Published : 04 Oct 2016 01:47 PM
Last Updated : 04 Oct 2016 01:47 PM
*
ரேஷன் கடைகளில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள ‘பாயின்ட் ஆப் சேல்’ கருவிகளில் பல்வேறு நடைமுறை சிக்கல் இருப்பதால், நுகர்வோருடன் நாள்தோறும் மல்லுக்கட்ட வேண்டியுள்ளதாக விற்பனையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வந்த உணவுப் பொருட்கள் விநியோகத்தில் முறைகேடுகளைத் தடுக்கவும், காகிதப் பயன்பாடு இல்லாமல் ரேஷன் பொருட் களை பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்க்க, ‘பாயின்ட் ஆப் சேல்’ என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி யுள்ளது.
தமிழகத்தில் சோதனை முயற்சி யாக பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் தற்போது திருச்சி உட்பட 13 மாவட்டங்களில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசின் புதிய திட்டத்தால் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும், இதனால் நுகர்வோருக்கு பதிலளிக்க முடியவில்லை என்றும், பணிச்சுமை அதிகரித்து வருவதாக வும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வேலூர் மாவட்ட ரேஷன் கடை விற்பனையாளர்கள் சிலர் கூறியதாவது:
“வேலூர் மாவட்டத்தில் பகுதி நேரம், முழு நேரம் என மொத்தம் 1,492 ரேஷன் கடைகள் உள்ளன. இதில், 800-க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் பணியில் உள்ளனர். அதில் படித்தவர்கள் என்று பார்த்தால் 300-க்கும் குறைவாகத் தான் இருப்பார்கள். 500-க்கும் மேற்பட்டோருக்கு போதிய கல்வியறிவு இல்லை.
இந்நிலையில், பொதுவிநியோகத் திட்டத்தின் முறைகேடுகளைத் தடுக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘பாயின்ட் ஆப் சேல்’ என்ற கருவியைப் பயன்படுத்தி, அதன் மூலமே ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என மாவட்ட வழங்கல் துறை அறிவுறுத்தியது. இதையடுத்து, ‘பாயின்ட் ஆப் சேல்’ கருவி பயன்பாடு குறித்து, ரேஷன் விற்பனையாளர்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.
‘ பாயின்ட் ஆப் சேல்’ கருவி மூலம் ரேஷன் கார்டுதாரர்களின் விவரங்கள், ஆதார் எண், கைபேசி எண் ஆகியவற்றைப் பதிவு செய்ய வேண்டும். இப்பணிகள் அனைத்தும் நவம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் 11 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. ஒவ்வொரு கடையிலும் 300-லிருந்து ஆயிரம் கார்டு தாரர்கள் வரை பொருட்களை பெற்றுச் செல்கின்றனர்.
‘ பாயின்ட் ஆப் சேல்’ கருவியில் பல்வேறு நடைமுறைகள் சிக்கல் இருப்பதால், தினந்தோறும் விற்பனையாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டி யுள்ளது. தனியார் நிறுவனம் மூலம் வழங்கப்பட்டுள்ள ‘ பாயின்ட் ஆப் சேல்’ கருவியில் போதிய சேமிப்பு வசதி இல்லை. தவறாக ஓர் எண்ணை பதிவு செய்துவிட்டால், அதை சரி செய்யும் வசதி இந்தக் கருவியில் இல்லை. அதற்கான பயிற்சியும் விற்பனையாளர்களுக்கு வழங்கப்படவில்லை.
போதிய பயிற்சி இல்லாததால், இந்தக் கருவியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற விவரம் 70 சதவீத ரேஷன் கடை விற்பனையாளர்களுக்குத் தெரியவில்லை.
இதனால், ஒரு நாளைக்கு 25 முதல் 30 கார்டுதாரர்களுக்கு மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. தவிர கார்டுதாரர்களுக்கு வழக்கம்போல் பொருட்கள் வழங்க வேண்டுமென்பதால், ‘பாயின்ட் ஆப் சேல்’ கருவியில் பதிவு செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவு செய்யும் பணி முடிவுக்கு வருமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் இது வரை 1.50 லட்சம் கார்டுதாரர்களுக்கு மட்டுமே ‘ பாயின்ட் ஆப் சேல்’ கருவி மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாக்கி யுள்ளவர்களுக்கு இம்மாதம் இறுதிக்குள் எப்படி பதிவு செய்வது என்பது கேள்விக் குறியாக மாறியுள்ளது.
இவ்வாறு ‘பாயின்ட் ஆப் சேல்’ கருவியில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதால் விற்பனையாளர் களுக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் இடையே நாள்தோறும் தகராறு ஏற்படுகிறது. எனவே, இதைத் தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இது குறித்து மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஸ்மார்ட் கார்டு திட்டத்தை செயல்படுத் தவே, ‘ பாயின்ட் ஆப் சேல்’ கருவிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தற்போது, இக்கருவிகளில் பல்வேறு நடைமுறைச் சிக்கல் இருப்பதாக ரேஷன் கடை விற்பனையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இதில் சில மாற்றங்களை செய்து தருவதாக, கருவியைத் தயாரித்து வழங்கிய தனியார் நிறுவனம் கூறியுள்ளது.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் இக்கருவிகள் மூலம் தடையின்றி ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் நடைமுறை சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும், படிப்படியாக எல்லாம் சரி செய்யப்படும். ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் ஏற்பட்டு வந்த முறைகேடுகளைத் தடுக்கவே, தமிழக அரசு இந்த புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT