Published : 27 Aug 2022 06:31 PM
Last Updated : 27 Aug 2022 06:31 PM

திருச்சியில் விதிகளை மீறி மண் எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு: உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஜி. செல்லமுத்து

திருச்சி: திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனைய அமைய உள்ள இடத்தை சமப்படுத்துவதற்காக குளங்களில் இருந்து விதிமுறைகளை மீறி மண் எடுக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்க ரூ.460 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக, அங்கு கிராவல் மண் கொண்டு நிலத்தை சமப்படுத்தும் பணிக்கு டெண்டர் விடப்பட்டு, ரூ.20 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணியை புதுக்கோட்டையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக, பூங்குடி, குண்டூர், செட்டியப்பட்டி, மணிகண்டம் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான குளங்களில் இருந்து மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் மண் அள்ளும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பகுதி வழியாக செல்லும் புதிய கட்டளை மேட்டு வாய்க்காாலில் விவசாயத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், மண் எடுப்பதற்காக இந்த 4 குளங்களுக்கும் இதுவரை தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் இப்பகுதி விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், இந்தக் குளங்களில் விதிகளை மீறி நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மண் எடுக்கப்படுவதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஏ.தாமஸ் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: "பொது பயன்பாட்டுக்கு அரசு அனுமதியுடன் குளங்களில் மண் எடுக்கும்போது, கனிமவள பாதுகாப்புச் சட்டத்தின் படி இரண்டே முக்கால் அடி ஆழத்துக்குத் தான் எடுக்க வேண்டும். ஆனால், 8 முதல் 10 அடி ஆழம் வரை மண் எடுத்துள்ளனர்.

மேலும், வாகனங்களில் அளவுக்கு அதிகமாக மண் ஏற்றிச் செல்லும்போது, அவை சில நேரங்களில் சாலைகளில் கொட்டுகின்றது. மழை பெய்யும்போது, அவை சேறும்சகதியுமாக காட்சியளிப்பதால், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே, இவ்விவகாரத்தில் ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்"என்றார்.

இதுகுறித்து திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் கூறியது, "ஒருங்கிணைந்த பேருந்து முனைய பணிக்கு, அரசுக்குச் சொந்தமான குளங்களில் இருந்து மண் எடுக்கும்போது ரூ.20 கோடி தேவையா என தெரியவில்லை. மேலும், இப்பணிக்கு கிராவல் மண்ணுக்குப் பதிலாக வண்டல் மண் பயன்படுத்தப்படுவதால், பேருந்து முனையத்தின் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகும். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்" என்றார்.

மேலும், இதுதொடர்பாக திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ராவணன் தலைமையில், குண்டூர் பகுதி ஒன்றிய கவுன்சிலர் வினோதினி பாலமுருகன் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமாரை நேற்று சந்தித்து மண் அள்ளுவதில் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மனு அளித்தனர்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமாரிடம் கேட்டபோது, ‘‘குளங்களில் வண்டல் மண் மேல் பகுதியிலும், கிராவல் மண் கீழ் பகுதியிலும் இருக்கும். எனவே, கிராவல் மண் இருக்கும் அளவுக்கு தோண்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கனிம வள பாதுகாப்புச் சட்டத்தை மீறி மண் எடுக்கப்பட்டிருந்தால், உரிய விசாரணை நடத்தப்படும். கிராவல் மண் பயன்படுத்தாமல் வண்டல் மண் பயன்படுத்தி இருந்தால் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x