Published : 14 Jun 2014 01:43 PM
Last Updated : 14 Jun 2014 01:43 PM

நரசிம்மா, நர்மதா, தேவி: யானைகளுக்கு பெயர் சூட்டினார் முதல்வர் ஜெயலலிதா

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பராமரிக்கப்படும் ஒரு ஆண் யானைக்கு நரசிம்மா என்றும், இரண்டு பெண் யானைகளுக்கு தேவி மற்றும் காவேரி என்றும்; முதுமலை புலிகள் காப்பகத்தில் பராமரிக்கப்படும் ஒரு பெண் யானைக்கு நர்மதா என்றும், இரண்டு ஆண் யானைகளுக்கு பாரதி மற்றும் கிருஷ்ணா என்றும் முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டினார்.

அண்மைக் காலமாக மேற்கு தொடர்ச்சி மலை காப்புக் காடுகளிலிருந்து கர்நாடகா, ஆந்திரா மாநிலம் வழியாக வேலூர் மண்டலம் ஏலகிரி மற்றும் ஜவ்வாது மலைப்பகுதியில் ஆறு காட்டு யானைகள் மலைப் பகுதியை விட்டு இறங்கி மக்கள் வாழும் பகுதியில் நுழைந்து உயிர்களையும், உடைமைகளையும், பயிர்களையும் சேதப்படுத்தி வந்தன.

இந்த யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உத்தரவிட்டதோடு, மீண்டும் காட்டு யானைகள் மக்கள் வாழும் பகுதிகளுக்கு வந்து சேதங்களை ஏற்படுத்தாதவாறு, அவைகளை நேரடியாக வனப்பகுதியில் விடுவதற்கு மாற்றாக தற்போதுள்ள யானைகள் முகாமிற்கு கொண்டு சென்று பராமரிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, ஆனைமலை மற்றும் முதுமலை யானை முகாம்களிலுள்ள ஐந்து கும்கி யானைகளை பயன்படுத்தி, வனப்பகுதிகளிலிருந்து வந்து மக்கள் வாழும் பகுதிகளில் நுழைந்து உயிர்களையும் உடைமைகளையும் சேதப்படுத்திய ஆறு யானைகளை வனத்துறையினர் மயக்க மருந்து செலுத்தி பிடித்தனர். இந்த ஆறு காட்டு யானைகளும் ஆனைமலை மற்றும் முதுமலை முகாம்களுக்கு தலா மூன்று யானைகள் வீதம் கொண்டு செல்லப்பட்டன.

ஆனைமலை மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்தில் தற்போது இந்த யானைகள் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அங்கு அவைகளுக்கு நன்கு பயிற்சி அளிக்கப்பட்டதன் விளைவாக பணியாளர்களின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடப்பதோடு, நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்து வருகின்றன.

முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி பிடிக்கப்பட்டு ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் ஒரு ஆண் யானைக்கு, நரசிம்மா என்றும், இரண்டு பெண் யானைகளுக்கு தேவி மற்றும் காவேரி என்றும்; முதுமலை புலிகள் காப்பகத்தில் பராமரிக்கப்படும் ஒரு பெண் யானைக்கு நர்மதா என்றும், இரண்டு ஆண் யானைகளுக்கு பாரதி மற்றும் கிருஷ்ணா என்றும் முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x