Published : 08 Oct 2016 10:15 AM
Last Updated : 08 Oct 2016 10:15 AM
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைவாக இருப்பதாலும், ஆந்திர மாநிலத்தில் இருந்து கிருஷ்ணா நதிநீர் திறந்துவிடுவது 3 மாதங்களுக்கு மேல் தாமதம் ஆவதாலும் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதிநீரையும், வடகிழக்குப் பருவ மழையையும் சென்னைக் குடிநீர் வாரியம் பெரிதும் எதிர்பார்த்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் இருந்து கிருஷ்ணா நீர் சோமசீலா அணைக்கும் அங்கிருந்து கண்டலேறு அணைக்கும் வந்து சேருகிறது. கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறந்துவிடப்படுகிறது.
தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ம் தேதிமுதல் அக்டோபர் 31-ம் தேதி வரை 8 டிஎம்சியும், ஜனவரி மாதம்முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டிஎம்சியும் ஆக மொத்தம் 12 டிஎம்சி கிருஷ்ணா நீர் இரு கட்டங்களாக வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு ஆந்திரத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் தங்களது அணைகளில் போதிய அளவு நீர் இல்லை என்று கூறி சென்னைக்கு ஆந்திர அரசு கிருஷ்ணா நீர் திறந்துவிடவில்லை. கடந்த ஆண்டு சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் டிசம்பரில் கனமழை பெய்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பி வழிந்தன. செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகளில் இருந்து மட்டும் சுமார் 30 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலுக்குப் போனது. ஏரிகளில் முழு கொள்ளளவு தண்ணீர் இருந்ததால் கிருஷ்ணா நீர் வராத நிலையிலும் சென்னைக் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படவில்லை.
தற்போது 215 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஸ்ரீசைலம் அணையில் 205 டிஎம்சியும், 73 டிஎம்சி கொள்ளளவு கொண்ட சோமசீலா அணையில் 32 டி.எம்.சி.யும், 68 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையில் 22 டிஎம்சியும் நீர் இருப்பு உள்ளது. இந்த அணைகளில் போதியளவு நீர் இருப்பு இருக்கின்ற போதிலும் ஜூலை 1-ம் தேதிமுதல் திறந்துவிட வேண்டிய கிருஷ்ணா நீர் 3 மாதங்களுக்கு மேலாகியும் இன்னமும் திறந்துவிடப்படவில்லை.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் நீர் இருப்பு மிகவும் குறைவாக உள்ளது. இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 57 மில்லியன் கன அடி. தற்போது ஆயிரத்து 820 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியிலும் தண்ணீர் இல்லை. தூர்வாருதல் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையிலும் வீராணம் ஏரியில் நீர் நிரப்பப்படாமல் உள்ளது.
அதனால், குடிநீர் தேவைக்கு கிருஷ்ணா நீரையும், வடகிழக்கு பருவ மழையையும் சென்னைக் குடிநீர் வாரியம் பெரிதும் எதிர்பார்த்துள்ளது.
இது தொடர்பாக தமிழக பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் காந்திமதிநாதன் கூறுகையில், “சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறந்துவிடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை கூட்டுமாறு ஆந்திர அரசுக்கு தமிழ்நாடு பொதுப்பணித் துறை செயலாளர் கடிதம் எழுதினார். அதற்கு பதில் வராததால் 2 தடவை நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை, திருப்பதி, ஹைதராபாத் ஆகிய 3 இடங்களில் ஏதாவது ஓர் இடத்தில் இக்கூட்டம் நடைபெறும். இரு மாநில தலைமைச் செயலாளர்கள், பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கும் இக்கூட்டம் விரைவில் நடைபெறும். அப்போதுதான் கிருஷ்ணா நீர் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT