Published : 29 Aug 2022 04:40 AM
Last Updated : 29 Aug 2022 04:40 AM
திருப்பூர் மாவட்டம் மூலனூர், தாராபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் தோட்டக்கலைப் பயிராக ‘செங்காந்தள்’ என்னும்கண்வலி விதை சாகுபடி, சுமார் 6,000ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டு வருகிறது.தற்போது மூலனூர், தாராபுரம் வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஆடி மாதமே கண்வலி விதை விதைப்புப் பணியில் விவசாயிகள் ஈடுபடுவர்.
ஆனால் நடப்பாண்டில் கண்வலி விவசாயத்தில் பெரிதாகவிவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. இது குறித்து தமிழ்நாடு கண்வலி விதை உற்பத்தியாளர்கள் சங்கஒருங்கிணைப்பாளர் ப.லிங்கசாமி ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:
தமிழகத்தில் திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, நாகை மற்றும் நாமக்கல் என 12 மாவட்டங்களில் மட்டும் கண்வலி கிழங்கு விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மருத்துவப் பயன் நிறைந்த, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய தரத்தில் உள்ள கண்வலிகிழங்கின் விதைகள் இங்கு உற்பத்திசெய்யப்பட்டு வருகின்றன.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதன் விதைரூ.3,700 வரை விற்பனையானது. தற்போது ரூ.1,200-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் பலரும், நல்ல விலை கிடைக்கும் நம்பிக்கையோடு, இருப்பு வைத்துக்கொண்டு காத்திருக்கிறார்கள். பொதுவாகவே இந்த வகை விதைகள் 2 அல்லது 3 ஆண்டுகள் தாங்கும் திறன் கொண்டவை.
அதேபோல் கிலோ ரூ. 400-க்கு விற்கப்பட்ட கண்வலி கிழங்கு தற்போது ரூ.50- ரூ.60 வரை மட்டுமே விற்பனையாகிறது.
இதனால் கண்வலி சாகுபடி ஆர்வம் ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது. வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து செயற்கையான விலை குறைப்பை ஏற்படுத்தியதால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்க நேர்ந்துள்ளது. ஏக்கருக்கு ரூ. 4 லட்சம்முதல் ரூ. 5லட்சம் வரை விவசாயிகள் செலவிட்டு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் சுமார் 5 ஆயிரம்ஹெக்டேருக்குமேல் கண்வலி விதையை விவசாயிகள் விதைத்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கும் பட்சத்தில் விவசாயிகளின் வாழ்வு செழிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கண்வலி விதை விவசாயிகள்சங்க முதன்மை ஒருங்கிணைப்பாளர் பழ.ரகுபதி கூறியதாவது:
அலோபதி உள்ளிட்ட மருத்துவத்தில், மருந்துகள் தயாரிக்க முக்கியமூலப்பொருளாக கண்வலி கிழங்குஉள்ளது. கண்வலி செடி என்றழைக்கப்படும் செங்காந்தள் சாகுபடியை தமிழக அரசு அங்கீகரிக்கப்பட்ட பயிராக அறிவித்து, குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
செங்காந்தளை மருத்துவக் குணம் கொண்ட தாவரப் பட்டியலில் கடந்த 2020-ம் ஆண்டு மத்தியஅரசு கொண்டு வந்தது. இதுவரை கண்வலி செடியை அங்கீகரிக்கப்பட்ட பயிராக தமிழக அரசு அறிவிக்கவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, செங்காந்தளை அங்கீகரிக்கப்பட்ட பயிராக அறிவிக்க வேண்டும்.
வகைப்படுத்தப்பட்ட பட்டியலில் இதை சேர்க்காததால் பொருளீட்டுக்கடன் பெறுவதில் விவசாயிகள் பெரும் இன்னல்களை சந்திக்கின்றனர். போதிய விலை இல்லாததால் கண்வலி கிழங்கையும், விதையையும் பல டன் இருப்பு வைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் தோட்டக்கலைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் அரசு உரிய நடவடிக்கை எடுத்து, விவசாயிகளின் பல ஆண்டு துயரத்துக்கு முடிவு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT