்காவது ஏற்றி, ரோட்டில் எங்காவது இஷ்டம் போல் கொட்டி விட்டு சென்றால்தான் தப்பு. இது ஏற்றும் இடமும் இறக்கி வைக்கும் இடமும் தெரியும். அப்படியிருக்க இதில் என்ன வில்லங்கம் இருக்கப்போகிறது என்றுதான் வாடகைக்கு ஒப்புக் கொண்டோம். இப்படி வம்பு வரும் என்று நினைக்கவில்லை'' என்று தெரிவித்தனர்.

கோவையைப் பொறுத்தவரை இத்தகைய கேரள மருத்துவக் கழிவுகள் லாரி,லாரியாக கொட்டப்படுவது கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகவே நடக்கிறது. கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழக கேரளா எல்லையான கோவை வாளையாறு பகுதியில் உள்ள அத்துவானக்காட்டில் கல்லுக்குழிகளில் கேரள டேங்கர் லாரிகள்ல ஒரு வித திரவக்கழிவை இரவோடு இரவாக இறக்கி விட்டு சென்றுவிட்டது. அடுத்தநாள் அந்த ஏரியாவே ஒரே துர்நாற்றம். அந்த பகுதியில் உள்ள செடி கொடிகள் எல்லாம் பட்டுப் போய்விட்டன. சில நாட்களில் அங்குள்ள நீர்நிலைகளும் கெட்டுப் போக, அடுத்து இதேபோன்று ரசாயனக்கழிவை கொட்ட வந்த சில லாரிகளை சிறைபிடித்தனர். அந்த லாரிகள் கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் இருந்து வந்தவை. அங்கே உள்ள ரசாயன ஆலையின் கழிவுகளே அவை. இதை கொண்டு போய் தமிழகப்பகுதிகளில் கொட்ட ஆலை நிர்வாகம் லாரிக்காரர்களுக்கு தலா ரூ.60 ஆயிரம் தந்துள்ளது அதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த சம்பவம் நடந்து சில மாதங்களில் திருப்பூர், பல்லடம், மேட்டுப்பாளையம், காரமடை பகுதிகளிலும் இதே மாதிரி ரசாயனக்கழிவு லாரிகள் பிடிபட, அவற்றின் மீதும் வழக்கு தொடரப்பட்டது. 'இனி லாரிகள் மீது மட்டுமல்ல; அவற்றை அனுப்பி வைக்கும் ஆலைகள் மீதும் வழக்கு தொடரப்படும்' என்று தமிழக அதிகாரிகள் எச்சரிக்கையும் விட்டனர்.

அதன் பிறகு கோழிக்கோடு, எர்ணாகுளம், கண்ணூர் போன்ற மாநகராட்சிகள் அங்கு தேங்கும் மருத்துவக் கழிவுகள், மக்காத குப்பைகள் இவற்றை டன்னுக்கு இவ்வளவு என்று ஏலம் விட, அவர்கள் அந்தக் கழிவுகளை லாரிகளில் ஏற்றி உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளில் கொட்டிச் சென்றனர். இதனால் அந்த பகுதி துர்நாற்றத்தில் ஆழ்ந்தது. இதே காலகட்டத்தில் பொள்ளாச்சி பெரிய சந்தை அருகே கேரளா கழிவுகளை ஏற்றி வந்த லாரி ஒன்று மழைச்சேற்றில் சிக்கி நிற்கு அந்த லாரிகளை மடக்கினர் மக்கள். அதில் மருத்துவமனைகளில் பயன்படுத்தி வீசப்பட்ட கையுறைகள், சிறுநீர் பிளாடர்கள், குளுகோஸ் பாட்டில்கள், சிரிஞ்ச் ஊசிகள், அறுவை சிகிச்சையில் அகற்றப்பட்ட மனித உறுப்புகள் எல்லாம் இருக்க பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த சப் கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து டிரைவரையும் கைது செய்தனர்.

அதைத் தொடர்ந்தும் ஆங்காங்கே கேரள கழிவுகள் ஏற்றி வரும் லாரிகள் தமிழகத்தில் பொதுமக்களிடம் சிக்குவதும், அதிகாரிகள் வழக்கு போடுவதும் தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கேரள- தமிழக எல்லையில் உள்ள வேலந்தாவளம் வழியே 21 டெம்போ லாரிகள் மருத்துவக் கழிவுகளை கொட்ட முத்துக்கவுண்டனூர், ரங்கே கவுண்டனூர் கிராமங்களுக்கு வந்தது. அதை பொதுமக்கள் துரத்த அது சொக்கனூர் என்ற கிராமத்தில் ஒரு தோட்டத்திற்குள் நுழைந்து, அங்கு 20 அடி நீள அகலத்திற்கு 15 அடி ஆழத்தில் வெட்டப்பட்ட பள்ளத்திற்குள் கழிவுகளை கொட்டியும், கொட்டாமலும் நின்றன. இவற்றை மடக்கிய பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க அவர்கள் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

காரணம். அந்த தோட்டம் அப்போதைய ஆளுங்கட்சி (திமுக) பிரமுகர் ஒருவருக்கு சொந்தமானது. அவர் கேரள மருத்துவக் கழிவுகளை ஏலம் எடுத்துக் கொண்டு வந்து இங்கே குழிதோண்டி கொட்டி மூடிவைக்கத் திட்டமிட்டிருப்பதும் அம்பலமானது. என் தோட்டத்தில் கழிவை கொட்ட யாரைக்கேட்க வேண்டும் என்று அந்த பிரமுகர் மிரட்ட, உன் தோட்டத்தில் பள்ளம் தோண்டி கழிவுகளை கொட்டினால் எல்லா பகுதிகளிலும் நிலத்தடி நீர்தானே பாழாகும் என்று பொதுமக்கள், விவசாயிகள் போராட்டம் செய்ய வேறு வழியில்லாமல் டிரைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர் அதிகாரிகள். அந்த பிரமுகர் தலைமறைவானார்.

இந்த பெரிய சம்பவத்திற்கு பிறகு தமிழக-கேரள எல்லையோர விவசாயிகள் மிகவும் உஷாராகவே இருந்தனர். அதனால் இத்தகைய மருத்துவக் கழிவுகள் வருவது மட்டுப்பட்டது. என்றாலும் கூட கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக பாலக்காட்டிலிந்து வரும் வாளையாறு, மதுக்கரை, நீலம்பூர் பைபாஸ் சாலைகளில் மருத்துவக்கழிவுகள், பாலிதீன் பைகள் சாலையோரங்களில் மூட்டை, மூட்டையாக இரவோடு இரவாக லாரிக்காரர்கள் போகிற போக்கில் கொட்டிச் செல்வதும் நடந்து வந்தது.

அதன் உச்சபட்சமாகத்தான் இப்போது எட்டிமடையில் ஒரு விவசாயத்தோட்டத்தில் இது நடந்துள்ளது. இதுவரை பிடிபட்ட கேரளக் கழிவுகள் இவ்வளவு பகிரங்கமாக மாதக்கணக்கில் நடந்ததேயில்லை. அதுவும் விவசாயி ஒருவரது தோட்டத்தில் குத்தகைக்கு பிடித்து கொட்டப்பட்டிருப்பது முதன்முறை. இதை செய்தவர்கள் மீது உடனே ஜாமீனில் வெளிவரக்கூடிய வழக்கைத்தான் பதிவு செய்துள்ளது காவல்துறை. அதைத் தாண்டி கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான் இத்தகைய கழிவுகள் தமிழகத்தில் கொட்டுவது தடுக்கப்படும். இல்லாவிட்டால் கோவை மட்டுமல்ல; தமிழகமே கேரள மருத்துவக்கழிவுகளின் குப்பைத் தொட்டியாக மாறி விடும் என்று எச்சரிக்கிறார்கள் பொதுநோக்கர்கள்.

(ஈஸ்வரன், சண்முகம்)

கழிவு லாரியை பிடிப்பவன் மீதுதான் நடவடிக்கை

கேரள மருத்துவக்கழிவு லாரிகளை பிடிக்கும் விஷயத்தில் 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஈடுபட்டு வந்தவர் மதிமுக இளைஞரணி மாநில செயலாளர் வே.ஈஸ்வரன்.

அவரிடம் பேசியதிலிருந்து:

இந்த மருத்துவக் கழிவுகள் கொட்டப்படும் விஷயத்தில் தவறு செய்பவர்களை எப்ஐஆர் போட்டு, கைது செய்து உடனே ஜாமீனில் விடும் அளவுக்குத்தான் தற்போதைய சட்ட வழிமுறைகள் தமிழத்தில் உள்ளன. மறுசுழற்சிக்கு பயன்படுத்தக்கூடிய கழிவுகளை சோதனைச்சாவடிகளில் அனுமதிக்கலாம் என்ற விதிமுறையே தற்போதைய நமது சட்டத்தில் உள்ளது. எனவேதான் சோதனைச்சாவடியிலும் இதை தடுக்காமல் உள்ளே அனுமதிக்கிறார்கள்.

மறுசுழற்சிக்கு பயன்படுத்தக்கூடிய பொருட்களுடன் மறு சுழற்சிக்கு பயன் படுத்த முடியாத கழிவுகளும் சேர்ந்தே வரும் என்பதைப் பற்றி நம் ஆட்சியாளர்களுக்கு யார் புரிய வைப்பது? கேரளத்தில் இந்த கழிவுகளை ஒரு அமைச்சரே முன்னின்று தமிழகத்துக்கு அனுப்புகிறார். இப்படிப்பட்ட சுகாதாரக்கேடான பொருட்களை நம் மாநிலத்திற்குள் அனுமதிக்கலாகாது என்ற தன்மையை எந்த அமைச்சராவது செய்யும் நிலை இங்கே இருக்கிறதா?

ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு கேரள கழிவுகளை ஏற்றி வந்த லாரியை நாங்கள் பிடித்தோம். சுகாதாரக்கேடு விளைவிக்கும் கழிவுகளை ஏற்றி வந்ததாக டிரைவர் மீதும், லாரியை மறித்து கண்ணாடியை உடைத்ததாக எங்கள் மீதும் வழக்கு போட்டார்கள். அந்த லாரி டிரைவர் உடனே அபாரதம் செலுத்தி விட்டு சென்றுவிட்டார். எங்கள் மீது போடப்பட்ட வழக்கு சமீபத்தில்தான் முடிவடைந்து நாங்கள் விடுவிக்கப்பட்டோம். ஆக, இங்கே கழிவு லாரியை பிடிப்பவன் மீதுதான் நடவடிக்கை; கழிவை கொண்டுவருபவன் மீது இல்லை. இந்த நிலை மாற வேண்டும். சுகாதாரக் கேடுகள் விளைவிக்கும் பொருட்களை தமிழகத்திற்குள் கொண்டு வந்தால் கடும் தண்டனை தரக்கூடிய அந்த அளவுக்கு சட்டதிருத்தம் தேவை.

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு தேவை

சிபிஎம் கட்சி சார்பான விவசாயிகள் தொழிலாளர் சங்க மதுக்கரை ஒன்றிய தலைவர் சண்முகம் பேசுகையில், ''இதே மதுக்கரை ஒன்றியத்திற்குட்பட்ட விவசாய நிலங்களில்தான் சமீப காலங்களில் 10 அடி முதல் 20 அடி வரை நிலத்தை தோண்டி தேசிய நெடுஞ்சாலை போட மண் எடுக்க சில விவசாயிகள் அனுமதித்தார்கள். அதில் கோடிக்கணக்கில் பணம் புரண்டது. அரசு புறம்போக்கு நிலங்களில் கூட இந்த விதிமீறல் நடந்திருக்கிறது.

இப்போதும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்ட பாலைவனம்போல் காட்சியளிக்கிறது. அடுத்தது இங்கு ஓடும் வாளையாறு உள்ளிட்ட பல்வேறு ஓடைகளில் பல கிமீ தூரம் குழாய்கள் பதித்து நீர் எடுக்க ஸ்பிரிட் கம்பெனிகள், தனியார் நிறுவனங்களுக்கு அதிகாரிகள் அனுமதி கொடுக்கும் கொடுமையும் நடக்கிறது. அதையெல்லாம் எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறோம்.

இப்போது கேரள கழிவுகளை கொண்டு வந்து குப்பைத் தொட்டிகளாக தங்கள் நிலங்களை குத்தகைக்கு சில விவசாயிகள் விடும் போக்கு ஆரம்பித்துள்ளது. இது எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது. இப்படி நடப்பதால் நம் மண் வளம் கெடும். நிலத்தடி நீர் அதள பாதாளத்திற்குப்போகும். அந்த நீரின் தன்மையும் கெடும். இங்குள்ள காடுகளில் வசிக்கும் வனவிலங்குகள், மேய்ச்சலுக்கு திரியும் பசுமாடுகள், ஆடுகள் எல்லாம் பாதிக்கப்படும். ஒரு கட்டத்தில் விவசாயமும் அழிந்துபோகும். எனவே இந்த விஷயத்தில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு தேவை!'' என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x