Published : 27 Oct 2016 01:07 PM
Last Updated : 27 Oct 2016 01:07 PM

கோவை மாநகராட்சியில் அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை: அதிரடி உத்தரவால் கலங்கி நிற்கும் முன்னாள் கவுன்சிலர்கள்?

கோவை மாநகராட்சியில் அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளைத் துண்டிக்கும்படி மாநகராட்சி நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், அனுமதியின்றி குடிநீர் இணைப்புகளைப் பெற உடந்தையாக இருந்த முன்னாள் கவுன்சிலர்கள் கலக்கத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

கோவை மாநகராட்சிப் பகுதியில் கடந்த காலங்களில் பெரிய அளவில் குடிநீர்ப் பிரச்சனை ஏற்பட்டது. மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட குனியமுத்தூர், குளத்துப்பாளையம், கோவைபுதூர் பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒருமுறை ஒரு மணி நேரமும், குறிச்சி, போத்தனூர் பகுதிகளுக்கு 20 முதல் 25 நாட்களுக்குள் ஒருமுறையும், டவுன்ஹால், ஆர்.எஸ்.புரம், வடகோவை, 100 அடி ரோடு, ரத்தினபுரி, டாடா பேட் பகுதிகளில் தினமும், ராமநாதபுரம், பீளமேடு, பாப்பநாயக்கன்பாளையம் பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாளும், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், வரதராஜபுரம், நீலிக்கோணாம்பாளையம் பகுதிகளில் வாரத்துக்கு ஒருமுறையும் என பல்வேறுவிதமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

24 மணி நேரமும்?

அதையடுத்து, பழைய மாநகராட்சியாக இருந்த 72 வார்டுகளில் 24 மணி நேரமும், மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் 3 நாட்களுக்கு ஒருமுறையும் குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்தைக் கொண்டுவருவதாகவும், அந்தப் பகுதிகளிலும் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிக்கும் திட்டத்தை படிப்படியாக அமல்படுத்துவதாகவும் மாநகராட்சி அறிவித்தது.

ஆனால், ஏற்கெனவே தினமும் தண்ணீர் வந்துகொண்டிருந்த ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், ரத்தினபுரி பகுதிகளிலும் வாரத்துக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யும் நிலை உருவானது.

சிங்காநல்லூர், பீளமேடு, ஒண்டிப்புதூர், வரதராஜபுரம் பகுதிகளில் 7 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து, ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தினர்.

“சிறுவாணி அணையில் தண்ணீர்ப் பற்றாக்குறை, பில்லூர் அணையிலிருந்து வரும் பிரதானக் குழாய் உடைந்து விட்டது, மின் கோளாறால் மோட்டார் இயங்கவில்லை” என்றெல்லாம் கவுன்சிலர்களும், அதிகாரிகளும் பல்வேறு காரணங்களக் கூறினர்.

எனினும், “கோவை மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகத்தில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. முக்கியமாக, மாநகராட்சிக்கு வீட்டு வரியும் செலுத்தாது, தண்ணீர் இணைப்புக்கு உரிமமும் பெறாமல் நிறைய வீட்டுக்காரர்கள் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளனர். இவ்வாறு, பல்லாயிரக்கணக்கில் உரிமமின்றி குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் மீது நடவடிக்கை எடுத்தாலே, குடிநீர் விநியோகம் சீராகும்” என்று புகார்கள் எழுந்தன.

கூட்டத்தில் வாக்குவாதம்

இந்தப் பிரச்சினை தொடர்பாக மாமன்றக் கூட்டத்தில் சில கவுன்சிலர்கள் பிரச்சினை எழுப்பவே, கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில், “கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 250 குடிநீர் இணைப்புகள் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். சில கவுன்சிலர்கள் “இணைப்புகளைத் துண்டிக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது. அபாராதம் மட்டும் விதித்து, உரிய முறையில் விண்ணப்பித்து, அவர்கள் முறைப்படி இணைப்பு பெற அனுமதிக்கவேண்டும். இந்த தவறைச் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கூறினர்.

ஆணையர் உத்தரவு

இந்த நிலையில், கோவை மேயர் மற்றும் கவுன்சிலர்களின் பதவிக்காலம் முடிந்து, தற்போது மாநகராட்சி ஆணையரே, தனி அலுவலராகப் பொறுப்பேற்றுள்ளார்.

