Published : 26 Aug 2022 04:18 AM
Last Updated : 26 Aug 2022 04:18 AM
திருப்பூர்: திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 15 மாதங்களில் ரூ.2.20 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. 3 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
திருப்பூர் திருமுருகன்பூண்டியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ என்ற தலைப்பிலான மண்டல மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.167.58 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மானியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் முதல்வர் பேசியதாவது:
நாட்டின் பின்னலாடை தலைநகரமாக திருப்பூர் திகழ்கிறது. அரிசி ஆலைகள், எண்ணெய் ஆலைகள், கறிக்கோழி பண்ணைகள், வெண்ணெய் என பல்வேறு தொழில்களின் மையமாகவும் திருப்பூர் உள்ளது. வேளாண்மைத் துறைக்கு அடுத்தபடியாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் தொழில்கள் சீராக வளர வேண்டும் என தமிழக அரசு நினைக்கிறது.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 15 மாதங்களில், தமிழக அரசு நடத்திய முதலீட்டாளர்கள் மாநாடுகள் வாயிலாக 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்து 727 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கடன் உத்தரவாத திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பிணையில்லா கடன்களை எளிதாக பெறலாம். இணையதளம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதில் தற்போது 6 வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டுக்குள் அனைத்து வங்கிகளும் இணைக்கப்படும். பட்டியலின, பழங்குடி மக்களுக்கான ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை தொடங்க ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதை, தொழில்துறையில் சமூகநீதியை நிலைநாட்டும் பணியாக நினைக்கிறோம். தொழில் வளர்ச்சியுடன், இத்தொழில்களுக்கு தேவையான பணியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்கும் பணியையும் செய்கிறோம்.
தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் படிப்பில் மட்டுமின்றி அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்பட்டு விளங்கும் வகையில், ‘நான் முதல்வன்’ என்ற திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டும் திட்டம் தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்படுகிறது. தற்போதைய 4-ம் தொழில் புரட்சி காலத்தில், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்ட தொழில் மையத்திலும், ஓர் ஏற்றுமதி வழிகாட்டு மையம் விரைவில் தொடங்கப்படும்.
ஒற்றைச்சாளர இணையதளம் வாயிலாக 10,555 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 9,212 விண்ணப்பங்களை ஏற்று சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 87 சதவீதம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
வீட்டு உபயோக ஜவுளிப் பொருட்களை, சிறப்பு வகை தொழில் பிரிவில் சேர்த்து, முதலீட்டு மானியம் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை ஏற்கப்படுகிறது. வீட்டு உபயோக ஜவுளிப் பொருட்கள் சிறப்பு வகை தொழில் பிரிவில் சேர்த்து முதலீட்டு மானியம் வழங்கப்படும். இதனால், ஆயிரக்கணக்கான நிறுவனங்களும், லட்சக்கணக்கான தொழிலாளர்களும் பயன்பெறுவர்.
புதிய, புதிய தொழில்களை அறிமுகம் செய்யுங்கள். இருக்கும் தொழில்களை வளப்படுத்திக் கொள்ளுங்கள். ஏராளமான தொழிலாளர்களுக்கு வாழ்க்கை கொடுங்கள். சமூக பொருளாதார சூழலை வளர்த்தெடுங்கள். இது ஒட்டுமொத்தமாக மாநிலத்தையும், நாட்டையும் வளர்க்கும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
கடன் உத்தரவாத திட்டம்
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நீண்டநாள் பிரச்சினையாக இருப்பது நிதி வசதி. இதற்கு தீர்வாக பிணையமின்றி எளிதில் நிதி பெறும் வகையில் தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டம் என்ற புதிய திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் ரூ.119 கோடிக்கான கடன் தொகையை திருப்பூர் மண்டலத்தைச் சார்ந்த முதல் 5 பயனாளிகளுக்கு முதல்வர் வழங்கினார்.
பொள்ளாச்சி, குண்டடம், உடுமலை, கே.பரமத்தி ஆகிய 4 இடங்களில் ரூ.36.60 கோடி மதிப்பில் ரூ.26.58 கோடி அரசு உதவியுடன் 4 புதிய கயிறு குழுமங்கள் அமைப்பதற்கான ஆணையையும் வழங்கினார்.
மாநாட்டில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலர் அருண் ராய், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் சிஜி தாமஸ் வைத்யன், மாவட்ட ஆட்சியர் சு.வினீத் உட்பட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT