Published : 28 Aug 2022 01:03 PM
Last Updated : 28 Aug 2022 01:03 PM
திருச்சி: "நிதியே இல்லை என்று கூறிவரும் இந்த அரசாங்கத்துக்கு பேனா வைக்க மட்டும் எப்படி நிதி வந்தது என்று மக்கள் கேட்கின்றனர்" என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
திருச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவபதி இல்ல விழாவில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியது: "திமுக ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்களாகிறது என்ன செய்தீர்கள்? என்று மக்கள் கேட்கின்றனர். ஆன்லைன் ரம்மி செய்ததுதான் மிச்சம். ஆன்லைன் ரம்மி அதன்மூலம் சரியாக துட்டு வந்துகொண்டிருக்கிறது வீட்டிற்கு. அது சிந்தாமல் சிதறாமல் யாருக்கு போய் சேர வேண்டுமோ, அஙகுபோய் சேர்ந்துகொண்டிருக்கிறது.
மக்களுக்கு நன்மை கிடைக்கிற எந்த திட்டத்தையும் இந்த திமுக அரசு இதுவரை செய்யவில்லை. காரணம் தினந்தோறும் முதல்வர் போட்டோஷூட், முதல்வர் செல்வார், படம் பிடிப்பார்கள் தொலைக்காட்சியில் காட்டுவார்கள், பத்திரிகைகள் வரும். இதுதான் அன்றாட நிகழ்ச்சி. மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. எந்த திட்டத்தையும் நிறைவேற்றவும் இல்லை. அதனால் நமக்கு என்ன பலன்.
நிதியே இல்லை, என்று கூறிவிட்டு எழுதாத பேனாவை ஏன் வைக்கிறீர்கள் என்று எல்லோரும் கேட்கின்றனர். பேனா வையுங்கள் வேண்டாம் என்று கூறவில்லை. ஏனெனில், அவர் கட்சியின் தலைவராக இருந்தார், முதல்வராக இருந்தார், நினைவு மண்டபம் கட்டுங்கள் நாங்கள் வேண்டாமென்று கூறவில்லை.ஆனால், 80 கோடியில் பேனா வைக்க வேண்டுமா? இந்த ஆறரை கோடி மக்களுக்கு பேனா வாங்கி கொடுத்துவிடலாம் 80 கோடியில்.
எனவே பேனா வையுங்கள் ஒரு கோடி ரூபாயில் பேனா வைக்கவும். இன்றைக்கு நிதியே இல்லை என்று கூறிவரும் இந்த அரசாங்கத்துக்கு இதுக்கு மட்டும் எப்படி நிதி வந்தது என்று மக்கள் கேட்கின்றனர்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT