Published : 27 Aug 2022 07:40 AM
Last Updated : 27 Aug 2022 07:40 AM

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான மானியம்: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.752 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு

சென்னை: தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான குறைந்த பட்ச மானியம், மாவட்ட ஊராட்சி உள்ளிட்ட 3 அமைப்புகளுக்கும் மக்கள் தொகை அடிப்படையிலான மானியம் என ரூ.752 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை செயலர் அமுதா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் 5-வது மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி, மாநில அரசு தனது சொந்த வரி வருவாயில் 10 சதவீதத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கு பகிர்ந்தளிக்க முடிவெடுத்துள்ளது.

அத்தொகையில் ஊரக உள்ளாட்சிகளுக்கு 56 சதவீதம், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு 44 சதவீதம் வழங்கப்படுகிறது.

ஊரக உள்ளாட்சிகளுக்கு வழங்கப்படும் பகிர்வு நிதியானது, மூலதன நிதியாக 20 சதவீதமும், தொகுப்பு நிதியாக 10 சதவீதமும், பகிர்வு மானியமாக 70 சதவீதமும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி, ஊராட்சிகளுக்கான பகிர்வு நிதிக்கு நிதிநிலை அறிக்கையில் மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.408 கோடியே 46 லட்சத்து 99 ஆயிரம், ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ.1,879 கோடியே 92 லட்சத்து 36 ஆயிரம், கிராம ஊராட்சிகளுக்கு ரூ.2,794 கோடியே 48 லட்சத்து 10 ஆயிரம் என மொத்தம் ரூ.5,080 கோடியே 87 லட்சத்து 45 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதில் ஏற்கெனவே, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான நிதி ஒதுக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து 12,525 கிராம ஊராட்சிகளுக்கும், 388 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான குறைந்தபட்ச மானியம் மற்றும் மக்கள் தொகை மானியமாக ரூ. 693 கோடியே 93 லட்சத்து 6 ஆயிரத்து 571-ம், மாவட்ட பஞ்சாயத்துக்கு மக்கள தொகை மானியமாக ரூ.58 கோடியே 6 லட்சத்து 71 ஆயிரத்து 286-ம்என ரூ.751 கோடியே 99 லட்சத்து 77 ஆயிரத்து 857 ஐ ஒதுக்கும்படி கோரிக்கை விடுத்தார்.

இதை பரிசீலித்த தமிழக அரசு, ஊரக வளர்ச்சி ஆணையர் கோரியநிதியை ஒதுக்கி உத்தரவிட்டுஉள்ளது. இவ்வாறு ஊரக வளர்ச்சித் துறை செயலர் அமுதா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x