Published : 26 Aug 2022 07:48 PM
Last Updated : 26 Aug 2022 07:48 PM
மதுரை: தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணிக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லையைச் சேர்ந்த எஸ்.பி.முத்துராமன் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 13 ஏக்கர் பரப்பளவில் புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டப்படுகிறது. ரூ.119 கோடி செலவில் 6 மாடிகளுடன் ஆட்சியர் அலுவலகம் கட்டும் பணியை நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமானப் பணிக்கு மாநில அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெறவில்லை.
சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெறாமல் அரசு கட்டிடங்களை கட்டுவது விதிமீறலாகும். இதனால் சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணி மேற்கொள்ளும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. சுற்றுச்சூழல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "தென்காசி ஆட்சியர் அலுவலகத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை. உரிய வரைபட அனுமதி பெறாமல் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.
அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், "சுற்றுச்சூழல் அனுமதிக்கு விண்ணப்பித்து உள்ளோம். ஆட்சியர் அலுவலகம் கட்டுவது பொதுநலன் சார்ந்தது. இதனால் கட்டுமானப் பணிக்கு தடை விதிக்கக் கூடாது" என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், "நீதிமன்றம் உள்ளிட்ட எந்த கட்டுமானப் பணிகள் மேற்கொண்டாலும் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெற வேண்டும். சுற்றுச்சூழல் அனுமதி பெறாததால் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணிக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. 4 வாரங்களில் சுற்றுச்சூழல் அனுமதி பெற்று கட்டுமானப் பணியை தொடரலாம்" என உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT