Last Updated : 29 Aug, 2022 01:29 PM

 

Published : 29 Aug 2022 01:29 PM
Last Updated : 29 Aug 2022 01:29 PM

விண்ணப்பித்த 15,000 முதியோருக்கும் அடுத்தமாதம் முதல் உதவித் தொகை; 100 வயது கடந்தோருக்கு ரூ.7000: முதல்வர் ரங்கசாமி

முதல்வர் ரங்கசாமி | கோப்புப் படம்

புதுச்சேரி: முதியோர் உதவித் தொகைக்கு விண்ணப்பித்துள்ள 15 ஆயிரம் பேருக்கும் அடுத்த மாதம் முதல் உதவித்தொகை தரப்படும், 100 வயதை கடந்தோருக்கு இனி ரூ. 7 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்

புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு: "எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறுகையில்: "ஏழைப் பெண்கள், விதவைப் பெண்கள் திருமண உதவித்தொகை பெற காலக்கெடு 30 நாட்கள் கொடுத்திருப்பதை 90 நாட்களாக மாற்றிக்கொடுக்க அரசு முன்வருமா? முதியோர் உதவித்தொகை பெற பிறந்த பதிவு இல்லாதவர்கள், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன்கார்டு ஆகியவற்றில் ஏதாவது இரண்டை மட்டும் ஆதாரமாக வைத்துப் பெற அரசு ஆவண செய்யுமா?

ஈமச்சட ங்கு காலக்கெடு 90 நாட்கள் என இருப்பதால் பயனாளிகள் சிரமத்தை உணர்ந்து காலக்கெடுவை 6 மாதங்களாக நீட்டிக்க அரசு முன்வருமா? விடுபட்ட முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், முதிர்கன்னி, திருநங்கைகள் உதவித்தொகை எப்போது வழங்கப்படும்? இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா?" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ரங்கசாமி கூறுகையில்: "ஏழைப் பெண்கள் திருமண நிதியுதவி பெற 30 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். ஆனாலும் திருமணம் முடிந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பம் சமர்பிக்க மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அவகாசம் அளிக்கிறது. திட்ட வழிகாட்டுதலின்படி முதியோர் உதவித்தொகை பெற பிறப்புச் சான்றிதழ் சமர்பிக்க வேண்டும்.

இறந்த முதியோர் ஈமச்சடங்கு நிதியுதவி பெற 60 நாட்களுக்குள் விண்ணப்பம் சமர்பிக்க வேண்டும். திருமண உதவித்தொகை பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளது. 2 ஆயிரம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படும்.

உதவித்தொகை கோரி முதியோர் விண்ணப்பங்கள் 15 ஆயிரம் உள்ளன. அவர்களுக்கு அடுத்த மாதம் முதல் உதவித்தொகை தரப்படும். 100 வயது முதிர்ந்த முதியோருக்கு ரூ.7 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். 90 முதல் 100 வயது வரை உள்ளவர்களுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.3 ஆயிரத்து 500 உதவித்தொகை ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்." என்று முதல்வர் ரங்கசாமி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x