Published : 26 Aug 2022 09:59 AM
Last Updated : 26 Aug 2022 09:59 AM
கோவில்பட்டியில் நேற்று மாலை பெய்த பலத்த மழையால் இளையரசனேந்தல் ரயில்வே சுரங்கப்பாதையில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.
இதில் தனியார் பள்ளி வேன் சிக்கியது. குழந்தைகள் பத்திர மாக மீட்கப்பட்டனர்.
கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று காலை வெயில் வாட்டியது. மதியம் 2 மணிக்கு மேல் மேகக்கூட்டம் திரண்டது. சுமார் 3.30 மணியில் இருந்து 4.45 மணி வரை 1.15 மணி நேரம் இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
பிரதான சாலை, மாதாங்கோவில் தெரு, தெற்கு பஜார், மந்தித்தோப்பு சாலை, புதுரோடு ஆகிய பகுதிகளில் பெருக்கெடுத்த மழைநீர் அங்குள்ள ரயில்வே சுரங்கப்பாதைகளில் குளம் போல் தேங்கியது.
பள்ளி வேன் சிக்கியது
இளையரசனேந்தல் ரயில்வே சுரங்கப்பாதையில் சுமார் 5 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றது. அப்போது மாலையில் பள்ளி முடிந்து மாணவ, மாணவிகளை வீடுகளுக்கு அழைத்துச் சென்ற தனியார் பள்ளி வேன் ரயில்வே சுரங்கப்பாதையை கடந்த போது அங்கு தேங்கியிருந்த தண்ணீரில் சிக்கி நின்று விட்டது.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கு சென்று வேனில் இருந்த குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். இதையடுத்து இளையரசனேந்தல் சாலை வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
கோவில்பட்டியில் உள்ள இளையரசனேந்தல் ரயில் தண்டவாளப் பகுதியில் மேம்பாலம் அமைக்க முதலில் திட்டமிடப்பட்டது. இதுதொடர்பாக நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், சில வியாபாரிகள், அரசியல் பிரமுகர்கள் அழுத்தம் காரணமாக மேம்பாலத்துக்கு பதில் சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
ரூ.13 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை கடந்த 2015-ம் ஆண்டு திறக்கப்பட்டது. கட்டப்பட்ட நாள் முதல் மழை பெய்யும் போதெல்லாம் சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி வாகனங்கள் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது.
இந்த சுரங்கப்பாதையின் இருபுறமும் அணுகு சாலை அமைக்கும் பணி 2 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் சுரங்கப்பாதையை சுற்றியுள்ள ஜமீன்பேட்டைத் தெரு, பெரியார்தெரு, கோபால்செட்டி தெரு, நடராஜபுரம்தெரு உள்ளிட்ட பகுதி மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
தற்போது பருவமழைக் காலம் நெருங்கும் நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனப் போக்கால் நாங்கள் தொடர்ந்து சிரமத்தை சந்தித்து வருகிறோம் என அப்பகுதி மக்கள் குற்றஞ் சாட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT