Published : 30 Aug 2022 07:01 AM
Last Updated : 30 Aug 2022 07:01 AM
சென்னை: ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்கங்களை அதிகரிக்கும் விதமாக, ‘ஸ்மார்ட் பாக்ஸர்’ என்ற குத்துச்சண்டை பகுப்பாய்வு மென் பொருளை சென்னை ஐஐடி உருவாக்கி வருகிறது.
2024 ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கங்களை அதிகரிக்கும் நோக்கில், குறிப்பிட்ட சில விளையாட்டுகளை பட்டியலிட்டு, அதில் வெற்றி பெறும் முயற்சியில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதில் வில்வித்தை, குத்துச்சண்டை, ஹாக்கி, தடகளம் உள்ளிட்டவை அடங்கும்.
அந்த வகையில், சென்னை ஐஐடியின் விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான சிறப்பு மையம் ‘ஸ்மார்ட் பாக்ஸர்’ என்ற பகுப்பாய்வு மென்பொருளை உருவாக்கியுள்ளது. கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள இன்ஸ்பயர் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் இந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டு, குத்துச்சண்டை வீரர்களின் செயல்திறன் ஆய்வு செய்யப்படும். இதில் இருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் பகுப்பாய்வு தளத்தில் மாற்றங்கள் செய்து, பயிற்சியாளர்கள், குத்துச்சண்டை வீரர்களுக்கு உதவும் வகையில் இந்த மென்பொருளை திறம்பட பயன்படுத்த முடியும்.
இதுகுறித்து சென்னை ஐஐடி ரசாயன பொறியியல் துறை இணை ஆசிரியரும், விளையாட்டு அறிவியல், பகுப்பாய்வுக்கான சிறப்பு மையத்தின் தலைவருமான பேராசிரியர் ரங்கநாதன் சீனிவாசன் கூறும்போது, “பயிற்சியாளருக்கும், உயர்நிலை விளையாட்டு வீரருக்கும் இடையே செயல்திறனை அடையாளம் காணவும், புரிந்துகொள்ளவும், ஆக்கப்பூர்வமாக மேம்படுத்தவும் இத்தொழில்நுட்பம் பாலமாக செயல்படும்” என்றார்.
இன்ஸ்பயர் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் குத்துச்சண்டைப் பிரிவு இளைஞர் மேம்பாட்டு தலைவர் ஜான் வார்பர்டன் கூறும்போது, “குத்துச்சண்டை வீரரின் செயல்திறனில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பகுப்பாய்வு செய்ய இது உதவியாக இருக்கும். வீரர்களின் பலம், செயல்பாடு நிலைகள், பஞ்ச்கள்,தற்காப்பு திறமைகளில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டிய இடங்கள் எவை என்பதையும் தொழில் நுட்ப அடிப்படையில் எங்களால் எடுத்துரைக்க முடியும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT