Published : 25 Oct 2016 11:42 AM
Last Updated : 25 Oct 2016 11:42 AM

‘கோவை விமான நிலைய உட்கட்டமைப்பு பணிகள் 2017 மார்ச்சில் நிறைவடையும்’

கோவை சர்வதேச விமான நிலையத்தில் சுமார் ரூ.11 கோடி மதிப்பீட்டில் நடை பெற்று வரும் உட்கட்டமைப்புப் பணிகள் 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையம், தேசிய அளவில் குறிப்பிடத்தக்க விமான நிலையங்களில் ஒன்றாகும்.

1940-ம் ஆண்டுகளில் கோவை யில் விமான சேவை தொடங்கியது. தொடக்கத்தில் சென்னை, மும்பைக்கு விமானங்கள் இயக்கப்பட்டன. தொடர்ந்து, கொச்சி, பெங்களூருவுக்கு விமான சேவைகள் தொடங்கப்பட்டன.

1980-ல் ஓடுபாதை விரிவாக்கப் பணிகளுக்காக விமான சேவை நிறுத்தப்பட்டு, சூலூரில் உள்ள விமானப் படைக்குச் சொந்தமான விமான நிலையத்திலிருந்து விமானங்கள் இயக்கப்பட்டன.

1987-ல் விரிவாக்கப் பணிகள் முடிவடைந்த பின்னர் மீண்டும் கோவை விமான நிலையத்திலி ருந்து விமானங்கள் இயக்கப்பட் டன. 1995-ம் ஆண்டு முதல் பன்னாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. அப்போது சார்ஜாவுக்கும், 2007-ல் கொழும்பு மற்றும் சிங்கப்பூருக்கும் விமானங்கள் இயக்கப்பட்டன. 2012-ம் ஆண்டில் இந்த விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கிருந்து பல்வேறு விமான நிறுவனங்கள், பல வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்கி வருகின்றன.

தற்போது கோவை, சேலம், ஈரோடு, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்த விமான நிலையத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்ற னர். தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் கோவை விமான நிலையத்துக்கு வந்து செல்கின்றனர்.

இந்த விமான நிலையத்தில் பயணிகள் வசதிக்காக பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.

தற்போது விமான நிலையத்தின் வெளிப் பகுதியில், பயணிகளுக்கு நிழல் தரும் வகையில் அமைக்கப் பட்டுள்ள, குடை வடிவிலான மேற்கூரையை அகற்றிவிட்டு, இன்னும் அதிக பரப்பில், பெரிய அளவில் புதிய மேற்கூரை கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

விமானத்தில் இருந்து இறங்கும் பயணிகள் படிக்கட்டுகள் வழியாக இறங்காமல், நேரடியாக விமான நிலையத்துக்குள் வரும் பாலம் (ஏரோபிரிட்ஜ்) தற்போது 2 உள்ளது. மேலும், 2 ஏரோபிரிட்ஜுகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் தற்போது விமான நிறுத்துமிடங்கள் 8 உள்ளன. கூடுத லாக 2 விமான நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட உள்ளன.

இதுகுறித்து விமான நிலைய இயக்குநர் ஜி.பிரகாஷ் ரெட்டி ‘தி இந்து’விடம் கூறியது: பயணிகளின் வசதிக்காக பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை, இந்திய விமான நிலைய ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தற்போது ரூ.11 கோடி மதிப்பில் புதிய மேற்கூரை, 2 ஏரோபிரிட்ஜ், 2 விமான நிறுத்துமிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் 2017 மார்ச் மாதத்துக்குள் இப்பணிகள் முடிவடையும்.

ஓடுதள விரிவாக்கம்

கோவை விமான நிலையம் தற்போது 420 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. விமான நிலையம் மற்றும் ஓடுதளத்தை விரிவாக்கம் செய்வதற்காக மாநில அரசிடம் நிலம் ஒதுக்குமாறு கேட்டுள்ளோம். கூடுதலாக 600 ஏக்கர் நிலம் வழங்குமாறு நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். அவ்வாறு 600 ஏக்கர் நிலம் கிடைக்கும்போது, 1,000 ஏக்கர் கொண்டதாக கோவை விமான நிலையம் விரிவடையும்.

கலைப் பொருட்கள்

ஏற்கெனவே சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில், கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்திலும் தமிழக அரசின் பூம்புகார் கலைப் பொருட்கள் விற்பனை மையம் சார்பில் கண்காட்சி அமைக்கப்படும்.

தொடர்ந்து, பயணிகளின் வசதி மற்றும் விமான நிலைய மேம்பாட்டுக்காக பல்வேறு பணிகள் நடைபெற உள்ளன என்றார்.

திருப்பதிக்கு விமான சேவை

ஏர் கர்னிவல் விமான நிறுவனம் சார்பில், கோவையிலிருந்து திருப்பதிக்கு விமானம் இயக்கப்பட உள்ளது. இதற்கான கோப்புகள் உள்நாட்டு விமானப் போக்குவரத்து டைரக்டர் ஜெனரலுக்கு (டி.ஜி.சி.ஏ.) அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஓரிரு மாதங்களில் திருப்பதிக்கான விமான சேவை தொடங்கும் என்றார் ஜி.பிரகாஷ் ரெட்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x