Published : 26 Aug 2022 06:55 AM
Last Updated : 26 Aug 2022 06:55 AM

70-வது பிறந்தநாள் கொண்டாட்டம் | தொண்டர்களை சந்தித்தார் விஜயகாந்த்: ஆளுநர் தமிழிசை, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து

தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது 70-வது பிறந்தநாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று தொண்டர்களை சந்தித்தார். அவருக்கு வாழ்த்து தெரிவி்ப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்டு வந்திருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள். | படங்கள்: பு.க.பிரவீன் |

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது பிறந்தநாளையொட்டி கட்சித் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார். அவருக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்தின் 70-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறுபகுதிகளில் இருந்து ம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அதிகாலை முதலே தலைமை அலுவலகத்துக்கு வரத் தொடங்கினர்.

பகல் 12 மணி அளவில் விஜயகாந்த் வந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அலுவலகத்தின் முகப்பு பகுதியில் அமர்ந்து, தொண்டர்களை பார்த்து கையசைத்த விஜயகாந்த், பின்னர் கைகூப்பி அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார்.

நிர்வாகிகளும், தொண்டர்களும் நீண்ட வரிசையில் நின்று ஆளுயரமாலை, பூங்கொத்து, பொன்னாடைஉள்ளிட்டவற்றை கொடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.சுமார் 10 நிமிடங்களுக்கு தொண்டர்களை சந்தித்த விஜயகாந்த், பின்னர் அவர்களுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘வானத்தைப் போல பரந்த மனதுடன் இருப்பதால் அனைவரின் அன்பையும், மரியாதையையும் பெற்று நெறஞ்ச மனசுடன் வலம் வந்து கொண்டிருக்கும் அண்ணன் விஜயகாந்துக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

தேமுதிக அலுவலக முகப்பில் அமர்ந்தபடி,
தொண்டர்களை பார்த்து கையசைத்த விஜயகாந்த். அருகில் பிரேமலதா.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்தியில், ‘என் இனிய நண்பரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு 70-வது வயது. அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். உடல் நலம் பெற்று துடிப்பான மனிதராக அவர் வலம்வர வேண்டும் என்பதே எனது ஆசை. நலம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்’ என கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர்கள் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர், பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வி.கே.சசிகலா உள்ளிட்டோரும் விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் சங்க பொருளாளரான நடிகர் கார்த்தி, நடிகை வடிவுக்கரசி, நடிகர்கள் ரோபோ சங்கர், மீசை ராஜேந்திரன், முத்துக்காளை, போண்டா மணி உள்ளிட்டோர் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதுபற்றி நடிகர் கார்த்தி கூறும்போது, “விஜயகாந்த் என்றால் அன்பு. என்னை பார்த்தவுடன் கையை பற்றிக் கொண்டார். நடிகர் சங்கம் சார்பில் அவருக்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்ததில் மகிழ்ச்சி” என்றார்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது: கரோனா காலம் தவிர, தனது அனைத்து பிறந்தநாளிலும் விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்துவருகிறார். தற்போது தொண்டர்களை சந்தித்ததால் அவர் மிகவும்மகிழ்ச்சியாக இருக்கிறார்.

எங்கள் கட்சி எழுச்சியுடன்தான் இருக்கிறது. உள்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. அது இம்மாதம் முடிந்துவிடும். செயற்குழு, பொதுக்குழு கூட இருக்கிறது. எங்களது பணிகளை தொடர்ந்து செய்வோம்.

மக்கள் பிரச்சினைக்கு முதல் ஆளாக நின்று நீதிக்காக போராடுவோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியின் செயல்பாடு குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேமுதிக துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, விஜயகாந்தின் மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x