Published : 28 Aug 2022 08:10 PM
Last Updated : 28 Aug 2022 08:10 PM

“உயிரே போனாலும் நிலத்தை கொடுக்க மாட்டோம்” - 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை : சென்னை - சேலம் 8 வழிச் சாலைத் திட்டத்தை எதிர்த்தும், திட்டத்துக்கு ஆதரவாக பேசி வரும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 இடங்களில் இன்று(28-ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை - சேலம் இடையே 8 வழிச் சாலை திட்டத்துக்கு அதிமுக ஆட்சி முனைப்பு காட்டியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் என 5 மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றது. விவசாயிகள், கிராம மக்கள் ஆகியோரது போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்தது. பொதுமக்களின் தொடர் போராட்டம் எதிரொலியாக, 8 வழிச் சாலை திட்ட பணியை முன்னேடுத்து செல்ல முடியாமல், தமிழக அரசு பின்வாங்கியது.

இந்நிலையில், 8 வழிச் சாலைத் திட்டம் அவசியம் என பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு கடந்த சில நாட்களாக கருத்து தெரிவித்து வருகிறார். இதனால், 8 வழிச் சாலை திட்டம் குறித்த அச்சம், விவசாயிகள் மற்றும் கிராம மக்களிடையே மீண்டும் ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டால், வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என்பதால், 8 வழிச் சாலை திட்டத்தை முற்றிலும் கைவிடுவதாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பெரும்பட்டம் மற்றும் சேத்துப்பட்டு அடுத்த ஆத்துறை கிராமத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவை கண்டித்து இன்று(28-ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரும்பட்டம் கிராமத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம், ஆத்துறை கிராமத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், 8 வழி சாலை திட்டத்துக்கு எதிராகவும் மற்றும் திட்டத்துக்கு ஆதரவாக பேசி வரும் அமைச்சர் எ.வ.வேலுக்கு எதிராக முழக்கமிடப்பட்டது. ஆத்துறையில் கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் பங்கேற்றனர்.

ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் கூறும்போது, “8 வழிச் சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டது. இதனால், சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தோம். ஆனால், தேர்தலில் வெற்றி பெற்றதும், 8 வழிச் சாலைத் திட்டம் வேண்டாம் என திமுக கூறவில்லை என பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு கருத்து தெரிவித்துள்ளார்.

எங்கள் உயிரே போனாலும், எங்களது விவசாய நிலத்தை கொடுக்க மாட்டோம். விவசாய நிலத்தையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க, அதிமுக ஆட்சியில் போராடியதைவிட, திமுக ஆட்சியில் எங்களது போராட்டம் வீரியமாக இருக்கும். 8 வழிச் சாலை திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என தமிழக அரசின் அரசிதழில் வெளியிடும் வரை போராட்டம் தொடரும்” என தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x