Published : 27 Aug 2022 03:52 AM
Last Updated : 27 Aug 2022 03:52 AM
சென்னை: பரந்தூரில் புதிய விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு சந்தை மதிப்பில் 3.5 மடங்கு அதிக தொகை வழங்கப்படும் என்று அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். மேலும், சுற்றுவட்டாரப் பகுதியில் இலவச நிலம், அதில் வீடு கட்ட பணம், குடும்பத்தில் தகுதியானவருக்கு அரசு சார்பில் வேலை வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், புதிய விமான நிலையத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் குறித்து, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று விளக்கினர். அப்போது அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:
பரந்தூரில் புதிய விமான நிலையத்துக்கான நில எடுப்புப் பணியில் அரசு இறங்கியுள்ளது. விவசாயிகளுக்கு உதவி செய்து, இப்பணிகளை தொடர வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார். எந்த இடமானாலும், புதிய திட்டங்களை கொண்டு வரும்போது, விவசாய நிலங்களை எடுப்பதைத் தவிர வேறு வழி இல்லை. சென்னையிலேயே விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளலாம் என்றால், மீனம்பாக்கம் விமான நிலையம், 2029-ம் ஆண்டுடன் அதன் முழு திறனையும் எட்டிவிடும். சரக்கு கையாளுதல், தற்போதைய ஓடுதளத்தை பயன்படுத்துதல் ஆகியவற்றை அதற்கு மேல் செயல்படுத்த முடியாது.
பெங்களூரு, மும்பையை ஒப்பிடும்போது நமக்கு இன்னொரு விமான நிலையம் தேவை. பரந்தூரையும் நேரடியாக எடுக்கவில்லை. முதலில் 11 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன.அதில், படாளம், திருப்போரூர், பரந்தூர், பன்னூர் ஆகிய 4 இடங்களை தேர்வு செய்தோம். கல்பாக்கத்தில் அணு மின்நிலையம், தாம்பரத்தில் விமானப் படை விமான நிலையம் இருப்பதால் திருப்போரூர், படாளம் ஆகிய இடங்கள் கைவிடப்பட்டன. பரந்தூரைவிட பன்னூரில் அதிகமான குடியிருப்புகளை எடுக்க நேரிடும் என்பதால் பரந்தூரை தேர்ந்தெடுத்து நிலம் எடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
இதுதொடர்பாக 13 கிராமங்களைச் சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலானவர்கள், ‘எடுக்கப்படும் நிலத்துக்கு அரசின் வழிகாட்டி மதிப்பைவிட அதிக தொகை தேவை. வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தனர். பரந்தூர் மக்கள் கேட்டதன் அடிப்படையில், நிலத்துக்கு சந்தை மதிப்பில் 3.5 மடங்கு அதிக தொகை கொடுக்க அரசு முடிவெடுத்துள்ளது. அத்துடன், விமான நிலையம் அமையும் பகுதியின் சுற்றுவட்டாரத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு இடமும், அதில் வீடு கட்ட பணமும் தர உள்ளோம். கிராம மக்களுக்கு ஒரே இடத்தில் நிலம் வழங்கப்படும். மேலும், அப்பகுதியில் உள்ள 13 கிராமங்களிலும் தகுதி அடிப்படையில், படித்தவர்களுக்கு அரசு சார்பில் வேலை வழங்கப்படும்.
விமான நிலைய ஓடுபாதையை மாற்றி அமைக்குமாறு ஏகநாதபுரம், பரந்தூர் மக்கள் கோரிக்கை விடுத்தனர். விரிவான திட்ட அறிக்கை தயாரித்தவர்களிடம் இதுபற்றி தெரிவித்து, அவர்கள் பரிந்துரைத்தால் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தோம். கடந்த 2013-ம் ஆண்டு சட்டப்படி நிலம் கையகப்படுத்தப்படுகிறது. மொத்தம் 13 கிராமங்களில் 1,005 வீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவர்களுக்கு சந்தை மதிப்பை கணக்கிட்டே நிலத்துக்கான தொகை தரப்பட உள்ளது. விவசாயிகள், வீட்டு உரிமையாளர்களுக்கு இந்த அரசு உதவியாகவே இருக்கும். மக்களிடம் அரசு தரப்பு கருத்து கேட்ட பிறகு, அரசியல் தலைவர்கள் கருத்து கேட்பதால், இந்த விஷயம் அரசியல் ஆக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. பாமக தலைவர் அன்புமணியின் கருத்தில்கூட நேர்மறை தகவல்கள்தான் உள்ளன. எனவே, மக்களை அவர்கள் தூண்டிவிடுவதாக நாங்கள் கருதவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு கூறும்போது,“பரந்தூர் புதிய விமான நிலையத்துக்காக மொத்தம் 4,563.56 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. இதில் 3,246.38 ஏக்கர், தனியார் பட்டா நிலங்கள், 1,317.18 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலமாகும். தனியார் பட்டா நிலத்தில் 2,446.79 ஏக்கர் நன்செய் நிலம், 799.59 ஏக்கர் புன்செய் நிலம்” என்றார்.
அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறும்போது, “புதிய விமான நிலையம் அமையும் பகுதியில் ஏரி வருவது பற்றி கேட்கிறீர்கள். தற்போது உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில்கூட, அடையாறு ஆற்றின் குறுக்கே ஆற்றின் மேல் பகுதியை மூடிதான் ஓடுபாதை அமைக்கப்பட்டது. அதேபோல, காவேரிப்பாக்கத்தில் இருந்து செம்பரம்பாக்கம் வரும் கால்வாய்க்கு பாதிப்பு இல்லாமல் அதன்மேல் விமான நிலையம் அமைக்கப்படும்” என தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது தொழில் துறை செயலர் எஸ்.கிருஷ்ணன், கூடுதல் செயலர் மரியம் பல்லவி பல்தேவ், ‘சிட்கோ’ மேலாண் இயக்குநர் ஜெய முரளிதரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT