Published : 17 Oct 2016 09:53 AM
Last Updated : 17 Oct 2016 09:53 AM
‘பாம்பு’ மணிமேகலை - மதுரை சுற்றுவட்டாரத்தில் இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. மக்கள் வசிக்கும் பகுதிகளில் பாம்புகள் புகுந்துவிட்டால் அதை லாவகமாக பிடித்துக் கொண்டுபோய் காட்டில் விடும் பாம்பு நேசர் மணிமேகலை. பாம்புகளுக்காக பரிதாபப்படும் இவரது சொந்த வாழ்க்கையில் சோகம் சூழ்ந்து நிற்கிறது.
சிறுவயதிலேயே தந்தை பிரிந்து சென்றுவிட்டதால், 4 பெண் குழந்தைகளை ஆளாக்கு வதற்கு ரொம்பவே சிரமப்பட்டார் மணிமேகலையின் தாய். இதனால் பத்தாம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடர முடியாத மணிமேகலை, அவ்வப்போது கிடைத்த வேலைகளைச் செய்து நாட்களை நகர்த்த ஆரம்பித்தார். பாம்பு பிடிக்கப் போகும் இடங்களில் இஷ்டப்பட்டு தரும் அன் ளிப்புகளும் கைகொடுத்தது.
தனது மகள்களில் 3 பேருக்கு கஷ்டப்பட்டு திருமணம் செய்து வைத்து கரைசேர்த்த மணிமேகலையின் தாய் இவருக்கும் திருமணம் செய்துவைக்க முயற்சித்தார். ஆனால், கண்ணெதிரே தனது சகோதரிகள் கண்ணைக் கசக்கி நிற்பதைப் பார்த்துக் கொண்டிருக் கும் மணிமேகலை, ‘திருமணமே வேண்டாம்’ என தவிர்த்தார்.
பிறகு நடந்தவைகளை அவரே விவரிக்கிறார். “கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டாலும் நமக்காக துடிக்கிறதுக்கு ஒரு சொந்தம் வேணும்னு நினைச்சேன். அதுக்காக ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடிவெடுத்தேன். மூணு வருசத்துக்கு முந்தி அப்படி எனக்காக ஆண்டவன் தந்த வரம் என் மகள் மான்ஸ்ரீ.
இந்தக் குழந்தைய வேண்டாம்னு பெத்தவங்க நினைச்சாங்க. நான் ‘குழந்தைய எங்கிட்ட குடுங்க’ன்னு கேட்டு வாங்கிட்டு வந்து எந்தக் குறைவும் வைக்காம வளர்க்க ஆரம்பிச்சேன். ஆனா, என் அக்காமார் மூணு பேரையும் சோதிச்ச ஆண்டவன், எனக்கு வேற கணக்குப் போட்டு வைச்சிட்டாரு. கர்ப்பப்பை வாயில சின்னதா ஒரு கட்டி இருக்குன்னு சொன்னாங்க. அது கேன்சர் கட்டியா மாறவும் வாய்ப்பிருக்கு; ஆபரேஷன் பண்ணணும்னு சொன்னாங்க.
மகள் மான்ஸ்ரீயுடன் மணிமேகலை.
பாம்பு பிடிக்கப்போன இடங் கள்ல பழக்கமான அதிகாரிகள் சிலரிடம் உதவி கேட்டுப் போனேன். சிலபேரு கைவிரிச்சாங்க; சிலபேரு கைம்மாறா வேற எதையோ என் கிட்ட எதிர்ப்பார்த்தாங்க. ‘என்னடா உலகம் இது’ன்னு வெறுப்பா வந்துச்சு. இருந்தாலும் என் மகளுக் காக இன்னும் கொஞ்ச நாளைக்கு வாழ்ந்தே ஆக வேண்டிய கட்டாயம். வேறு சில நண்பர்களின் உதவி யோட 10 மாசத்துக்கு முந்தி அறுவை சிகிச்சை செஞ்சு கட்டியை எடுத் தாச்சு. கேன்சரா இருந்தா மறுபடி யும் வளரும்னு சொன்னாங்க. பழையபடி தொந்தரவுகள் ஆரம்பிச் சிருக்கு. அதனால, மறுபடியும் ஸ்கேன் பண்ணிப் பாக்கணும்னு டாக்டர்கள் சொல்றாங்க.
கட்டியைப் பற்றி நான் கவலைப்படல. இதை ஏன் மூணு வருசத்துக்கு முந்தியே காட்டிக் குடுக்கலைன்னு கடவுள் மேலதான் கோபமா வருது. அப்பவே தெரிஞ்சிருந்தா எனக்குன்னு இன்னொரு சொந்தத்த உருவாக்கி இருக்க மாட்டேன்ல. மதுரையில வாடகை குடுக்க முடியாதுன்னு இப்ப ஆர்.எஸ்.மங்களத்துல அம்மா வீட்டுக்கே வந்துட்டேன். அம்மா வோட 1,500 ரூபாய் பென்சனும் இலவச ரேஷன் அரிசியும் எங்கள பசியில்லாம வைச்சிருக்கு. களை எடுக்கிறது, சந்தையில வியாபாரத்துக்குப் போறதுன்னு என்னால முடிஞ்சத செஞ்சிட்டு இருக்கேன். ஆனா, ஒடம்பு முன்ன மாதிரி ஒத்துழைக்க மறுக்குது.
மான்ஸ்ரீ-க்கு மூணு வயசாகிருச்சு. இப்போதைக்கு தனியார் பள்ளியில் படிக்கிறா. பள்ளிக் கூடத்துல ஐயாயிரம் ரூபாய் ஃபீஸ் கேக்குறாங்க. அதக்கூட செலுத்த முடியாத நிலையில நானிருக்கேன். முதலமைச்சர் காப்பீட்டுத் திட்ட அட்டை வாங்கிட்டதால இன்னொரு ஆபரேஷன்னாலும் எனக்குப் பெருசா செலவிருக்காது. என் னோட நினைப்பெல்லாம் மகளோட எதிர்காலம்தான். அவள சாதிக்க வைக்கணும்னு நினைக்கிறேன். யாராவது இரக்கம் காட்டுவார் களா?’’ நடுங்கிய குரலில் கேட்டார் மணிமேகலை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT