Published : 27 Aug 2022 03:52 PM
Last Updated : 27 Aug 2022 03:52 PM

17 வயது முடிந்தால் வாக்காளர் அட்டைக்கு ‘அட்வான்ஸ் புக்கிங்’ - இந்திய தேர்தல் ஆணையர் தகவல்

தலைமைத் தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா பாண்டே | கோப்புப்படம். படம்: ஜி. மூர்த்தி

சென்னை: “17 வயது முடிந்தவர்கள் வாக்காளர் அட்டைக்கான அட்வான்ஸ் புக்கிங் ஆன்லைன் மூலமாக செய்து கொள்ள முடியும். அவர்களுக்கு 18-வது பிறந்த தினத்தில் பரிசாக வீட்டிற்கு வாக்காளர் அடையாள அட்டை வந்து சேரும்” என்று இந்திய தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா பாண்டே தெரிவித்துள்ளார்.

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தமிழக தேர்தல் ஆணையம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகை வழங்கும் விழா சென்னை ரிப்பன் அலுவலக வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது. இதில் இந்தியத் தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா பாண்டே பங்கேற்று வெற்றி பெற்ற 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநில தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும் / மாநகராட்சி ஆணையருமான ககன் தீப் சிங் பேடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு, "இந்தப் போட்டிகள் தமிழகத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. ஆனால் இந்திய தேர்தல் அதிகாரி தமிழகத்திற்கு வந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குவார் என்று நாங்கள் நினைக்கவில்லை. சுதந்திரம் பெற்ற பிறகு பல்வேறு நாடுகளில் தேர்தல் நடத்துவதில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தது. இந்தியாவில் அது போன்று எந்த பிரச்சினையும் வரவில்லை. அதனால்தான் தற்போது மிகப்பெரிய ஜனநாயகமாக இந்தியா உள்ளது. 1953-ல் 18 சதவீத வாக்குகள்தான் பதிவாகியது. தற்போது 73 சதவீத வாக்குகள் பதிவாகிறது. 100 சதவீத வாக்குகள் பதிவாகும் போது நாட்டின் ஜனநாயகம் மேலும் வலுப்பெரும்.

கரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நேரத்தில் இப்போட்டிகள் நடைபெற்றது. அதனால் நாங்கள் இணைய வழி மூலம் போட்டியை நடத்தினோம், நினைத்ததை விட மக்கள் ஆர்வமாக போட்டியில் கலந்து கொண்டனர். 18 பிரிவுகளில் இந்த போட்டி நடைபெற்றது அதில் சில போட்டிகள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் என நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய இந்திய தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா பாண்டே, "உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகவும் சந்தோஷம். இளைஞர்களின் பங்களிப்பு நாட்டின் ஜனநாயகத்திற்கு மிகவும் முக்கியம். அந்த காலங்களில் வாக்காளர் பட்டியலில் பெண்கள் இவருடைய பெண், மனைவி என குறிப்பிட்ட காலங்கள் போய் தற்போது மொத்தமுள்ள வாக்காளர் பட்டியலில் 50 சதவீதம் பெண்கள் உள்ளனர்.

இந்தியாவில் மக்கள் 16 சதவீதம் மட்டுமே கல்வி அறிவு பெற்றவர்களாக இருந்த காலத்தில் வாக்காளர்களுக்கு சின்னம் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி ஜனநாயகம் வளர்க்கப்பட்டது. தற்போது இந்தியா மிகப்பெரிய ஜனநாயகமாக வளர்ந்துள்ளது. ஒரு வாக்காளர் கூட விடுபட்டு விட கூடாது என்பது தான் தேர்தல் ஆணையத்தின் இலக்கு. உலகில் இளமையான நாடும் மற்றும் இளைஞர்கள் அதிகம் உள்ள நாடும் இந்தியா தான்.

வாக்காளர் பட்டியல் ஆண்டிற்கு ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் என 4 காலாண்டு அளவில் வெளியிடப்படுகிறது. ஜனவரியில் 18 வயது பூர்த்தி செய்பவர்கள் ஏப்ரலில் வெளி வரும் பட்டியலில் சேர்ந்து கொள்ள முடியும். அதேபோல ஏப்ரல் ஜூலை அக்டோபர் ஆகிய மாதங்களில் இடைப்பட்ட காலத்தில் 18 வயது பூர்த்தி செய்தால் அடுத்து அடுத்து வரும் வாக்காளர் பட்டியலில் பெயர் இணைக்கப்படும்.

சினிமா டிக்கெட் முன்னரே பதிவு செய்து கொள்வது போலவே 17 வயது முடிந்தவர்கள் வாக்காளர் அட்டைக்கான அட்வான்ஸ் புக்கிங் ஆன்லைன் மூலமாக தற்போது செய்து கொள்ள முடியும். 18-வது பிறந்த தினத்தில் உங்கள் வீட்டிற்கு பரிசாக வாக்காளர் அடையாள அட்டை வந்து சேரும். 17 வயது பூர்த்தி ஆனவர்கள் வழிமுறைகளை பின்பற்றி வாக்காளர் அட்டைக்கான முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒரு இளைஞரின் வாக்கைக்கூட தவறவிட விரும்பவில்லை" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x