Last Updated : 13 Oct, 2016 09:24 AM

 

Published : 13 Oct 2016 09:24 AM
Last Updated : 13 Oct 2016 09:24 AM

அம்பத்தூரில் நிதி ஒதுக்கியும் தொடங்கப்படாத சுரங்கப் பாதை பணி

அம்பத்தூர் ரயில் நிலையத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு சுரங்கப்பாதை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டும் இதுவரை அதற்கான பணிகள் தொடங்கப் படவில்லை. இதனால், அங்கு அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை சென்ட்ரல்-திருவள்ளூர் ரயில் மார்க்கத்தில் உள்ள பிரதான ரயில் நிலையமாக திகழ்கிறது அம்பத்தூர் ரயில் நிலையம். அம்பத்தூர் 85-வது வார்டில் அமைந்துள்ள ஆசிரி யர் காலனி, வரதராஜபுரம், காமராஜபுரம், ராமாபுரம், மங்களபுரம் மற்றும் அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளுக்குச் செல்பவர்கள் இந்த ரயில் நிலையத்தை கடந்து செல்கின்றனர். நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள கடவுப் பாதையில் (கேட்) சென்று வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு சுரங்கப்பாதை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இதுவரை இதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை.

இதுகுறித்து, அம்பத்தூரை சேர்ந்த எஸ்.பி.அரிகிருஷ்ணன் என்பவர் கூறும் போது, ‘‘அம்பத்தூர் ரயில் நிலையம் வழியாக நாளொன்றுக்கு நூற்றுக் கணக்கான புறநகர், விரைவு ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், இந்தக் கடவுப் பாதை அடிக்கடி மூடப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பிற பகுதிகளுக்குச் செல்ல சுமார் 2 கி. மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. தற்போது இந்தக் கடவுப் பாதையை கடக்க ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்து வதில்லை. உயரம் அதிகமாக இருப்பதால் வயதானவர்கள், மாற் றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள், நோயாளிகள் இந்த மேம்பாலத்தை பயன்படுத்துவதில்லை.

எனவே பொதுமக்களின் வசதிக் காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு சுரங்கப் பாதை அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை’’ என்றார்.

இதுகுறித்து, ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘அம்பத்தூர் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் உள்ளது. இதற்கான நிலம் தேர்வு செய்வது உள்ளிட்ட அடிப்படை சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன் பிறகு சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x