Published : 26 Aug 2022 04:40 AM
Last Updated : 26 Aug 2022 04:40 AM
திருவண்ணாமலை அண்ணா மலை அடிவாரத்தில் கழிவுநீர் கலந்து அசுத்தமாக உள்ள பிள்ளைக்குளத்தை சீரமைத்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தி.மலை நகரில் மகாதீபம் ஏற்றப்படும் அண்ணாமலையின் அடிவாரத்தில் பிள்ளைக்குளம் (பே கோபுர தெரு அருகே) உள்ளது. மழைக்காலங்களில், மகா தீப மலையில் இருந்து வழிந்து வரும் மழைநீர், பிள்ளைக்குளத்தில் நிரம்பி இருக்கும். இவ்வாறு தேங்கி நிற்கும் மழைநீரை, முற்காலத்தில் குடிக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
மேலும், கிரிவலம் செல்லும் சாதுக்கள், பக்தர்கள் உள்ளிட் டோர் பிள்ளைக்குளத்தில் நீராடி யுள்ளனர் என மூத்த குடிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில், மலையடி வாரத்தில் குடியிருப்புகள் உரு வானதை அடுத்து, பிள்ளைக் குளம் தனது தன்மையை இழந்துவிட்டது. குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவுநீர் தேங்கியதால், பிள்ளைக்குளத்தில் துர்நாற்றம் வீசியது. இதனால், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டது. புதர்கள் வளர்ந்து, கழிவுநீர் சேமிப்பு குட்டையாக உருவெடுத்தது.
எனவே, பிள்ளைக்குளத்தை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.
4 ஆண்டுகளாக சீரமைப்பு
இதற்கிடையில், திமுக சார்பில் தமிழகம் முழுவதும் மேற் கொள்ளப்பட்ட குளம் சீரமைப்பு பணியில், பிள்ளைக்குளம் இடம்பெற்றது. இதையடுத்து, கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ச்சியாக பிள்ளைக் குளத்தை, திமுகவினர் சீரமைத்து கொடுத்தனர். அதன்பிறகு சில மாதங்கள் பிள்ளைக்குளம் தூய்மையாக உள்ளது.
பின்னர், கவனிக்க யாரும் இல்லாததால், தற்போது அசுத்தமாக உள்ளது. அதிமுக ஆட்சியை தொடர்ந்து நடைபெறும் திமுக ஆட்சியிலும், குளத்தை சீரமைத்து பாதுகாக்க முன்வராததால் சுகாதார சீர்கேட்டுடன் உள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “பிள்ளைக் குளத்தில் கழிவுநீரும் கலப்பதால், தூய்மை இல்லாமல் உள்ளது. மேலும் குளத்தில் பாசி படர்ந்து படுமோசமாக உள்ளது. குளக்கரையை மது அருந்தும் கூடாரமாக மாற்றிவிட்டனர்.
குளக்கரை படிக்கட்டில் அமர்ந்து இரவு, பகல் பாராமல் மது குடிக்கின்றனர். மேலும் பாட்டிலை, குளத்தில் வீசியும், குளக்கரை படிக்கட்டில் வீசியும் உடைத்துவிட்டு செல்கின்றனர். இதனால், பிள்ளைக்குளத்தை கடந்து செல்ல மக்கள் அச்சப் படுகின்றனர். பிள்ளைக்குளத்தை சீரமைத்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT