Published : 27 Aug 2022 01:55 PM
Last Updated : 27 Aug 2022 01:55 PM

“பிரேதப் பரிசோதனை அறிக்கைகளில் உண்மை மறைப்பு” - முதல்வரை சந்தித்த கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார்

சென்னை: தனது மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளதாக கூறிய கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் செல்வி, “என் மகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கைகளில் உண்மை மறைக்கப்பட்டுள்ளது” என்று குற்றம்சாட்டினார்.

முன்னதாக இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் செல்வி, தந்தை நேரில் சந்தித்தனர். அந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் செல்வி, "என் மகள் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என்று முதல்வர் உறுதியளித்துள்ளார். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று கூறினார். விசாரணை வேகமாக நடைபெறுகிறது விரைவில் நீதி நிலைநாட்டப்படும் என்றார்.

என் மகள் மரணத்திற்காக நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் சம்பந்தமே இல்லாத மாணவர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். என் மகள் வழக்கில் நேற்று 5 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதனை எதிர்த்து அரசாங்கம் மூலமாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவிருக்கிறோம்.

என் மகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது. இரண்டு அறிக்கைகளிலுமே மறைக்கப்பட்டுள்ளது. எங்கள் தரப்பில் நாங்கள் கேட்ட மருத்துவரை பிரேதப் பரிசோதனையின்போது கொடுத்திருந்தால் உண்மை தெரிந்திருக்கும். இந்த வழக்கில் சிபிசிஐடி சற்று மெத்தனமாகத்தான் செயல்படுகிறது. ஆனாலும் எங்கள் மகளுக்கு நீதி கிடைக்க முதல்வர் உதவுவார் என்று முழுமையாக நம்புகிறோம்.

ஜிப்மர் அறிக்கை எங்களுக்கு இன்னும் தரப்படவில்லை. அதேபோல், பள்ளி நிர்வாகம் சிசிடிவி காட்சிகளை இதுவரை பெற்றோராகிய எங்களிடம் காட்டவில்லை. அதிலிருந்தே அவர்கள் மீது தவறு இருக்கிறது என்று தெரிகிறது. மகளின் தோழிகள் சிபிசிஐடியில் வாக்குமூலம் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் யார் என்று எங்களுக்குத் தெரியவில்லை. எங்களிடம் சொன்னால்தான் அவர்கள் மகளின் தோழிகளாக என்பதை நாங்கள் உறுதி செய்ய முடியும்.

இப்போது பள்ளி தாளாளர் உள்பட 5 பேரும் ஜாமீனில் தான் வெளியாகியிருக்கிறார்கள். அவர்கள் விடுதலையாகவில்லை. அவர்கள் சிறைக்குச் செல்வதை நான் உறுதி செய்வேன். சிபிசிஐடி தரப்பில் இன்னும் கொஞ்சம் வேகமாக வேலை செய்ய வேண்டும். அவர்கள் ஏதாவது கண்டுபிடித்தால் பெற்றோர் என்ற முறையில் எங்களுக்கு முதலில் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x