Published : 18 Jun 2014 09:17 AM
Last Updated : 18 Jun 2014 09:17 AM

கிராமங்களில் மண முறிவுகளை தடுக்கும் ‘பெண்கள் வழக்கியல் கல்வி மையம்’

’’ஒரு குடும்பத்தில் ஆண் பலவீன மாகும்போது அந்தக் குடும்பத்தின் அடித்தளமே சிதைந்து சின்னா பின்னமாகிவிடுகிறது. மதுவின் கொடுமையால் இன்றைக்கு பல குடும்பங்கள் அப்படித்தான் சிதைந்து கொண்டிருக்கின்றன’’ என்கிறார் பெண் வழக்கறிஞர் சரவண பிஜு.

மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 40 கிராமங்களை தத்தெடுத்து கடந்த 10 ஆண்டுகளாக நெறிப்படுத்திக் கொண்டிருக்கிறது ’பெண்கள் வழக்கியல் கல்வி மையம்’. மண முறிவுகளை தடுத்தல், கிராமப் பெண்களை தலைமைப் பண்புடையவர்களாக தயார்படுத்துதல், அவர்களுக்கு சட்ட நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தல் இதுதான் இந்த மையத்தின் முக்கியப் பணி. மையத்தின் செயல்பாடுகள் குறித்து நம்மிடம் பேசினார் அதன் இயக்குநர் வழக்கறிஞர் சரவண பிஜூ.

“முன்பெல்லாம் கிராமங்களில் அவ்வளவு எளிதில் மண முறிவுகள் நடந்துவிடாது. ஆனால், பெரும் பகுதி ஆண்கள் குடிக்கு அடிமையாகிவிட்டதால் இப்போது கிராமங்களிலும் மண முறிவுகள் சகஜமாகிவிட்டன. ஆண்கள் குடிக்கு அடிமையாகிவிடுவதால் பல குடும்பங்களில் பெண்கள் தவறான வழிகளை தேடுகிறார்கள். இதனால் அந்தக் குடும்பமே கடுமையாக பாதிக்கப்படுகிறது. கள்ளக் காதல், கள்ளத் தொடர்பு இதற்கெல்லாம் அடித்தளமே இன்றைக்கு மதுப் பழக்கமாகத்தான் இருக்கிறது.

இந்த நிலையை மாற்றுவதற்கா கத்தான் நாங்கள் இந்த கிராமங்களை தத்து எடுத்திருக்கிறோம். 40 கிராமங்களிலும் ஒரு பெண்மணியை தலைவராக நியமித்திருக்கிறோம். இவர்களை தவிர்த்து, எங்களிடம் 10 தன்னார்வலர்கள் இருக்கிறார்கள். இந்த 40 தலைவிகளுக்கும் நாங்கள் கிட்டத்தட்ட ஒரு வழக்கறிஞர் அளவுக்கு பயிற்சி கொடுத்திருக்கிறோம். கிராமத்தில் நடக்கும் பிரச்சினைகளை இவர்களே செம்மையாக கையாண்டு தீர்வை சொல்லிவிடுவார்கள். முடியாதபட்சத்தில் எங்களிடம் பிரச்சினையை கொண்டு வருவார்கள்.

நாங்கள் கணவன், மனைவி இருவரையுமே கவுன்சலிங்கிற்கு அழைப்போம். ஆண்கள் வர மறுத்தால் அந்த கிராமத்துக்கே நாங்கள் போவோம்.

நாங்கள் அங்கு போவதால் எங்களுக்கு ஏதும் பிரச்சினைகள் வந்துவிடக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே போலீஸுக்கு தகவல் சொல்லிவிடுவோம். கவுன் சலிங்கிலும் சமாதானம் ஆகா விட்டால்தான் நாங்களே விஷயத்தை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்று தீர்வு காண்கிறோம்.

பெரும்பாலும் நீதிமன்றம் வரைக்கும் போகவிடமாட்டோம். நாங்கள் தத்தெடுத்திருக்கும் கிரா மங்களிலிருந்து ஆண்டுக்கு 300 புகார்கள் வருகின்றன. இவற்றில் பெரும்பாலான குடும்பங்களை நாங்களே சமாதானம் செய்து வைத்துவிடுவோம். இதனால், இந்த 40 கிராமங்களிலும் கடந்த 10 ஆண்டுகளில் க்ரைம் ரேட் வெகுவாக குறைந்திருக்கிறது. தற்கொலைகள் மற்றும் குடும்ப வன்முறைகளும் குறைந்திருக்கின்றன.

இந்தப் பணிகளை செய்துகொண்டே இன்னொரு பக்கம், 13 வயதிலிருந்து 17 வயதுவரை உள்ள கிராமத்து மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு குடியின் தீமைகளை கதையாக எழுதிக் கொடுத்து நாடகமாக நடிக்க வைக்கிறோம்.

அந்த மாணவர்கள் தங்களது பள்ளிகளிலும் கிராமத்திலும் இந்த நாடகங்களை நடித்துக் காட்டுகிறார்கள். கிராமங்களில் உள்ள எங்கள் மையத்தின் தலைவிகளுக்கு கிராமத்திலுள்ள ஒவ்வொருவரைப் பற்றியும் தனிப்பட்ட முறையில் தெரியும் என்பதால் எங்களிடம் யாரும் பொய்ப் புகார் தர முடியாது.

கிராமத்துப் பெண்களுக்கான பிரச்சினைகளை எங்களது கிராமத் தலைவிகள் கவனித்துக் கொள்வதால் நகரத்து பெண்களின் பிரச்சினைகளை நாங்கள் கவனிக்கிறோம். நகரத்துப் பெண்களின் பிரச்சினைகள் குறிப்பாக, வீட்டில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் வெளியில் தெரிவதில்லை. இதுபோன்ற பெண்களுக்கும் வேலைக்குச் செல்லும் பெண்கள் பணி செய்யும் இடத்தில் எதிர்கொள்ளும் தொல்லைகளிலிருந்து விடுபடுவது குறித்தும் உரிய சட்ட வழிகாட்டுதல்களையும் கவுன்சலிங்கும் கொடுத்து வருகிறோம்’’ என்று சொன்னார் சரவண பிஜு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x