Published : 28 Jun 2014 11:00 AM
Last Updated : 28 Jun 2014 11:00 AM
தமிழகத்தில் காவல் நிலையங்களில் அளிக்கப்படும் புகார் மனுவுக்கு ரசீது வழங்கும் முறையை உடனடியாக நிறுத்த உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க உள்துறைச் செயலர், தமிழக காவல் துறை இயக்குநர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பி. சந்தனம் ராஜேஷ்குமார் உயர் நீதிமன்றக் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:
காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் புகாரின் பேரில் வழக்கு பதிய வேண்டும். ஆனால், தற்போது காவல் நிலையங்களில் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்வதற்குப் பதிலாக, புகாரைப் பெற்றுக் கொண்டு சமுதாயப் பணி பதிவேடு என்ற சிஎஸ்ஆர் ரசீது வழங்குகின்றனர்.
இந்திய அரசிலமைப்புச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றில் காவல் நிலையத்துக்கு வருவோரிடம் புகாரைப் பெற்றுவிட்டு, அவர்களுக்கு ரசீது வழங்க வேண்டும் என்று கூறப்படவில்லை. சட்டத்தில் இல்லாத நடைமுறையை காவல் நிலையங்களில் போலீஸார் அமல்படுத்தி வருகின்றனர்.
சட்ட அங்கீகாரம் இல்லாத ரசீது வழங்குவதன் மூலம், பாதிக்கப்படுபவர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்காதபடி போலீஸார் செய்து வருகின்றனர். மேலும், கட்டப்பஞ்சாயத்து நடத்தி பணம் வசூல் செய்ய இந்த ரசீதை ஒரு கருவியாக போலீஸார் பயன்படுத்துகின்றனர்.
தமிழகத்தில் 1980 ஆண்டிலிருந்து தற்போது வரை புகார் கொடுக்க வந்தவர்களுக்கு ரசீது வழங்கிவிட்டு, புகார் மனுக்களை கிடப்பில் போடுவதும், அரசியல், பணம், ஆள் பலம் உள்ளவர்களுக்கு சாதகமாகச் செயல்படுவதும் நடைபெறுகிறது.
எனவே, தமிழகத்தில் அனைத்துக் காவல் நிலையங்களிலும் புகாருக்கு ரசீது வழங்க கூடாது என உத்தரவிட வேண்டும். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது தொடர்பாக 2013, நவ. 12-ல் லலித்குமாரி வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுபடி, காவல் நிலையங்களில் அளிக்கப்படும் புகார் தொடர்பாக விசாரித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிடவேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் வி. ராமசுப்பிரமணியன், வி.எம். வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு 2 வாரத்தில் தமிழக உள்துறைச் செயலர், தமிழக காவல் துறை இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT