Published : 29 Aug 2022 06:06 AM
Last Updated : 29 Aug 2022 06:06 AM
சென்னை: போக்குவரத்து கழகங்களில் காலி பணியிடங்கள் குறித்த கணக்கீடு நடைபெறுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நிதி நெருக்கடி காரணமாகவே போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 4 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.
பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது மட்டுமின்றி, மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்களையும் தனியாருக்கு வழங்கும் நெருக்கடியான சூழலை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இந்த நிலையிலும் தமிழக அரசுக்கு சொந்தமான போக்குவரத்து கழகங்கள் காக்கப்பட வேண்டும் என்ற வகையில் முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். போக்குவரத்து கழகங்களில் காலி பணியிடங்கள் குறித்த கணக்கீடு நடைபெறுகிறது.
ஆம்னி பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். மக்கள் நலன்கருதி பயண கட்டணத்தை உயர்த்தவில்லை. விழாக்காலங்களில் போதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் போதிய பயணிகள் வரவில்லை. அரசு பேருந்துகளை மக்கள் அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது தொமுச பேரவை பொதுச் செயலாளர் எம்.சண்முகம் எம்.பி., பொருளாளர் கி.நடராசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT