Published : 29 Aug 2022 05:00 PM
Last Updated : 29 Aug 2022 05:00 PM
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே கனியமூர் தனியார் பள்ளக் கலவரத்தில் ஈடுபட்ட 4 பேரை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 182 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் ஜூலை 17-ம் தேதி நடைபெற்ற கலவரத்தில் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து சின்னசேலம் காவல் நிலையத்தில் 15 பிரிவின் கீழ் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கலவரம் தொடர்பான வழக்கினை சிறப்பு புலனாய்வுக் குழு போலீஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில், பல்வேறு வீடியோ பதிவுகள், சமூக வலைதள பதிவுகள் என ஆய்வு செய்த சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் இதுவரை 359 பேரை கைது செய்துள்ளனர். இதுவரை 182 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு, 202 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, கலவரத்தில் ஈடுபட்ட புதுபள்ளச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன், கள்ளக்குறிச்சி வசந்தன், சின்னசேலம் பூவரசன், பண்ருட்டி அடுத்த சிறுகிராமம் சஞ்சீவ் ஆகிய நான்கு பேரும், கலவரத்தின்போது போலீஸ் வாகனத்தை தாக்கி, தீ வைத்தது, போலீஸார் மீது கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது, பள்ளியின் சொத்துக்களை சேதப்படுத்தி, மாடுகளைத் திருடி சென்றது உள்ளிட்ட கடுமையான குற்றம் செய்ததாக கூறப்படுகிறது.
எனவே, இவர்கள் 4 பேரையும் ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க சிறப்புப் புலனாய்வுக்குழு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவனுக்கு பரிந்துரை செய்ததைத் தொடர்ந்து, பகலவன், மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமாருக்கு பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT