Published : 29 Aug 2022 07:14 AM
Last Updated : 29 Aug 2022 07:14 AM
திருச்சி: திமுகவுடன் கைகோத்துக் கொண்டுஅதிமுகவை அழிக்க நினைப்பவர்களுக்கு, தக்க பாடம் கற்பிக்கவேண்டும் என திருச்சியில் நேற்றுநடைபெற்ற பொதுக் கூட்டத்தில்முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசினார்.
சென்னையில் இருந்து விமான மூலம் நேற்று திருச்சி வந்த பழனிசாமிக்கு, விமான நிலைய வளாகத்தில் அதிமுக திருச்சி மாவட்டச் செயலாளர்கள் ப.குமார் (தெற்கு), மு.பரஞ்சோதி (வடக்கு) ஆகியோர் தலைமையில் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். அப்போது, கிரேன் மூலம் பழனிசாமிக்கு ராட்சத மாலை அணிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, வயர்லெஸ் சாலையில் நடைபெற்ற வரவேற்பு பொதுக் கூட்டத்தில் பழனிசாமி பேசியது:
திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 15 மாதங்கள் ஆகியும், இதுவரை எந்தப் புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அதிமுக ஆட்சியின்போது கொண்டு வந்ததிட்டங்களின் முடிவுற்ற பணிகளையே தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து வருகிறார்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சிந்தாமல், சிதறாமல் சிலருக்கு ‘துட்டு' செல்கிறது. இதுதான் அவர்கள் செய்த சாதனை. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ரூ.80 கோடியில் பேனா சிலை வைக்க வேண்டுமா? அந்தப் பணத்தில் தமிழகத்தில் உள்ள ஆறரை கோடி மக்களுக்கும் பேனா வாங்கிக் கொடுத்துவிட முடியும். வேண்டுமானால் ஒரு கோடி ரூபாயில் பேனா சிலை வையுங்கள்.
திமுகவுடன் சிலர் கைகோத்துக்கொண்டு தற்போது அதிமுகவில் பிளவு ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அந்தக் கனவு ஒருபோதும் நிறைவேறாது. ஓ.பன்னீர்செல்வம் இடையில் கட்சியிலிருந்து பிரிந்துசென்றபோது, 10 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள், 11 எம்எல்ஏக்கள்தான் அவருடன் இருந்தனர். ஆனாலும், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்பியதால் மீண்டும் அவரை கட்சியில் இணைத்தோம். ஆனால், இன்று மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாகிவிட்டது.
அதிமுக அரசைக் காப்பாற்றியதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். நான் முதல்வராக இருந்தபோது, சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அதிமுக அரசுக்கு எதிராக ஓட்டுப்போட்ட ஓ.பன்னீர்செல்வம், எப்படிவிசுவாசமாக இருந்திருக்க முடியும்? வெளியே சென்றவரை அழைத்து வந்து துணை முதல்வர் பதவி கொடுத்து அழகு பார்த்தோம். அந்த நன்றியைக்கூட மறந்துவிட்டார். இப்போது அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் எனக் கூறுகிறார்.
குண்டர்களுடன் பேரணியாகச் சென்று எம்ஜிஆர் மாளிகை கதவுகளை உடைத்து, முக்கிய ஆவணங்களை திருடிச் சென்றுள்ளனர். அவருடன் எப்படி இணைய முடியும்? திமுகவுடன் கைகோத்துக் கொண்டு அதிமுகவை அழிக்க நினைப்பவர்களுக்கு, நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து தக்க பாடம் கற்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், முன்னாள் எம்.பி டி.ரத்தினவேல் உட்பட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT