Published : 26 Aug 2022 05:41 PM
Last Updated : 26 Aug 2022 05:41 PM

தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி மனு

சென்னை: அரசியல் உள்நோக்கத்துடன் தன் மீது பதிவான வழக்குகளை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய கோரி அறப்போர் இயக்கம், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டு, குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்தது.

இந்நிலையில், ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி உள்பட 17 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், "உயர் நீதிமன்றம் நியமித்த அதிகாரி மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையை புறக்கணிக்க அரசு முடிவெடுத்துள்ளது. இது விசாரணை நடைமுறையை தவறாக பயன்படுத்துவதை போன்றது.

புகார்தாரர்கள் தெரிவித்த 14 குற்றச்சாட்டுகள் குறித்து விரிவாக விசாரித்து தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை என்ற ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை மீறி வழக்குப்பதிவு செய்ததற்கான காரணம் குறித்து முதல் தகவல் அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை" என்று கூறியிருந்தார்.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என். மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "ஊழல் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனை சட்டத்தின் அடிப்படையில் எஸ்.பி.வேலுமணி மீது பதிவான இரு வழக்குகளை எதிர்த்து தனி நீதிபதி முன்பாகத்தான் வழக்கு தொடர்ந்து வாதிட வேண்டும். எனவே இந்த வழக்கு இரு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு உகந்தல்ல" என்று வாதிடப்பட்டது.

அப்போது எஸ்.பி.வேலுமணி தரப்பில், "புகாரில் முகாந்திரம் இல்லை என்ற ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையை எதிர்த்து அரசோ, மனுதாரர்களோ வழக்கு தொடரவில்லை. தணிக்கைக் குழு அறிக்கையில் தனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுக்களும் கூறப்படாத நிலையில், அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 30-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x