Published : 30 Aug 2022 03:02 PM
Last Updated : 30 Aug 2022 03:02 PM
மதுரை: “பெரியகுளத்தில் தங்கி தனக்கு ஆட்கள் பிடிக்கும் வேலையை ஒபிஎஸ் செய்து வருகிறார். என்ன நடந்தாலும் இறுதி வெற்றி பழனிசாமிக்குதான் கிடைக்கும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரையில் உள்ள கே.கே.நகரில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: "ஜெயலலிதாவின் கனவுகளை எல்லாம் எடப்பாடி பழனிசாமி நனவாக்கியவர். எவ்வளவோ சோதனைகளை சாதனையாக மாற்றியவர். சுய நலமிக்கவர்களிடம் இருந்து அதிமுகவை மீட்டவர். அதிமுக பழனிசாமி தலைமையில் பொது நல பாதையில் பயணித்து வருகிறது. அதிமுகவின் கிளைக் கழகம் முதல் தலைமைக் கழகம் வரை ஒட்டுமொத்த அதிமுகவும், அதிமுக தொண்டர்களும் பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். திமுகவை கொள்கை ரீதியாக பழனிசாமி தலைமையில் அதிமுக எதிர்த்து நிற்கும்.
பழனிசாமிக்கு 99 சதவீத அதிமுகவினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 66 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் 63 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவு அளித்து உள்ளனர், ஒ.பி.எஸ்.ஸுக்கு எத்தனை முறை சொன்னாலும் புரியாததை போல ‘தொண்டர்கள் என்னிடம் உள்ளனர்’ என்று எதுவுமே புரியாத நபரை போல வாய்ப்பாடு பாடி வருகிறார்.
ஓபிஎஸ் பொதுக்குழுவவில் பங்கேற்க முடியாததற்கு காரணம் போக்குவரத்து நெரிசல் என குழந்தைத்தனமான பதிலை சொல்கிறார். எனவே, அவர் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு உண்டான தகுதியை இழந்துவிட்டார். சொந்த வீட்டில் திருடினாலும் திருட்டு திருட்டுதான். அதிமுக அலுவலகம் தொண்டர்களின் சொத்து, அப்படிபட்ட சொத்தை ஒபிஎஸ் திருடி இருக்கிறார்.
பெரியகுளத்தில் தங்கி தனக்கு ஆட்கள் பிடிக்கும் வேலையை ஒபிஎஸ் செய்து வருகிறார். என்ன நடந்தாலும் இறுதி வெற்றி பழனிசாமிக்குதான் கிடைக்கும். ஒபிஎஸ் நிராயுதபாணியாக இருப்பதால் அவ்வப்போது புலம்பி வருகிறார். அதிமுக தலைமை பதவி மீது எனக்கு ஆசையில்லை என ஒபிஎஸ் நாடகப் பேச்சாக பேசி வருகிறார். ஒபிஎஸ்ஸின் நாடகப் பேச்சு மக்களிடம் எடுபடாது. அதிமுகவை வலுப்படுத்த இ.பி.எஸ் எடுத்த நடவடிக்கைகளுக்கு ஒபிஎஸ் முட்டுக்கட்டையாக இருந்தார்,
ஒபிஎஸ் இறுதி அத்தியாயத்தில் இருக்கிறார். இபிஎஸ் பலமாக இருக்கிறார். ஒபிஎஸ் பலவீனமாக இருக்கிறார். ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை வெளியீடுவது சட்ட ரீதியாக நடக்கும். 2001-ல் ஒபிஎஸ் முதல்வர் ஆனது உழைப்புக்கு கிடைத்தது என சொல்கிறார். ஆனால் எதனால் ஒபிஎஸ்ஸுக்கு முதல்வர் பதவி கிடைத்தது என ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு தெரியும்,
திரும்ப திரும்ப ஒபிஎஸ் முதல்வர் ஆனது குறித்த சித்து விளையாட்டு என்ன எனபது யாருக்கும் தெரியவில்லை. சசிகலா, டிடிவி-யை அழைத்ததன் மூலம் ஒபிஎஸ்ஸின் நிலைப்பாட்டு மாற்றத்திற்கு என்ன காரணம் என தெரியவில்லை. எம்எல்ஏ அய்யப்பன் ஒபிஎஸ்ஸிடம் சென்றது தவறான வழி. திருவிழாவில் குழந்தையை மிட்டாயைக் காண்பித்து அழைத்து செல்வது போல எம்எல்ஏ அய்யப்பன் அழைத்து செல்லப்பட்டுள்ளார்,
காலம் வரும். உண்மை நிலவரத்தை ஒபிஎஸ் பக்கம் உள்ளவர்கள் அறிவார்கள். உண்மையான நிலவரத்தை ஒபிஎஸ் புரட்சி பயணம் செல்லும்போதுதான் அறிவார். ஒபிஎஸ்ஸுக்கு ஒரு விதமான பதற்றம் இருக்கத்தான் செய்கிறது. ஒபிஎஸ் புலி வருகிறது என சொல்லி வருகிறார். அது புலியா, பூனையா என பின்னரே தெரிய வரும்" என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT