Last Updated : 01 Oct, 2016 02:14 PM

 

Published : 01 Oct 2016 02:14 PM
Last Updated : 01 Oct 2016 02:14 PM

கடலூர் உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக வேட்பாளர் பட்டியலில் இறந்தவர் பெயர்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் அரங்கேறும் உள்குத்து சம்பவங்களால் பல இடங்களில் வேட்பாளர் தேர்வு அசுர வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாக நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களில் இறந்தவரின் பெயரும் இடம்பெற்றிருப்பது தான் உச்சக்கட்டம்.

கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை அதிமுகவில் மிகுந்த பலத்துடன் வலம் வரும் அமைச்சர் சம்பத், கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது தான் பரிந்துரைத்த வேட்பாளர்களில் பெரும்பாலானோருக்கு வாய்ப்பு கிடைக்காததால் கடும் அதிருப்தியில் இருந்தார். தேர்தல் முடிவுகளிலும் அவரது அதிருப்தி வேட்பாளர்கள் வெற்றிபெற்று எம்எல்ஏ ஆகிவிட்டதால், தர்ம சங்கடத்திற்கும் உள்ளானார்.

இந்நிலையில் தற்போது உள்ளாட்சித் தேர்தலில் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில், தனது ஆதரவாளர்களையே களமிறக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக தனது வாரிசுகளை களமிறக்கியுள்ளதால், அதிமுகவினர் வாரிசுகளின் வீடு முன்பு காத்துக் கிடக்கின்றனர்.

கடலூர் நகர்மன்ற தலைவர் மகளிருக்கு ஒதுக்கப்பட்டதால், அமைச்சரின் விசுவாசியான தற்போதைய தலைவர் மீண்டும் நிற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். அதேபோல் துணைத் தலைவர் சேவல் குமாரின் நீண்டகால கனவும் கானல் நீரானதால், அவரது மருமகள் வேட்பாளராகியுள்ளார். முன்ளாள் தலைவர் முயற்சிகள் மேற்கொண்டும், அவரை வேட்பாளராக்க அமைச்சர் குடும்பத்தினர் மறுத்துவிட்டதாக தெரிகிறது.

கடலூர் நகர்மன்றத்தை பொறுத்தவரை அமைச்சர் சம்பத்தின் ஆதரவாளர்களான தற்போதைய தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர் கந்தன் ஆகிய மூவரும் தங்கள் வீட்டு பெண்மணிகளை தலைவராக்க முயற்சி மேற்கொண்டு வருவதால், அமைச்சர் ஆதரவாளர்களான இந்த மூவர் அணிக்குள்ளேயே உள்குத்து வேலைகள் துவங்கியுள்ளது. மேலும், முன்னாள் தலைவரும் அமைதியாக எதிர்ப்பு வேலைகளில் இறங்கியுள்ளார்.

இதுதவிர முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன் ஆதரவாளர்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளதால், தனது மனக் கசப்பை உள்ளாட்சி மூலம் வெளிப்படுத்த திட்டமிட்டிருப்பதாக அதிமுகவினர் புலம்புகின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளில் கடலூர் நகராட்சி நிர்வாகம் எந்தவித நலப் பணிகளையும் செய்யவில்லை என்ற அதிருப்தி மக்களிடம் நிலவி வரும் நிலையில் அமைச்சர் சம்பத், தனது குடும்பத்தினரை களமிறக்கியதோடு, அவரும் விறுவிறுப்பாக செயல்படுகிறார். இதன் விளைவு தான் இறந்தவர் பெயர் கவுன்சிலர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது என்று கட்சியினர் குமுறுகின்றனர்.

இதுதொடர்பாக அமைச்சர் சம்பத்தை தொடர்பு கொண்டபோது, ''நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு கவுன்சிலராக அறிவிக்கப்பட்டவர் அண்மையில் தான் இறந்துள்ளார். ஏற்கெனவே அவர் பெயர் இடம்பெற்றிருந்தால், தற்போது திருத்தப்படாமல் வெளியாகிவிட்டது. தற்போது 23-வது வார்டு மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. மேலும் கட்சியில் சிலருக்கு அதிருப்தி ஏற்படுவது வாடிக்கை தான். கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பாகுபாடின்றி போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x