Published : 01 Oct 2016 02:14 PM
Last Updated : 01 Oct 2016 02:14 PM

விளிம்பு நிலை மக்கள் உயர்வுக்கு பாடுபட்ட பத்மநாப பிள்ளைக்கு கணபதிபுரத்தில் சிலை வைக்கும் பொதுமக்கள்

கல்விக் கூடங்கள் எட்டாக்கனியாக இருந்த காலக்கட்டத்தில், தன் சொந்த செலவில் கல்விக் கூடம் அமைத்து, அதன் தலைமையாசிரியராகவும் இருந்த காந்தியவாதிக்கு, ஊரில் உள்ள அனைத்து தரப்பினரும் ஒன்றுகூடி முழு உருவ வெண்கலச் சிலை அமைத்துள்ளனர். இதன் திறப்பு விழா காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2-ம் தேதி நடக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம், கணபதிபுரம் அன்ன வினாயகர் தேவஸ்தான பள்ளியின் நிறுவனர் மற்றும் அப்பள்ளியின் தலைமையாசிரியராக விளங்கியவர் பத்மநாப பிள்ளை. இவர் 1907-ம் ஆண்டு பிறந்தவர். குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு இருந்த அன்றைய காலக்கட்டத்தில் சாதி பாகுபாடுகள் கடுமையாக இருந்தன. ஆனால், செட்டியார் சமூகத்தில் பிறந்த இவர் சர்வ சாதி, மத மக்களின் வளர்ச்சிக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்துள்ளார். அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் அனைத்து தரப்பினரும் சேர்ந்து இவருக்கு சிலை வைக்கின்றனர் என்பது தான் அதில் விசேஷமே.

முதல் பள்ளிக்கூடம்

இவர் குறித்து தன் நினைவுகளை பகிர்ந்து கொண்ட தியாகி கொடிக்கால் சேக் அப்துல்லா கூறியதாவது:

தொடக்கத்தில் கணபதிபுரம் சுற்றுவட்டார மக்களுக்கு போதிய கல்வி அறிவு இல்லை. காரணம் போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்து சென்று தான் படிக்க வேண்டும். வயிற்றுக்கே சோறு இல்லாத காலம். இந்த நிலையில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த 1947-ம் ஆண்டில் கணபதிபுரத்தில் ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவினார் பத்மநாபன். அந்த பள்ளி மட்டும் அப்போது வராமல் இருந்திருந்தால் அப்பகுதி மக்கள் இப்போது இருக்கும் நிலையை எய்த இன்னும் 20 ஆண்டுகள் ஆகியிருக்கும்.

அடுத்தடுத்து சமூகப்பணி

`பழக்கடை’ என்று இருந்த ஊரின் பெயரை `கணபதிபுரம்’ என மாற்றினார். இந்த பகுதி மக்கள் காலரா, வைசூரி, மலேரியா போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்ட போது, அரும்பாடுபட்டு காந்தியடிகள் பெயரில் அரசு மருத்துவமனையை இங்கு கொண்டு வந்தார்.

வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க காந்திய வழியில் கதர் அலுவலகம் அமைத்தார். தன் சமுதாய மக்களை துணைக்கு சேர்த்து நிலத்தை இலவசமாக கொடுத்து, கணபதிபுரத்தில் சார்பதிவாளர் அலுவலகம் கொண்டு வந்தார். 1957-ல் இவரது முயற்சியால் தான் இப்பகுதிக்கு மின்வசதியே வந்தது.

இது மட்டுமல்ல இப்பகுதியில் தபால் நிலையம், பிறப்பு, இறப்பு பதிவு அலுவலகம், பேருந்துகள் இயக்கியது என இவரது சமூகப் பணிகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இவரது சகோதரர் கொடுத்த நிலத்தில் தான் இப்போது ஊராட்சி அலுவலகம் உள்ளது.

அனைவரும் வழிபட உரிமை

அந்நாட்களில் கோயிலின் உட்பகுதியில் சென்று இறைவனை வழிபட அனைவருக்கும் உரிமை இல்லை. அந்த நிலையை மாற்றி, கணபதிபுரம் அன்னவினாயகர் தேவஸ்தான கோயிலின் உட்பகுதி வரை சென்று இறைவனை வழிபட வகை செய்த உண்மையான காந்தியவாதி அவர்" என்றார்.

மறைந்தாலும் வாழ்கிறார்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்டத் தலைவர் கருங்கல் ஜார்ஜ் கூறியதாவது: அனைத்து தரப்பினருக்கும் பத்மநாபபிள்ளை செய்த சேவைக்கு, மொத்த சமூகமும் துணை நின்றனர்.

இப்பகுதியே வளர காரணமான அவர் 1972-ம் ஆண்டு எங்களை விட்டுப் பிரிந்தாலும், இப்போதும் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

சாதி, சமய உணர்வு கடந்து அவருக்கு சிலை வைப்பது மிக பொருத்தமானது என்பதால் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x