குடிநீர் விநியோகம் தொடர்பாக நேற்று முன்தினம் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், “கோவை மாநகராட்சியில் அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளைக் கண்டறிந்து, அவற்றைத் துண்டிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான நடவடிக்கைகளை, மண்டல வாரியாக தினமும் அறிக்கையாக அனுப்ப வேண்டும்” என்று சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு தனி அலுவலர் விஜய கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

இதனால், அனுமதியின்றி குடிநீர் இணைப்பு பெற்றுள்ள வீட்டுக்காரர்கள் மட்டுமின்றி, அந்த இணைப்புகளைப் பெற உதவிய முன்னாள் கவுன்சிலர்களும் கலக்கத்தில் உள்ளனர்.

விரிவாக்கத்தால் குளறுபடி

இதுகுறித்து ஆளுங்கட்சியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஒருவர் கூறும்போது, “கோவை மாநகராட்சியில் முன்பு 60 வார்டுகள் இருந்தன. அப்போது, முறைப்படி மாநகராட்சியிடம் அனுமதிபெற்று, குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், மாநகராட்சி விரிவுபடுத்தப்பட்டு, 100 வார்டுகளாக மாறிய பின்னர் பல குளறுபடிகள் ஏற்பட்டன.

ஏற்கெனவே பேரூராட்சிப் பகுதிகளாக இருந்த காளப்பட்டி, விளாங்குறிச்சி, சரவணம்பட்டி, மணியக்காரம்பாளையம், உடையாம்பாளையம், குனியமுத்தூர், கோவைபுதூர் உள்ளிட்ட பகுதிகளில், அந்தந்த பேரூராட்சி, நகராட்சிகளிடம் குடிநீர் இணைப்பு பெற்றவர்கள் மாதம் ரூ.100 முதல் ரூ.150 வரை செலுத்தினர். அவர்களுக்கு வாரம் ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே 2 மணி நேரம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

இந்தப் பகுதிகள் மாநகராட்சி யுடன் இணைக்கப்பட்டதும், அங்கே உள்ளவர்கள் 3 ஆண்டுகளுக்குள் மாநகராட்சி அலுவலத்தில் விண்ணப்பித்து, முறைப்படி குடிநீர் இணைப்பு பெற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பலர் அதைக் கடைப்பிடிக்கவில்லை. மாதந்தோறும் மாநகராட்சிக்கு பணமும் கட்டவில்லை. மேலும், மாநகராட்சியில் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவிய சூழலில், புதிதாக குடிநீர் இணைப்பு தரப்படுவதும் சில சமயம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதைப் பயன்படுத்திக் கொண்ட சில கவுன்சிலர்கள், பொறியாளர்கள் ஆகியோர், புதிதாக வீடுகட்டுவோரை அணுகி, முறைகேடாக குடிநீர் இணைப்புகளை வழங்கியுள்ளனர். அப்போது, ரூ.20 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு இணைப்பு பெற்றவர்கள், மாதந்தோறும் தண்ணீர் கட்டணமும் செலுத்தவில்லை. சிலர் வீட்டு வரி கூட செலுத்தாமல் உள்ளனர்.

காளப்பட்டி, விளாங்குறிச்சி, சரவணம்பட்டி உள்ளிட்ட 3 வார்டுகளில் மட்டும் 5 ஆயிரம் இணைப்புகளுக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. மாநகராட்சி முழுவதும் கணக்கிட்டால், அனுமதியின்றி 15 ஆயிரம் இணைப்புகளுக்கு மேல் இருப்பது தெரியவரும். இதுகுறித்து அப்பகுதி பில் கலெக்டர்கள் மற்றும் அந்தந்த வார்டு முன்னாள் கவுன்சிலர்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், நடவடிக்கை எடுத்தால், இணைப்புக்காக லஞ்சம் கொடுத்த மக்கள் பிரச்சினை செய்வார்கள். எனவே, ஏதாவது முட்டுக்கட்டை போட்டு இந்தப் பிரச்சினையை கிடப்பில் போடுவார்கள்” என்றார்.

நடவடிக்கை பாயும்

இதுகுறித்து மாநகராட்சி தனி அலுவலர் விஜய கார்த்திகேயனிடம் கேட்டபோது, “அனுமதியற்ற குடிநீர் இணைப்புகள் தொடர்பாக அந்தந்த மண்டல அலுவலர்கள் தினமும் புள்ளிவிவரம் அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பாத அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை பாயும். அது கடுமையானதாகவும் இருக்கும். எனினும், அனுமதியற்ற குடிநீர் இணைப்புகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் எதுவுமில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x