Published : 30 Aug 2022 06:46 PM
Last Updated : 30 Aug 2022 06:46 PM
மதுரை: பல்வேறு நெருக்கடியை சமாளித்தும், தமிழகத்தில் நிறைய திட்டங்களை அரசு கொண்டு வந்துள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கூறினார்.
அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல் ஆத்தூர் செல்ல சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியது: “மத்திய அரசு இலவசங்களுக்கு தடை விதிப்பால் தமிழகத்தில் ரேஷன் கடையில் வழங்கும் இலவச அரிசித் திட்டம் பாதிக்குமோ என்ற சந்தேகம் மக்களுக்கு வேண்டாம். தற்போது, பல்வேறு நெருக்கடிகளை சமாளித்தும் தமிழக மக்களுக்கான நிறையத் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம்.
இதுபோன்ற திட்டங்களால் மதுரை முகமே தற்போது மாறியுள்ளது. மழைநீர் வடிகால் திட்டம் 50 ஆண்டுக்கு முன்னால் ஆரம்பிக்கவில்லை, தற்போது ஆரம்பித்துள்ளோம். மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து தப்பிக்கவே இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து 10 ஆண்டாக கிடப்பில் இருந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறோம்.
இன்னும் ஓரிரு நாட்களில் அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைமுறையிலுள்ள உயர்தர கல்வித் திட்டத்தை தமிழகத்தில் ஏழைகளுக்கு கொண்டு சேர்க்க, பல இடங்களில் தொடங்க இருக்கிறோம். இது மாநகராட்சி பள்ளிகளில் கொண்டு வருவது பெரிய விஷயம்.
பொதுவாக பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் ரேஷன் அரிசி விதிமுறைகளுக்கு உட்படுத்தி எந்த முறையில் செயல்படுத்த வேண்டும் என்பதை உணவுத் துறை அமைச்சர் மேற்கொள்வார்'' என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT