Published : 29 Aug 2022 05:30 PM
Last Updated : 29 Aug 2022 05:30 PM
சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கைதான பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் மதுரையில் தங்கியிருக்கவும், இரு ஆசிரியர்கள் சேலத்தில் தங்கியிருந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட நிபந்தனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்துவந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் மரணமடைந்தார். இது தொடர்பாக மாணவியின் தாய் செல்வி கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்தப் புகாரின் பேரில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் வேதியியல் ஆசிரியர் ஹரிப்ரியா, கணித ஆசிரியர் கிருத்திகா ஆகிய 5 பேரை கைது செய்த போலீஸார், சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில்,பள்ளியின் தாளாளார், செயலாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் உள்பட 5 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி அண்மையில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பிறப்பித்துள்ள தீர்ப்பு விவரங்கள்:
> கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கைதான பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் மதுரையில் தங்கியிருக்க வேண்டும். இரண்டு ஆசிரியர்களும் சேலத்தில் தங்கியிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார். ஆசிரியர்கள் கிருத்திகா, ஹரிப்பிரியா ஆகியோர் 4 வாரங்களுக்கு சேலம் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். பின்னர் 4 வாரங்களுக்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிபிசிஐடி போலீசார் முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். விசாரணைக்கு தேவைப்படும் போது ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார்.
> மாணவியை நன்கு படிக்க வேண்டும் என்று கூறியதற்காக, ஆசிரியர்கள் தற்போது சிறைவாசம் அனுபவிப்பது துரதிஷ்டவசமானது. பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டிய துரதிஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். மாணவியின் தற்கொலை குறிப்பில் கூட, ஆசிரியர்கள் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக எந்த ஆதாரங்களும் இல்லை. நன்றாக படிக்க வேண்டும் என்று மாணாக்கருக்கு ஆசிரியர்கள் உத்தரவிடுவது என்பது ஆசிரியப் பணியின் ஓர் அங்கம். எனவே , மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக மனுதாரர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொருந்தாது.
> படிப்பில் சிக்கல்களை சந்தித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு நீதிமன்றம் வருத்தத்தை பதிவு செய்கிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT