Published : 26 Aug 2022 11:27 PM
Last Updated : 26 Aug 2022 11:27 PM
புதுச்சேரி: 37வது கண் தான வழிப்புணர்வு விழாவையொட்டி புதுச்சேரி தவளக்குப்பத்தில் உள்ள கண் மருத்துவமணையில் கண் தான விழிப்புணர்வு முகாம் இன்று மாலை நடைபெற்றது. துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முகாமை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கண்தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், தன்னார்வலர்கள், தன்னார்வ அமைப்புகள் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. கண் தானம் குறித்த குறும்படமும் திரையிடப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை பேசியதாவது: "இருதய தானம், சிறுநீரக தானம் உட்பட மற்ற தானங்கள் வருவதற்கு முன்பே முதலில் வந்தது ரத்த தானமும் கண் தானமும் தான். இறந்தவர்களின் உறவினர்களின் ஒப்புதலுடன்தான் கண் தானம் பெற முடியும். எளிதாக ஒப்புதல் பெற முடியாத சூழல் நம் நாட்டில் நிலவுகிறது.
எளிய மக்களிடையே கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மோட்டிவேட்டர்ஸ்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். படிப்பறிவு குறைந்தவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், பொது விழிப்புணர்வு இல்லாதவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தான் அவர்களது வெற்றி இருக்கிறது. அதற்காக பாராட்டுகிறேன்.
தானம் கொடுப்பது உறவினர்களாக இருந்தாலும் சிரமமான காரியமாக உள்ளது. அப்படிப்பட்ட மனநிலையில் இருக்கும் சமுதாயத்தில் கண் தானத்தைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவது சவாலான ஒன்று. மண்ணுக்கு போவதை விட இன்னொருவர் கண்ணுக்கு போக வேண்டும் என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
வாழ்வை இழந்த ஒருவரின் வாழ்க்கையில் ஒளி ஏற்ற நமக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்பது மருத்துவ உலகின் மிக பிரம்மாண்டமான கண்டுபிடிப்பு. கண்ணப்ப நாயனார் கதையின் மூலமாக இன்னொருவருக்கு கண் தானம் செய்யலாம் என்பதை கொள்கை ரீதியாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய தேசம் பாரத தேசம். அதில் அறிவியல் பூர்வமான நடைமுறை இருக்கிறதா? இல்லையா என்பது வேறு. ஆனால் கண்ணை தானமாக தரலாம் என்ற கொள்கையை அதில் கொண்டு வந்திருக்கிறார்கள்.
இப்போது விஞ்ஞான உலகம் வளர்ந்த பிறகு அறுவை சிகிச்சை செய்கிறோம். இந்த நாடு பார்வை இழப்பு முற்றிலும் ஒழிக்கப்பட்ட நாடாக வளர வேண்டும் என்ற தனது ஆசையை பிரதமர் தெரிவித்திருக்கிறார். அதற்கு உங்களுடைய பங்கு நிச்சயமாக இருக்கும். புதுச்சேரி கண் தானத்தில் இலக்கை தாண்டி வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. புதுச்சேரி எப்போதும் மிக வேகமாக பணியாற்றக் கூடிய ஒரு துணை நிலை மாநிலம் என்பதில் நாம் பெருமை அடைய வேண்டும். சுதந்திர போராட்டமாக இருந்தாலும் மற்ற இடங்களை விட தீப்பொறி பறக்கும் அளவிற்கு செயலாற்றக்கூடியவர்கள் புதுச்சேரியில் இருந்தார்கள்.
புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்தையும் எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்த் தாயை தான் வழிபடுகிறோம் என்றாலும் புதுச்சேரிக்கு என்று தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கும் போது அதற்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும். கிராமங்கள் தோறும் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தி கண் தானம் குறித்து விழுப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முழுமையான பார்வை பெற்ற நாடாக இந்தியா உருவாக வேண்டும்" என்று பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT