Published : 26 Aug 2022 04:12 AM
Last Updated : 26 Aug 2022 04:12 AM
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதலின்போது ஆவணங்களை எடுத்துச் சென்றதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த புகாரின்பேரில், ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் மீது 7 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமையை ஏற்படுத்தும் நோக்கில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம், கடந்த மாதம் 11-ம் தேதி வானகரத்தில் நடைபெற்றது. அந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தனர்.
பூட்டியிருந்த அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு கலவரமானது. இதில், 47 பேர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து அதிமுக அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் கடந்த மாதம் 21-ம் தேதி ‘சீல்’ அகற்றப்பட்டு அலுவலகத்தின் சாவி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதன்பின், அதிமுக அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகம், கடந்த மாதம் 23-ம் தேதி ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ‘அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து கட்சி தொடர்பான அசல் பத்திரங்கள், ஆவணங்கள், ரசீதுகள், 2 கம்ப்யூட்டர்கள், கட்சி பெயரில் உள்ள சொத்து ஆவணங்கள், ரூ.31 ஆயிரம் பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தில் இருந்து ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர்’ என கூறியிருந்தார். அதுதொடர்பான வீடியோ ஆதாரங்களையும் அளித்திருந்தார்.
இந்த புகாரின்பேரில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மீது ராயப்பேட்டை போலீஸார் கடந்த 13-ம் தேதி வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது சட்ட விரோதமாக கூடுதல் (147), கலகம் செய்தல் (148), கட்டிடங்களில் திருடுதல் (380), நம்பிக்கை மோசடி (409), தகராறு செய்து இழப்பு ஏற்படுத்துதல் (427), குற்றம் புரிவதற்காக ஒளிந்து செல்லுதல் (454), கொலை மிரட்டல் (506)(2) ஆகிய 7 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கை பதிவு செய்து விசாரிக்க உரிய முகாந்திரம் இருக்கிறதா என்பது குறித்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் 18-வது மாஜிஸ்திரேட்டிடம் அரசு வழக்கறிஞர் மூலம் ராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் பசுபதி ஆலோசனை மற்றும் கருத்து பெற்றுள்ளார். அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT