Published : 30 Aug 2022 04:27 AM
Last Updated : 30 Aug 2022 04:27 AM

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசர சட்டம் - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

சென்னை: ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான அவசர சட்டம் பிறப்பிக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கைகளை சட்டப்பேரவையில் வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித்துறை செயலர் நா.முருகானந்தம், உள்துறை செயலர் க.பணீந்திர ரெட்டி, பொதுத்துறை செயலர் டி.ஜெகந்நாதன், முதல்வரின் செயலர்கள் டி.உதயசந்திரன், உமாநாத், அனுஜார்ஜ் ஆகியோர் பங்கேற்றனர். மாலை 5.55 மணிக்கு தொடங்கிய கூட்டம் இரவு 7.10 மணி வரை நீடித்தது. இக்கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இரு முக்கிய விசாரணை ஆணையங்களின் அறிக்கைகள் முன்வைக்கப்பட்டன. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி பேரணி நடத்திய மக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கான காரணங்கள், சூழ்நிலைகள் குறித்தும், தூத்துக்குடியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிகழ்ந்த பிந்தைய நிகழ்வுகள் குறித்தும் விசாரணை செய்வதற்காக நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தால் கடந்த மே 18-ம் தேதி அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. அந்த அறிக்கை குறித்து அமைச்சரவை விரிவாக விவாதித்தது.

ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 17 காவல்துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 4 அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு, அவை துறைகளின் பரிசீலனையில் உள்ளதை அமைச்சரவை கவனத்தில் கொண்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறைகள் தகுந்த நடவடிக்கை மேற்கொண்ட பின்னர், அதற்கான விவர அறிக்கையுடன், ஆணையத்தின் இறுதி அறிக்கையை சட்டப்பேரவையில் வைக்க அமைச்சரவை முடிவெடுத்துள்ளது

ஜெயலலிதா மரணம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு செப்.22-ம் தேதி மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழல்கள் குறித்தும், அதைத் தொடர்ந்து அதே ஆண்டு டிச.5-ம் தேதி அவரது மரணம் வரையிலும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாகவும் விசாரணை செய்வதற்காக நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தால் கடந்த ஆக.27-ம் தேதி அரசுக்கு அளிக்கப்பட்ட அறிக்கையும் அமைச்சரவையின் முன் வைக்கப்பட்டது. இந்த அறிக்கை குறித்து அமைச்சரவை விரிவாக விவாதித்தது. விசாரணை ஆணையத்தின் அறிக்கையை அமைச்சரவை பரிசீலித்து, அதில் தெரிவிக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலா, சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அப்போதைய தலைமைச் செயலர் ராமமோகன் ராவ் உள்ளிட்டோர் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அந்த பரிந்துரைகள் மீது சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவும், அதன்பின், அதற்கான விவர அறிக்கையுடன், ஆணையத்தின் அறிக்கையை, பேரவையில் வைக்கவும் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சில இணையதள விளையாட்டுகளால் ஏற்படும் சமுதாயக்
கேடுகள் குறித்தும் அதுதொடர்பாக தடைச் சட்டம் கொண்டுவருவது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இத்தகைய தடைச் சட்டங்கள் குறித்து நீதிமன்றங்கள் தெரிவித்துள்ள கருத்துகளின் அடிப்படையிலும், பொதுமக்கள் மற்றும் வல்லுநர்களிடம் இருந்து வரப்பெற்றுள்ள ஆலோசனைகளை கருத்தில் கொண்டும், இதுபோன்ற விளையாட்டுகளை தடை செய்வது குறித்த சட்ட வரைவை வகுப்பது குறித்தும், அதில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த வகை விளையாட்டுகளை தடை செய்வதற்காக அவசரச் சட்டம் கொண்டுவரப்பட உள்ள விவரமும் அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அரசு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x