Published : 06 Oct 2016 10:13 AM
Last Updated : 06 Oct 2016 10:13 AM

உள்ளாட்சி 9: இனிதே வரவேற்கிறது இலவச வை-ஃபை கிராமம்!- சோலார் தொழில்நுட்பம், பாதாளச்சாக்கடை... அசத்தும் நவீன பஞ்சாயத்து!

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் வடமதுரை அருகே சட்டென்று உள்வாங்குகிறது ஒரு சிறு சாலை. தடாகம் அணை மற்றும் வரதபாளையம் வனப் பகுதிக்கு செல்லும் வழி அது. எனது அலைபேசியில் ஏதோ சிக்கல். கடந்த ஒரு மணி நேரமாக இணையம் இயங்கவில்லை. கிராமத்தை நெருங்கு கிறோம். திடீரென உயிர்ப் பெற்று தொடர் ஒலிகளை எழுப்புகிறது அலைபேசி. அதில் இணைய அலைவரிசை கோபுரம் நிமிர்ந்து நிற்கிறது. நிமிர்ந்துப் பார்த்தோம். ‘இலவச WI-FI’ ஊராட்சி குருடம்பாளையம் நம்மை இனிதே வரவேற்றது!

இணையம் இலவசம்!

கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையான குருடி மலை அடிவாரத்தில் இருக் கிறது குருடம்பாளையம் கிராமப் பஞ்சாயத்து. அங்குதான் இந்த ஆச்சர்யம். தமிழகத்தில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் ஒரு கிராமம் முழுவதும் வை-ஃபை இணைய வசதி செய்யப்பட்ட முதல் கிராமம் இது. அனைவருக்கும் அனுமதி இலவசம். பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள், தொழில் முனைவோருக்கு முன்னுரிமை. தினசரி ஒருவர் இரண்டு மணி நேரம் வரை இணைய சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இணையம் குறித்து மக்களுக்கு பயிற்சி அளிக்க பயிற்சியாளரும் உண்டு. மக்களுக்கு மின்னஞ்சல் முகவரி உருவாக்கித் தருகிறார் கள். முகநூல், ட்விட்டர் பக்கம் தொடங்க வேண்டுமா? அதுவும் உண்டு.

“இணைய சேவையின் நோக்கம் முகநூல், ட்விட்டர் மட்டுமில்லீங்க... நம்ம கிராமத்து ஜனங்களை இப்படிதான் வர வைக்கணுமுங்க. இல்லைன்னா புரியலன்னு சொல்லிடுவாங்க. இந்த இணைய சேவையின் நோக்கமே கிராம மக்கள் ஒவ்வொருத்தரும் இணைய மேலாண்மை நிர்வாகத்தைத் தெரிஞ்சிகோணுங்கிறதுதான். ஆந்திரம், குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்கள் இதில் கவனம் செலுத்தி மக்கள் குறைகளைத் தீர்த்துட்டு வருதுங்க. நம் கிராமத்து ஜனங்க ஒரு ஆதார் அட்டை வாங்கணும்னாலும் கூட அரசு அலுவலங்கள்ல கால் கடுக்க காத்திட்டுருக்கணுமுங்க. பலருக்கு வாக்காளர் அடையாள அட்டை வாங்கத் தெரியல. குடும்ப அட்டை வாங்கத் தெரியல. பிறப்புச் சான்றிதழ், வருவாய் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் விண்ணப்பிக்கத் தெரியலீங்க. பாஸ்போர்ட், விசா, பட்டா, சிட்டா, பெயர் மாற்றம் எதுவும் கிராம மக்களுக்குத் தெரியாதுங்க. அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் இடைத் தரகர்களும்தானுங்க. அவங்களும் போற இடமெல்லாம் காசைப் பிடுங்குறாங்க.

ஆனா, இன்னைக்கு தமிழகத்தின் அரசு துறைகள்ல இவ்வளவு அலைச்சல் தேவையில் லீங்க. நிறைய கணினிமயமாக்கிட்டாங்க. பெரும்பாலும் நேரில் செல்ல வேண்டாம். ரொம்ப அவசியமுன்னா ரெண்டு தடவை போலாம். மத்தது எல்லாம் இணைய சேவையிலேயே வாங்கலாம். ஆதார் அட்டை வாங்கலாம். திருத்தம் செய்யலாம். வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம். பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பிக்கலாம். இதை எல்லாம் எங்க கிராமத்து ஜனங்களுக்கு கத்துத் தர்றதுதான் இந்த வை-ஃபை திட்டத் தின் நோக்கமுங்க. அதுவுமில்லாம எங்க பஞ்சாயத்துக்குள்ள மட்டும் 7 ஆயிரம் மாண வர்கள் பள்ளி, கல்லூரிகள்ல படிக்கிறாங்க. புராஜெக்ட் வேலை, பொது அறிவுன்னு இணைய வசதி அவங்களுக்குத் தேவைப் படுது” கொங்குத் தமிழில் கணினி கற்பிக்கிறார் பஞ்சாயத்து தலைவர் ரவி.

கலக்கப் போகுது காபி ஷாப்!

இணையம் மட்டுமல்ல... கிராமப் பஞ் சாயத்து சார்பில் அழகான காபி ஷாப் அமைக்கப் பட்டுள்ளது. பசுமையான தோட்டத்தில் குடில்கள் அமைக்கப்பட்டு அழகிய மேஜைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனை அமைத்து முடித்தபோது உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டதால் நாம் சென்ற நேரம் காபி அருந்த முடியவில்லை.

“அதனால என்னங்க நம்ம வீட்டுல ஜம்முன்னு காப்பித் தண்ணி குடிக்கலாமுங்க. நம்ம கிராமத்துல இந்தத் தலைமுறை இளைஞர்கள் கோயமுத்தூர் நகரத்துக்குள்ள போய் மால்கள்ல ஐஸ் காபி, பீட்ஸா, பர்கர் சாப்பிட்டு வர்றாங்க. ஏன் நகரத்துலதான் காபி ஷாப் இருக்குணுமா? அதான் இங்கேயே கொண்டாந்துட்டோம். இங்கேயும் காபி கிடைக்கும். பனை வெல்லம் ஐஸ் காபி, பனை வெல்லம் சுக்குக் காப்பி, அதிமதுரம் காபி, திப்பிலி காப்பி, சித்தரத்தைக் காபின்னு விதவிதமா திட்டமிட்டுருக்கோமுங்க. சிறுதானியங்கள்ல செய்யப்பட்ட பீட்ஸா, பர்கரு கிடைக்குமுங்க. தேர்தல் முடிஞ்சு வந்துப் பாருங்க ஜோரா இருக்குமுங்க” உற்சாகமாகப் பேசுகிறார் ரவி.

கிராமத்தின் மொத்த வாக்காளர்கள் 33 ஆயிரம் பேர். அனைவரின் அலைபேசி எண்க ளும் கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்தின் கணினியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. தினமும் அதிகாலை அந்த எண்களுக்கு அழகுத் தமிழில் குறுந்தகவலாக வந்து விழுகின்றன காந்தி, நேரு உள்ளிட்ட தலைவர்களின் பொன்மொழிகள். கிராம சபைக் கூட்டம், போலியோ சொட்டு மருந்து முகாம், மருத்துவ முகாம், ஆதார் அட்டை சிறப்பு முகாம், வாக்காளர் அட்டை சிறப்பு முகாம், கோயில் திருவிழா, குப்பை வண்டி வரும் நேரம், கோவை நகரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலைத் தகவல்கள் ஆகியவை குறுந்தகவல்களாக அனுப்பப்படுகின்றன. குறிப்பாக யானைகள் வரும் தகவல். குருடி மலை அடிவாரத்தில் அமைந்திருப்பதால் வனத்தில் இருந்து யானைகள் அடிக்கடி ஊருக்குள் வந்துவிடும். அப்படி வராமல் இருக்க மலை மீது வனத்துக்குள்ளேயே மூன்று இடங்களில் பஞ்சாயத்து சார்பில் தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டிருக்கின்றன. அப்படியும் மீறி யானைகள் ஊர் எல்லையை நெருங்கினால் உடனடியாக மக்களுக்கு எச்சரிக்கை குறுந்தகவல் அனுப்பப்படுகிறது.

கிராமத்துக்குள் ஒரு நடுநிலைப் பள்ளி மற்றும் நான்கு ஆரம்பப் பள்ளிகள் இருக்கின்றன. அத்தனையும் அசத்தல் ரகம். குறிப்பாக, தொப்பம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி சுகாதாரத்தில் ஜொலிக்கிறது. பஞ்சாயத்து சார்பில் அழகிய வண்ணங்களில் பள்ளிக்கு பெயிண்ட் அடித்து சுத்தமாக வைத்திருக்கிறார்கள். உயரமான சுற்றுச்சுவரை கட்டி அதன் மீது வேலி போடப்பட்டுள்ளது. கணனிகள் வாங்கித் தரப்பட்டுள்ளது. கழிப்பறைகள் டைல்ஸ் போடப்பட்டு பளிச் என்று இருக்கின்றன. பள்ளியின் மேல் நிலைத் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குறைந்தால் அல்லது நிறைந்தால் தானாக இயங்குகிறது தானியங்கி மோட்டார். ஏழை மாணவர்களுக்கு தனியாரிடம் ஸ்பான்சர் வாங்கி விளையாட்டுத் துறைகளில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதோ இன்னும் இரண்டொரு நாட்களில் சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் கலந்துக்கொள்ள தாய்லாந்து செல்லவிருக்கிறார் இந்த ஊர் மாணவர் நித்திரன்.

ஜொலிக்குது சோலார்!

இன்று தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கிராமப் பஞ்சாயத்துகள் மின் வாரியத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் மின் கட்டணம் நிலுவை வைத்திருக்கின்றன. மின்வாரியத்துக்கு பெரும் சுமை இது. ஆனால், பைசா பாக்கியில்லாமல் மின் கட்டணம் கட்டியதுடன், கோவை மாநகராட்சிக்கு சாலை விளக்குகள் அமைத்துக் கொடுத்திருக்கிறது குருடம்பாளையம் பஞ்சாயத்து. கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் 128 சோலார் மின் விளக்குகள் பொன்மொழி வாசகங்களுடன் ஜொலிக்கின்றன. கிராமத்துக்குள் 200 சோலார் தெருவிளக்குகள் ஒளிர்கின்றன. இதன் மூலம் மாதம் மூன்று லட்சம் ரூபாய் சேமிக்கிறார்கள்.

கிராமத்துக்குள் திறந்தவெளி சாக்கடை கிடையாது. அதனால் கொசுக்களும் கிடையாது. பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த நகரங்களே திணறும்போது பஞ்சாயத்துக்குள் மினி பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் இயற்கை சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை அமைத்து மலத் தொட்டி நீங்கலான கழிவு நீர் அதில் வெளியேற்றப்படுகிறது. அவை நிலத்தடி குழாய்கள் மூலம் ஐந்து இடங்களில் வந்துச் சேர்கிறது. அங்கு மணல், கரித்துண்டுகள், கூழாங்கற்கள் உள்ளிட்ட ஐந்து அடுக்கு சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு மிகப் பெரிய குழாய்கள் வழியாக நிலத்தடியில் செலுத்தப்படுகிறது. பாதாள சாக்கடைத் திட்டத்துடன் கூடிய கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டல் திட்டம் இது!

குருடம்பாளையம் அதி நவீன கிராமம் மட்டுமல்ல... அதற்கு இன்னொரு முகமும் இருக்கிறது. காந்தி விரும்பிய முகம் அது!

- பயணம் தொடரும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x