Last Updated : 29 Aug, 2022 06:23 AM

 

Published : 29 Aug 2022 06:23 AM
Last Updated : 29 Aug 2022 06:23 AM

மீனவர் விபத்து காப்புறுதி திட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்குவதில் காலதாமதம்: 5 ஆண்டுகளாக விண்ணப்பித்து காத்திருக்கும் அவலம்

சென்னை: தமிழகம் முழுவதும் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விசைப்படகு, ஃபைபர் படகு உள்ளிட்டவற்றின் மூலம் மீன்பிடிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு, மீன்பிடிக்க கடலுக்கு செல்லும்போது எதிர்பாராத விதமாக விபத்துகளில் சிக்கி உயிரிழப்பது, காயமடைவது உள்ளிட்டவை ஏற்பட்டு வருகின்றன. எனவே, மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு மீனவர் விபத்துகாப்புறுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விபத்தில் இறந்த மீனவருக்கு ரூ.5 லட்சம், காயமடைந்த மீனவருக்கு ரூ.2.50 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட வேண்டும்.

ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக மிகவும் சொற்ப எண்ணிக்கையிலேயே நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, தகவல் பெறும் உரிமை சட்டத்தில் தென்னிந்திய மீனவர் நல சங்கத் தலைவர் கு.பாரதி தகவல் கேட்டுள்ளார்.

அதற்கு, கடந்த 2018-ம் ஆண்டு 87, 2019-ம் ஆண்டு 72, 2020-ம் ஆண்டு 1, 2021-ம் ஆண்டு 2, 2022-ம் ஆண்டு 6 என கடந்த 5 ஆண்டுகளில் 168 மீனவர்களின் குடும்பத்தினருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக மீன்வளத் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் செய்வதியறியாது தவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக கு.பாரதியிடம் கேட்டபோது, “2018-ம் ஆண்டு முதல் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் வரை 5 ஆண்டுகளில் மீனவர் விபத்து காப்புறுதி திட்டத்தின் கீழ் 514 விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை 168 மீனவர்களின் குடும்பத்தினருக்குத்தான் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

இதனால், நிவாரணம் கிடைக்காத மீனவர்கள் குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். விண்ணப்பத்தின் நிலையைஅறிய மீன்வளத் துறை அலுவலகத்துக்கு பலமுறை அலைந்தும் அதிகாரிகள் முறையான பதிலை தெரிவிக்காமல் அலைக்கழித்து வருகின்றனர்.

எனவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதுதொடர்பாக, மீன்வளத் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “மீனவர் காப்புறுதி திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து காத்திருக்கும் மீனவர்களின் குடும்பங்களின் விவரங்களை சேகரித்து சீனியாரிட்டி அடிப்படையில் நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, விரைவில் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x