Published : 15 Oct 2016 09:13 AM
Last Updated : 15 Oct 2016 09:13 AM
முதல்வர் உடல்நலம் குறித்து ஃபேஸ்புக்கில் வதந்தி பரப்பிய 100 பேர் பட்டியலை சைபர் கிரைம் போலீஸார் தயாரித்துள்ளனர். அதில் சிலர் கைது செய்யப்பட்டனர். வதந்தி பரப்பிய தமிழச்சியை பிடிக்க சைபர் கிரைம் போலீஸார் விரைவில் பிரான்ஸ் செல்ல உள்ளனர்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர் சிகிச்சையால் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அவ்வப் போது தெரிவித்து வருகிறது. இதற்கிடையில், அவரது உடல் நலம் குறித்து ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.
முதல்வர் உடல்நலம் குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல் துறை எச்சரித்தது. ஆனாலும் வதந்தி குறையவில்லை. சென்னை காவல் ஆணையர் ஜார்ஜிடம் அதிமுக தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராமச்சந்திரன் கடந்த 4-ம் தேதி புகார் அளித்தார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தின் ஃபேஸ்புக் முகவரி மூலமாகவும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, சைபர் கிரைம் போலீஸார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். அவதூறு பரப்பியவர்களை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் செந்தில் குமார், கூடுதல் துணை ஆணையர் வெங்கடாசலபதி, உதவி ஆணையர் கனகராஜ், இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், அன்பரசன், மெல்வின், கிளாட்சன் ஜோஸ் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட் டன. தனிப்படை போலீஸார் தமிழகத்தின் 32 மாவட்டங் களுக்கும் சென்று முகாமிட்டு உள்ளனர்.
வாட்ஸ்அப், யூடியூப், ட்விட்டர் போன்ற பல்வேறு சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டாலும், ஃபேஸ்புக்கில் அவதூறு பரப்பியவர்கள் மட்டுமே தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த வகையில், முதல்வர் பற்றி வதந்தி பரப்பிய 100 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பட்டியலில் உள்ள அனைவரையும் அடுத்தடுத்து கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
மற்ற சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியவர்களை அடையாளம் காணும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்தனர். ஏற்கெனவே ஃபேஸ்புக் மூலம் வதந்தி பரப்பிய பிரான்ஸ் தமிழச்சியை கைது செய்ய தனிப்படை போலீஸார் பிரான்ஸ் செல்ல திட்டமிட்டுள்ளனர். அதற்கான பணியும் முடுக்கிவிடப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT