Published : 13 Oct 2016 08:42 AM
Last Updated : 13 Oct 2016 08:42 AM
சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் கருத்து
பெற்றோரை விட்டுப் பிரிந்து தனிக்குடித் தனம் செல்ல வற்புறுத்தும் மனைவியை விவாகரத்து செய்யலாம் என்ற தீர்ப்பு எத்தகையது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவை சேர்ந்த தம்பதிக்கு 1992-ல் திருமணமானது. தனிக்குடித்தனத் துக்கு மனைவி வற்புறுத்துவதால் கணவர் விவாகரத்து கோரி பெங்களூரு குடும்ப நீதிமன்றத்தில் மனு செய்தார். அவர் களுக்கு 2001-ல் விவாகரத்து வழங்கப்பட் டது. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனைவி மேல்முறையீடு செய்து, இதற்கு தடை பெற்றார். உச்ச நீதிமன்றத்தில் கணவர் மேல்முறையீடு செய்தார்.
சமீபத்தில் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘வயதான நிலையில், வருவாய்க்கு வழியில்லாத பெற்றோரை விட்டு பிள்ளைகள் எந்த சூழலிலும் பிரிந்து செல்லக் கூடாது. பெற்று வளர்த்து ஆளாக் கிய தாய், தந்தையரை கடைசி காலத்தில் நன்கு கவனித்துக்கொள்வது மகனின் கடமை. கணவனின் வருவாய் முழுவதை யும் மனைவி தானே அனுபவிக்க நினைப் பது கொடூரமானது. பெற்றோரை பிரிந்து வரச் சொல்வது மேற்கத்திய கலாச்சாரம். அது நமது கலாச்சாரத்துக்கு விரோத மானது. எனவே, விவாகரத்து வழங்கியது செல்லும்’’ என்று உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நிபுணர் எஸ்.குருமூர்த்தி:
மேற்கத்திய நாடுகளைப் பொருத்தவரை, தனிநபர் உரிமைகள் மீதான அழுத்தம் அதிகமானதால் சமுதாயம் கலகலத்து, உறவுகள் முறிந்து மனிதர்கள் இடையே உள்ள தொடர்புகள் எல்லாமே வெறும் ஒப்பந்தங்களாக மாறிவிட்டன. இதன் அடிப்படையில்தான் அந்த நாடுகளின் சட்டங்கள், அரசியல், அரசியல் சாசனம் எல்லாமே ஒப்பந்த அடிப்படையில் அமைந்துள்ளன. இதனால் அங்கு பெற்றோரைக் காப்பாற்றுவது, குழந்தை களைப் பேணுவது, உற்றார் உறவினரைக் கவனிப்பது எல்லாம் அறமாக இல்லை. அவை தற்போது இங்கும் தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றன. ஆனால், பாரத நாட்டைப் பொருத்தவரை உறவு என்பதுதான் அறம். அறம் என்பதுதான் உறவு. இந்த சித்தாந்தங்களை மேற்கோள் காண்பித்து, ‘பெற்றோரைப் பேணுவது அறத்தின் அடிப்படையிலான கடமை’ என்று கூறி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. பெற் றோருக்கான கடமைகளைச் செய்யக் கூடாது என கட்டாயப்படுத்தும் மனை வியை கணவன் விவாகரத்து செய்ய லாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறி யிருக்கிறது. இது நமது கலாச்சாரத்தின் அடிப்படையிலான தீர்ப்பு. கலாச்சாரத் தையும் சட்டத்தையும் இணங்கவைக்கும் நீதிமுறையே பாரம்பரிய மானுடவியல் சார்ந்த நீதிமுறை.
அரசு வழக்கறிஞர் எம்.பிரபாவதி:
மனைவி என்பவள் புகுந்த வீட்டில் மகளாக இருக்க வேண்டும். ஆனால், தனிக்குடித்தனம் போக வேண்டும் என்பதை பெரிதாக்கும்போது பாரம்பரியம் எனும் கட்டமைப்பு உடைந்துவிடுகிறது. இதனால்தான் குடும்பங்களில் பிரச்சினை கள் உருவாகின்றன. மேலும், பெரியவர் களின் ஆதரவு, கண்காணிப்பு இல்லாமல் குழந்தைகள் தனித்துவிடப்படுகின்றன. புதிதாக திருமணம் செய்துகொள்பவர்கள் நம் வாழ்க்கைமுறை மேற்கத்திய கலாச்சாரம்போல இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அதற்கு குட்டு வைத்து இத்தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. ‘இது பெண்ணுரிமையை பாதிக்கிற தவறான தீர்ப்பு’ என்று சிலர் கருதக்கூடும். ஆனால், தொலைநோக்கு சிந்தனையில் பார்த்தால், இத்தீர்ப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணரலாம்.
