Last Updated : 30 Aug, 2022 05:34 PM

 

Published : 30 Aug 2022 05:34 PM
Last Updated : 30 Aug 2022 05:34 PM

“இனியாவது கூடுதல் பஸ் விடுங்க” - அரசு பேருந்தில் தொங்கியபடி பயணித்து விழுந்த மாணவரும் பின்புலமும்

ஓடும் பேருந்திலிருந்து விழுந்த மாணவர்

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் அருகே அரசு பேருந்தில் படியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர், கீழே விழுந்து லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், அது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் பகுதியில் இருந்து அச்சரப்பாக்கம் வரையில் செல்லும் தடம் எண் 19 என்ற அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பள்ளி மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், சில மாணவர்கள் பள்ளிக்கு பேருந்தின் படிகட்டில் தொங்கியபடி அபாய நிலையில் பயணித்தனர். அப்போது, மேல்மருவத்தூர் அருகே பேருந்து செல்லும்போது படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த 9 வகுப்பு படிக்கும் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவர், கூட்ட நெரிசலில் நிலை தடுமாறி கீழே பேருந்திலிருந்து சாலையில் விழுந்தார். அதிர்ஷ்டவசமாக, மாணவர் கீழே விழும்போது பேருந்தின் சக்கரத்தில் சிக்காமலும் மற்றும் பின்னால் வேறு வாகனங்கள் வராததால், சிறியளவிலான காயங்களுடன் உயிர் தப்பினார். அக்கம் பக்கத்தினர், மாணவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில், மாணவர் பேருந்தில் இருந்து கீழே விழும் காட்சியை, பேருந்தின் பின்னால் வந்த ஒருவர் அவரது செல்போனில் வீடியோ பதிவு செய்திருந்தார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, அப்பகுதி கிராம மக்கள் கூறியது: “செய்யூர் மற்றும் அச்சிறுப்பாக்கம் இடையே காலை மற்றும் மாலையில் தடம் எண் 19 என்ற அரசு பேருந்து ஒன்று மட்டுமே இயக்கப்படுகிறது. இப்பகுதியிலிருந்து, 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பேருந்தில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால், மேற்கண்ட தடம் எண் கொண்ட ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுவதால், பள்ளிக்கு சரியான நேரத்துக்கு செல்ல வேண்டும் என்பதால், பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி உயிரை பணையம் வைத்து மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். மேற்கண்ட சம்பவமும், இவ்வாறுதான் நடைபெற்றுள்ளது. அதிர்ஷ்டவசமாக மாணவன் உயிர்பிழைத்துள்ளார். இக்காட்சியை காணும் பெற்றோர்களின் மனநிலையை அரசு உணர வேண்டும். இனியாவது, பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x