Published : 30 Aug 2022 12:19 PM
Last Updated : 30 Aug 2022 12:19 PM
சென்னை: "நீட் தேர்வு உயர்த்தும் ஏணியாக இல்லாமல் தடைக்கல்லாக இருக்கிறது என்பதால் எதிர்க்கிறோம். படிப்புதான் தகுதியைத் தீர்மானிக்க வேண்டுமே தவிர தகுதியிருந்தால் தான் படிக்கவே வர வேண்டும் என்று சொல்வது, இந்த நூற்றாண்டின் மாபெரும் அநீதி, இதனால்தான் எதிர்க்கிறோம்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கான மாநாடு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், " தமிழ்நாட்டில் மொத்தம் 22 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இதில் விடுதலைக்கு முன் உருவாக்கப்பட்டவை இரண்டே பல்கலைக்கழகங்கள்தான். சென்னைப் பல்கலைக்கழகம் 1857-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1929-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
1947 முதல் 1967-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், ஒரே ஒரு பல்கலைக்கழகம்தான் உருவாக்கப்பட்டது. அது மதுரை காமராஜர் பல்கலைக்கழகம். மற்ற 19 பல்கலைக்கழகங்களும் 1967-க்குப் பிறகு அதாவது திராவிட அரசுகள் அமைந்த இந்த 50 ஆண்டு காலத்தில் உருவாக்கப்பட்டன. தமிழ்நாடு உயர் கல்வியில் எந்தளவுக்கு உயர்ந்திருக்கிறது என்பதற்கு இதுவே மிகமிக முக்கியச் சான்றாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
1857-ல் தொடங்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகம் மற்ற மாநிலங்களில் பல்கலைக்கழகங்களைத் தொடங்க முன்மாதிரியாக இருக்கிறது. மேலும் தனித்தனி சிறப்புதுறைகளுக்கு பல்கலைக்கழகங்களைக் கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகங்களுக்காக ஆண்டுதோறும் 3 ஆயிரம் கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்கிறது. அத்தகைய சீரான நிதி ஒதுக்கீடுதான் பல்கலைக்கழங்கள் இந்தளவுக்கு சிறப்பாக செயல்பட காரணம். தமிழ்நாடு இந்தியாவில் உயர் கல்வி சிறந்து விளங்கும் மாநிலம் என்பதை அனைவரும் அறிவர்.
இந்தியாவின் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில், 18 நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன. தலை சிறந்த 100 பல்கலைக்கழகத்தில் 21 தமிழகத்தில் உள்ளன. தலைசிறந்த 100 கல்லூரிகளில் 31 தமிழகத்தில் உள்ளன. தலைசிறந்த 100 ஆராய்ச்சி நிறுவனங்களில் 10 தமிழ்நாட்டில் உள்ளது. தலைசிறந்த 200 பொறியியல் கல்லூரிகளில் 35 கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன. தலைசிறந்த 100 மேலாண்மை கல்வி நிறுவனங்களில் 11 தமிழகத்தில் இருக்கிறது. தலைசிறந்த 100 மருத்துவக் கல்வி நிறுவனங்களில் 8 தமிழகத்தில் இருக்கின்றன.கல்வியில் சிறந்த மாநிலமாக நாம் உயர்ந்து நிற்கிறோம். நீதிக்கட்சிக் காலத்தில் கல்விக்காக போட்ட விதைதான் இதற்கெல்லாம் காரணம். ஒருவருக்கு கல்வியை மட்டும் கொடுத்துவிட்டால் மிகப்பெரிய சொத்தாக அது அமைந்துவிடும். அத்தகைய கல்வி சொத்தை தருகின்ற இயக்கமாக எப்போதும் திராவிட இயக்கம் இருந்துள்ளது.
பல்கலைக்கழகங்களை வளர்த்தெடுக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. ஏனென்றால், இது எங்களது முழுப் பொறுப்பு. அதேநேரத்தில், மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு பல்கலைக் கழகங்கள் செயல்பட வேண்டும். பல்கலைக் கழகங்களின் உண்மையான நோக்கம் என்பது அனைவருக்குமான அறிவுத்தளத்தை செம்மைப்படுத்துவது. சமூகநீதியை அடித்தளமாகக் கொண்ட சமுதாயத்தில், பகுத்தறிவைக் கூர்மைப்படுத்துவதாக, நம்முடைய கல்வி நிலையங்கள் செயல்பட வேண்டும். அறிவியல் சிந்தனை கொண்ட சமூகத்தையும், அறிவுப்பூர்வமான மாணவர்களையும், உருவாக்கக் கூடிய கடமையைத்தான் பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டும். நாட்டின் மற்ற மாநிலங்களைவிட நாம் முன்னேற்றம் அடைந்ததற்கும், தனித்துத் தெரிவதற்கும் இத்தகைய கொள்கை விழுமியங்கள்தான் காரணம்.
"மத்திய- மாநில அரசு உறவுகள்" குறித்து ஆராய 2007-ல் நியமிக்கப்பட்ட உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பூஞ்சி தலைமையிலான ஆணையம் அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் எனது தலைமையிலான திமுக அரசு "துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும்" மசோதைவை சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறோம். ஏனென்றால், இது மாநில அரசினுடைய உரிமை தொடர்புடைய பிரச்சினை; மாநிலத்தினுடைய பல்கலைக்கழகக் கல்வியுரிமை தொடர்பான பிரச்சினை; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமை. ஆகவே, மாநில அரசின் கொள்கை முடிவுகளை பிரதிபலிக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும், துணை வேந்தர்களாகிய நீங்கள் எல்லாம் செயல்பட வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
நீட் தேர்வை எதிர்ப்பது ஏன்? பட்டம் வாங்கும் இளைஞர்களை அல்ல, எவரோடும் போட்டியிடும் தகுதி படைத்த இளைஞர்களை தமிழ்நாட்டுக் கல்வி முறையானது உருவாக்கி இருக்கிறது. 'நீட்' தேர்வுக்கு எதிராக நாம் இருக்கிறோம். அந்தத் தேர்வுக்குப் பயந்து அதனை நாம் எதிர்க்கவில்லை. அது உயர்த்தும் ஏணியாக இல்லாமல் தடைக்கல்லாக இருக்கிறது என்பதால் எதிர்க்கிறோம். படிப்புதான் தகுதியைத் தீர்மானிக்க வேண்டுமே தவிர தகுதியிருந்தால் தான் படிக்கவே வர வேண்டும் என்று சொல்வது, இந்த நூற்றாண்டின் மாபெரும் அநீதி. இதனால்தான் எதிர்க்கிறோம்.
கல்வி உரிமையைப் போராடிப் பெற்ற சமூகம் நாம் என்கிற காரணத்தால் எதிர்க்கிறோம்.போராடி சுயமரியாதையை நிலைநிறுத்திய சமூகம், இந்தத் தமிழ்ச்சமூகம் என்பதால் எதிர்க்கிறோம். கல்வியால் முன்னேறுகின்ற சமூகம் நாம் என்பதால் எதிர்க்கிறோம். பின்னால் வரக்கூடிய தீமைகளை கடந்தகால வரலாறுகளின் அடிப்படையில் எடை போட்டு எதிர்க்கிறோம். எந்தப் படிப்பாக இருந்தாலும், அதனை நோக்கி மாணவர்களை ஈர்ப்பதற்காக, நம்முடைய அணுகுமுறைகளும் திட்டமிடுதலும் இருக்க வேண்டும். மாணவர்களை கல்வியிடம் இருந்து அந்நியப்படுத்தும் அத்தனையையும் நாம் எதிர்க்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் நீட் தேர்வை மட்டுமல்ல புதிய தேசியக் கல்விக் கொள்கையையும் நாம் எதிர்க்கிறோம். மாநிலக் கல்விக் கொள்கை வகுக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளதே, அறிவியல் சார்ந்த சமூகமாக தமிழ்ச்சமூகத்தைக் கட்டமைக்க அதற்காகத்தான் அமைத்திருக்கிறோம்.
"To develop the scientific temper" என்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படைக் கடமை. அந்தக் கடமை எனக்கும் உண்டு. பல்கலைக்கழகத் துணை வேந்தர்களான உங்களுக்கும் உண்டு. கல்வியாளர்களான உங்களுக்கும் உண்டு. புதிய புதிய பாடங்களை அறிமுகம் செய்யுங்கள். புதிய புதிய பட்டப்படிப்புகளைக் கொண்டு வாருங்கள்.
மாணவர் சமுதாயத்துக்கு எந்தப் பாடத்தில் ஆர்வம் இருக்கிறதோ, அதனுள் அவர்களைப் பொருத்திக் கொள்ள அனுமதியுங்கள். புதிய பாதைகள் அமைப்பதாக பல்கலைக்கழகங்கள் அமைய வேண்டும். இந்த ஆட்சிக் காலத்தை, உயர்கல்வியின் பொற்காலமாகத் திகழ வைப்பது துணைவேந்தர்களாகிய உங்களின் கடமை. சமத்துவமும் பகுத்தறிவுச் சிந்தனையும் மிக்க சமூகத்தைக் கட்டமைப்பதே கல்வியாளர்களான உங்களுக்கு இருக்கக்கூடிய மாபெரும் கடமை, அது உங்களுக்கு வந்துசேரக்கூடிய மாபெரும் பெருமை. பழமைவாத பிற்போக்குக் கருத்துகளைப் புறந்தள்ளி புதிய அறிவியல் கருத்துகளை ஆக்கப்பூர்வமான, வளமான சிந்தனையை மாணவர்களிடையே வளர்த்து நாட்டுக்கும், எதிர்கால இளைஞர் சமுதாயத்துக்கும், பெருமை சேருங்கள்" என்று அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT