Published : 26 Aug 2022 10:18 PM
Last Updated : 26 Aug 2022 10:18 PM
கோவை: கல்வியுடன் நல்லொழுக்கத்தை கற்றுத் தரும் கடமை அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உண்டு என்று கோவையில் நடந்த கல்லூரி விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
கோவை பீளமேட்டில் இயங்கி வரும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியின் பவளவிழா கல்லூரி அரங்கில் வெள்ளிக்கிழமை (ஆக.26) மாலை நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, பவளவிழா திறந்தவெளி அரங்கம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நாட்டிலேயே தமிழகம் உயர்கல்வியில் சிறந்த விளங்கும் மாநிலமாக விளங்குகிறது. கல்வியில் சிறந்த மாநிலமாக நாம் இன்றைக்கு உயர்ந்து நிற்கிறோம். 100 ஆண்டுகளுக்கு முன்னால் நீதிக்கட்சியின் ஆட்சியில் கல்விக்காக போட்ட விதையே இதற்கு காரணம். இந்த வளர்ச்சியை இந்தியாவே வியந்து பார்க்கிறது.
இத்தகைய அறிவுசக்தியை வளர்ப்பதை தமிழக அரசு தன் கடமையாக நினைத்து செயல்படுகிறது. பள்ளிக் கல்வித்துறை, உயர்கல்வித்துறை உன்னதமான பல்வேறு திட்டங்களை இன்று செயல்படுத்துகின்றன. நான் மட்டுமல்ல, தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவரும் ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக இருக்கவே, நான் முதல்வன் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. அடுத்த 5 , 10 ஆண்டுகளில் தமிழக இளைஞர்கள் அடைய இருக்கக்கூடிய தகுதியையும், உயர்வையும் நினைத்து நான் பூரிப்படைகிறேன். அனைத்து ஆற்றல்களும் கொண்டவர்களாக நமது மாநில இளைஞர்கள் இருக்கிறார்கள்.
போதைப் பழக்கத்துக்கு அடிமை
அதேநேரத்தில், போதைப் பொருள் பழக்கத்துக்கு ஒருசில இளைஞர்கள், இளம் பெண்கள் அடிமையாவது எனக்கு கவலையளிக்கிறது. அதற்காகவே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நாம் தொடர்ந்து நடத்துகிறோம். அந்தப் பழக்கத்துக்கு அடிமையானவர்களை நாம் மீட்டாக வேண்டும். புதியதாக யாரும் அடிமையாகாமல் தடுத்தாக வேண்டும். ஒரு மாணவன் போதைக்கு அடிமையாவது, அவருக்கும், அவரது குடும்பத்துக்கு மட்டுமல்ல இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கே அது தடையாகிறது.
நல்ல கல்வியுடன் நல்லொழுக்கத்தை கற்றுத்தரும் கடமை அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உண்டு என தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி நிறுவனங்களுக்கும் நான் வேண்டுகோளாக வைக்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.இந்த விழாவில் மின்துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT