Published : 23 Oct 2016 12:13 PM
Last Updated : 23 Oct 2016 12:13 PM
கோவையில் உள்ள பஞ்சாலை மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றும் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள், தீபாவளி போனஸ் கிடைக்குமா என்று பரிதவித்துக் காத்திருக்கின்றனர்.
ஒரு காலத்தில் தமிழகத்திலேயே தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடும் நகரமாக கோவை இருந்தது. அதற்கு காரணம், இங்கு நிறைந்திருக்கும் பஞ்சாலைகள் மற்றும் இன்ஜினீயரிங் தொழிற்சாலைகள். அந்த நிறுவனங்கள் போனஸை அள்ளிக் கொடுத்தன.
ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன் பஞ்சாலைத் தொழிலாளி வாங்கிய தீபாவளி போனஸ் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை. அப்போது ஒரு பவுன் தங்கம் ரூ.700-க்கு விற்றது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
மேலும், அப்போதைய பத்திரிகைகளில், தீபாவளிக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பிருந்தே, பஞ்சாலை அதிபர்களுடன் தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை விவரம் இடம் பெற்றிருக்கும். மற்ற எல்லா வர்த்தகங்களையும் தீர்மானிக்கக்கூடிய சக்தியாக பஞ்சாலைத் தொழிலாளிகள் இருந்தன. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று கோவை புகழப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம்.
ஆனால், தற்போது பஞ்சாலைகள் நசிவை சந்தித்துக் கொண்டிருப்பதாகவும், தொழிலாளர்கள் பரிதவித்துக் கொண்டிருப்பதாகவும் தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
கோவையைப் பொறுத்தவரை, தற்போது 560 பஞ்சாலைகள் செயல்படுகின்றன. அதில் 40 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் 4 ஆயிரம் பேர் மட்டுமே நிரந்தரத் தொழிலாளர்கள். அதேபோல, 10 இன்ஜினீயரிங் தொழிற்சாலைகளில் 40 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் 10 ஆயிரம் பேர் மட்டுமே நிரந்தரத் தொழிலாளர்கள். மற்றவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தினக்கூலிகள்தான். இதுதவிர, நடுத்தர, சிறிய அளவிலான தொழிற்சாலைகளும் ஆயிரக்கணக்கில் உள்ளன.
இவற்றில் ஏறத்தாழ 2 லட்சம் கூலித் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, அந்தந்த நிறுவனத்தின் உரிமையாளராகப் பார்த்து வழங்குவதுதான் போனஸ். அது, வெறும் ரூ.500-ஆகவும் இருக்கலாம். ரூ.1,000-ஆகவும் இருக்கலாம். அதை யாரும் எதிர்த்துக் கேள்வி கேட்கமுடியாது.
இன்ஜினீயரிங் தொழிற் சாலைகளிலாவது 20 சதவீதம் பேர் நிரந்தரத் தொழிலாளர்கள் உள்ளனர். தொழிற்சங்கங்கள் உள்ளன. ஆனால் பஞ்சாலைகளில் என்டிசி (தேசிய பஞ்சாலைக்கழகம்) ஆலைகள் தவிர, தனியார் ஆலைகளில் நிரந்தரப் பணியாளர்களே இல்லை. எனவே, உரிமையுடன் போனஸ் தொகையைப் கேட்டுப்பெற அவர்களால் முடியாது என்கின்றனர் தொழிற்சங்கத் தலைவர்கள்.
தொழிலாளர்களின் பொற்காலம்
தொழிலாளர்கள் உரிமைகளைப் பெற்றுத்தரும் பொறுப்பு தொழிற்சங்கங்களுக்கு உள்ளது. 1980-ம் ஆண்டுகளில் பஞ்சாலைகளில் மட்டும் எல்பிஎப், என்எல்ஓ, எச்எம்எஸ், ஏஐடியுசி, சிஐடியு தொழிற்சங்கங்களில் சுமார் 60 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தனர்.
அப்போது, மாவட்டத்தில் சுமார் 50 பஞ்சாலைகளில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றினர். அதற்கு 10 ஆண்டுகளுக்கு முன் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 மடங்காக இருந்தது. இந்த காலகட்டம், பஞ்சாலைத் தொழிலாளர்களின் பொற்காலம் என்று கூறலாம்.
ஆனால் இப்போது ஓரிரு தொழிற்சங்கங்களே பஞ்சாலைகளில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களாக உள்ளன. 14 பஞ்சாலைகளில் மட்டுமே இவை உள்ளன.
சூலூர் வட்டம் கண்ணம்பாளையம் பேரூராட்சிப் பகுதியில் 27 பஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களுக்கு இஎஸ்ஐ, பி.எஃப்., போனஸ் என எந்த உரிமையும் இல்லை. தொழிற்சங்க உரிமையும் இல்லை.
ஒரு தொழிலாளிக்கு தினமும் ரூ.250 மட்டுமே கூலியாகத் தருகின்றனர். இவர்களுக்கு, தீபாவளிக்கு ஓரிரு நாட்கள் முன், சில ஆயிரங்கள் போனஸாக வழங்கப்பட்டாலே ஆச்சரியம்தான் என்கிறார்கள் தொழிற்சங்கத்தினர்.
கொள்கைகள் இல்லாததே காரணம்
இதுகுறித்து சிஐடியு தொழிற்சங்கத் தலைவரும், பஞ்சாலைகள் சங்கச் செயலாளருமான சி.பத்மநாபன் ‘தி இந்து’விடம் கூறியது:
மத்திய, மாநில அரசுகளுக்கு பஞ்சாலைத் தொழில் மற்றும் தொழிலாளர்கள் குறித்து எந்தக் கொள்கையும் இல்லாததால், இன்று அத்தொழில் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.
அதனால், எப்போதும் இல்லாத வகையில் தற்போது நூல் தேக்கம் ஏற்பட்டுள்ளது. அதை கேட்பதற்கே ஆளில்லை. முன்பு, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கோவையிலிருந்து நூல் ஏற்றுமதி செய்யப்பட்டது. தற்போது, வியட்நாமில் நூல் கொள்முதல் செய்கிறது சீனா.
வியட்நாமில் குறைந்த கூலியில் ஆட்கள் கிடைப்பதால், நூலும் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதே இதற்கு முக்கியக் காரணம்.
இதனால், ஏற்கெனவே சுரண்டப்பட்ட நிலையில் உள்ள கோவை பஞ்சாலைத் தொழிலாளர்களின் நிலை, மேலும் மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது.
கோவையில் தற்போதும் பஞ்சாலைத் தொழிலாளர்களே அதிகம் உள்ளனர். அவற்றில் பணிபுரியும் 40 ஆயிரம் தொழிலாளர்களே போனஸ் கிடைக்குமா என்று காத்திருக்கும்போது, சிறு ஆலைகள், நிறுவனங்களில் பணிபுரியம் தொழிலாளர்களின் நிலையோ இன்னும் மோசம்.
தற்போது பஞ்சாலைகளில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளி, ஒரு நாளைக்கு ரூ.450 முதல் ரூ.550 வரை சம்பளம் பெறுகிறது. ஆனால், தினக் கூலித் தொழிலாளர்கள் ரூ.250 முதல் ரூ.350 வரை வாங்குகின்றனர்.
இந்த தொழிலில் ஒரிசா, ஜார்க்கண்ட், பிஹாரைச் சேர்ந்தவர்கள் 20 சதவீதம் பேர் உள்ளனர். 1990-ல் பஞ்சாலைகள் நெருக்கடி நிலையைச் சந்திக்கத் தொடங்கியபோது, தொழிற்சங்கங்கள் இல்லாமல் இருந்தால், தொழிலாளர்களுக்கு சம்பளத்தை குறைத்துக் கொடுத்து, தொழிலை சிறப்பாக நடத்திவிடலாம் என்று பஞ்சாலை முதலாளிகள் கருதினர்.
ஆனால், தற்போதோ சம்பளமே இல்லாமல் நூல் உற்பத்தியில் தொழிலாளி ஈடுபட்டால்கூட, பஞ்சாலைகளை லாபகரமாக நடத்த முடியாது. அரசின் தொழில் கொள்கைகளே ஒரு தொழிலில் லாபம், நஷ்டத்தை தீர்மானிக்கும் என்பதை முதலாளிகள் உணர்ந்திருக்கிறார்கள்.
தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடும் தொழிற்சங்கங்கள் இருந்திருந்தால், 40 ஆயிரம் தொழிலாளர்களும் வீதிக்கு வந்துப் போராடியிருப்பார்கள். இதைப் பார்க்கும் அரசும், பஞ்சாலைகளின் வளர்ச்சிக்குச் சாதகமான கொள்கை முடிவுகளை எடுத்திருக்கும். தொழிலும், தொழிலாளர்களும் பாதுகாக்கப்பட்டிருப்பார்கள். இந்த விஷயத்தில் முதலாளிகள், தங்களை தாங்களே அழித்துக்கொண்டார்கள் என்பதே உண்மை.
தற்போது, நாட்டின் ஒட்டுமொத்த நூல் உற்பத்தியில் 45 சதவீதம் தமிழ்நாட்டில்தான் தயாராகிறது. மகராஷ்டிரா, மேற்குவங்கம், குஜராத் உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் மீதி உற்பத்தியை பிரித்துக் கொள்கின்றன.
இந்தியாவிலேயே திறமையான பஞ்சாலைத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளனர். ஆனால், அவர்களின் வாழ்க்கை பரிதாபமான நிலையில் உள்ளது.
2014-ல் பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய அரசு ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழுவின் பிரதிநிதிகள் கோவை வந்திருந்தனர். அவர்களிடம் பேசிய ஒரு பஞ்சாலைத் தொழிலாளி, “நான் ரூ.740 சம்பளம் வாங்கிய காலத்தில், என் வீட்டுக்கு அருகில் இருந்த அரசு ஊழியர் ரூ.160 மாத சம்பளம் பெற்றார்.
தற்போது, அவர் ஓய்வுபெற்று, மாதம் ரூ.22 ஆயிரம் ஓய்வூதியம் பெறுகிறார். நான் மாதம் ரூ.740 ஓய்வூதியம் பெறுகிறேன்.பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை? என்று வேதனையுடன் தெரிவித்தார்.
இத்தகைய நிலையில் உள்ள பஞ்சாலைத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, அரசு முன்வர வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT