Published : 27 Aug 2022 10:56 AM
Last Updated : 27 Aug 2022 10:56 AM

ஜெ. மரணம் | 600 பக்கங்கள் கொண்ட ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை முதல்வரிடம் தாக்கல்

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கை மொத்தம் 600 பக்கங்களை கொண்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து விசாரிக்க கடந்த 2017 செப்டம்பரில் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.

சசிகலா, ஓபிஎஸ், அப்போலோ மருத்துவர்கள், அதிகாரிகள் உட்பட 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்தநிலையில், எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் அறிக்கை சில நாள்முன்பு ஆறுமுகசாமி ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், ஆணையத்துக்கு தமிழக அரசு அளித்த அவகாசம் கடந்த 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் கடந்த 23-ம் தேதி இரவு கோவை புறப்பட்டுச் சென்றார். முதல்வரின் சுற்றுப்பயணத்தால் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.

இந்நிலையில்,சென்னையில் முதல்வரிடம் விசாரணை அறிக்கையை ஆணையத் தலைவர் ஆறுமுகசாமி இன்று சமர்ப்பித்தார். 5 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x