வழக்கறிஞர் கே.பாலு:
கலாச்சாரம், பண்பாடு மிக்கது நம் நாடு. அதில் மிக முக்கியமானது குடும்ப உறவுமுறை. உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பு தற்காலத்துக்கு மிகவும் அவசியமானது. ஏனென்றால், நவீன யுகத்தின் வெளிப்பாடாக, ‘நான் உங்களுக்கு மட்டும்தான் மனைவி. உங்கள் அப்பா, அம்மாவுக்கு வேலை செய்ய வரவில்லை’ என்ற கருத்து பலரிடம் காணப்படுகிறது. சினிமா உள்ளிட்ட ஊடகங்கங்களில் வரும் தவறான காட்சிகளை பார்த்துவிட்டு அதுதான் நல்ல வாழ்க்கை முறை என்று நினைக்கின்றனர். நீடித்த உறவு என்பது பெற்றோருடன் வாழ்வதுதான். கூட்டுக் குடும்பத்தில்தான் ஆரோக்கியமான புரிதல் நிறைந்த வாழ்க்கை முறை இருக்கும். மேலும், எந்த காரணமும் இல்லாமல் வலுக்கட்டாயமாக பெற்றோரைவிட்டு கணவரைப் பிரிக்க நினைப்பது தவறு. எனவே, இத்தீர்ப்பை வரவேற்கிறேன்.
வழக்கறிஞர் அருள்மொழி:
கணவரின் குடும்பத்தோடு மனைவி வாழ்வதுதான் நடைமுறை. சமஉரிமைப் பார்வையில் பார்த்தால் பெண்ணின் பெற்றோர் என்ன ஆவார்கள் என்று இதுவரை நாம் கேட்டதே இல்லை. மேலும், குடும்ப அமைப்பில் பெண்கள் மீது ஏற்றப்படும் சுமை குறித்து, இந்து தர்மத்தை பற்றிப் பேசுவோர் யாரும் சிந்திப்பதில்லை. கணவர் தனது பெற்றோரை பார்த்துக்கொள்வது கடமைதான். அதை மறுக்க இயலாது. சமத்துவம் பேசுகிறோம் என்பதற்காக ‘வயதான, ஆதரவற்ற பெற்றோரை விட்டுவிட்டு என்னோடு தனியாகத்தான் வர வேண்டும்’ என வற்புறுத்தும் போக்கை உரிமை என்ற பேரில் வளர்க்கக்கூடாது. காரணம் இல்லாமல் ‘பெரியவர்களை தனித்துவிட்டு வாழ வேண்டும், அதுதான் மகிழ்ச்சியான வாழ்க்கை’ என்ற எண்ணத் தையும் நாம் ஊக்குவிக்ககூடாது. முதியோ ரைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது கணவன், மனைவி இருவருக்கும் பொருந் தும். மனைவியின் பெற்றோரையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று யோசிக்க வேண்டுமே தவிர, கணவரின் பெற்றோரை கைவிடுங்கள் என பிரச்சாரம் செய்யக்கூடாது.
இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி:
இந்த குறிப்பிட்ட வழக்கில் விவாகரத்து வழங்க காரணங்கள் இருக்கலாம். இதிலும்கூட நீதிபதிகள் தெரிவித்துள்ள கருத்துகளில் முரண்பாடுகள் உள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தில் ஆணும், பெண்ணும் சமம் என்றுதான் கூறியிருக்கிறது. பெற்றோருக்கு மகன் ஆற்றவேண்டிய கடமை குறித்து நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். சராசரியாக 99 சதவீத திருமணங்களில் மனைவி என்பவள் தனது பெற்றோரிடம் இருந்து பிரிந்து கணவன் வீட்டுக்கு வரும் ஏற்பாடு இருக்கிறது. அவள் தனது பெற்றோருக்கு ஆற்றவேண்டிய கடமை குறித்து நாம் ஒருபோதும் பேசுவதில்லை. இன்றைக்கு பல சூழ்நிலைகளில் வேலைதேடி பெற்றோரை விட்டு வெளிநாடு, வெளி மாநிலங்களுக்கு மகன் செல்ல வேண்டியுள்ளது. பல குடும்பங்களில் குடித்துவிட்டு, பெற்றோரை கவனிக்காத மகன்கள் உள்ளனர். இதுபோன்ற இடங்களில் பெற்றோருக்கு மகன் ஆற்றும் கடமை இல்லாமல் போகிறது. எனவே, எப்போதும் சட்டதிட்டத்துக்கு உட்பட்டு தீர்ப்பு இருப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும். தனிப்பட்ட முறையில் பெண் குறித்த பாகுபாடான கருத்துகள் தனிநபருக்கு இருக்கலாம். தீர்ப்பின் அடிப்படையாக இருக்க முடியாது. இந்த தீர்ப்பு பெண்ணை ஒரு சமமான குடிமகளாக பார்க்க மறுக்கிற பார்வை என்றுதான் கூற வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT