Last Updated : 25 Aug, 2022 07:22 PM

3  

Published : 25 Aug 2022 07:22 PM
Last Updated : 25 Aug 2022 07:22 PM

“ஜனநாயக பாதையில் இருந்து சர்வாதிகார பாதை...” - முதல்வர் ஸ்டாலின் மீது அதிமுக சாடல்

மதுரை: “அதிமுகவிற்கு தகுதி இல்லை என்று முதல்வர் கூறுவது, ஜனநாயக பாதையில் இருந்து அவர் சர்வாதிகார பாதையில் பயணிக்க தொடங்கிவிட்டாரா என்ற கேள்வியை எழுப்புகிறது” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “கோவை, பொள்ளாச்சி போன்ற நகரங்களுக்கு சென்று நலத்திட்டம், பொதுக்கூட்டங்களில் முதல்வர் பேசிய விதம் முரணானது. பிரதான எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி ஆளுங்கட்சியின் அவல நிலை, நிர்வாக சீர்கேட்டு, மக்கள் விரோதப் போக்கு, அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாது, அம்மா திட்டங்களுக்கு மூடு விழா, 150 சதவீத சொத்து வரி உயர்வு, 52 சதவீத மின் கட்டண உயர்வு, சட்டம் - ஒழுங்கு சீரழிவு, காவல்துறை சுதந்திரமாக செயல்படவில்லை; இதனால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர் என்று ஆதாரத்துடன் புள்ளிவிபரத்துடன் தொடர் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்,

ஆட்சியின் அவல் நிலையை எடுத்துக் கூற எதிர்க்கட்சித் தலைவருக்கு தார்மிக உரிமை உண்டு. ஆனால், இன்றைக்கு முதல்வர், நான் பலமுறை விமர்சனங்களை எதிர்கொண்டு வளர்ந்தவன் என்று கூறுகிறார்; ஆனால் தற்போது அதிமுக கேள்வி கேட்பதற்கு எந்த தகுதி இல்லை என்று கூறியுள்ளார்.

அதிமுகவில் பயிற்சி பெற்று, அதனால் வாழ்வு பெற்று, அதிகாரம் பெற்று, தன் கையில் பச்சை குத்தி கொண்டு இருந்தவர்களை காலத்தின் கோலத்தால், தொண்டர்களின் உழைப்பால் கோபுர கலசத்தில் உயர்ந்தவர்களை நீங்கள் அபகரித்தை என்னால் பட்டியலிட்டு சொல்ல முடியும், உதாரணமாக எ.வ.வேலுவில் தொடங்கி செல்வகணபதி, கே.கே எஸ் எஸ் ஆர்.ஆர், முத்துசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, கம்பம் செல்வேந்திரன், சத்தியமூர்த்தி, தென்னவன், ரகுபதி,பழனியப்பன், தங்க தமிழ்ச்செல்வன் தற்போது செந்தில்பாலாஜி வரை பட்டியலிட்டு சொல்ல முடியும்.

தொண்டர்கள் உழைப்பால் உயர்ந்தவர்களை, நெருக்கடி கொடுத்து அபகரித்து தன் அருகில் வைத்துக் கொண்டு, அதிமுகவிற்கு கேள்வி கேட்க என்ன தகுதி உள்ளது என்று முதல்வர் கூறலாமா?

அதிமுக 50 ஆண்டுகால பொன்விழாவில், 30 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்து மக்களுக்காக சேவை செய்தது. எம்ஜிஆர் இருக்கும்பொழுது திமுகவை கோட்டை பக்கம் வராமல் தோல்வியைதான் பரிசாக வழங்கினார். ஏழு முறை ஆட்சி செய்த இந்த இயக்கத்தில் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர், அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி இந்த இயக்கத்தை வழிவோடும் பொலிவோடும் நடத்தி வருகிறார்.

அதிமுகவிற்கு தகுதி இல்லை என்று முதல்வர் கூறுவது ஜனநாயக பாதையில் இருந்து சர்வாதிகார பாதையில் பயணிக்க தொடங்கிவிட்டாரா என்ற கேள்வி வருகிறது. முதல்வர் அதிமுகவை விமர்சனம் செய்தது கழகத் தொண்டர்கள் எல்லாம் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

பத்தாண்டு காலம் எதிர்க்கட்சியாக திமுக இருந்த பொழுது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் சரி, எடப்பாடி பழனிசாமியும் சரி எதிர்கட்சிக்குரிய மரியாதையை வழங்கினார்கள், இன்றைக்கு 48 ஆண்டுகால பொது வாழ்கையில் எடப்பாடி பழனிசாமி உங்களைப் போன்ற தந்தையின் மடியில் தவழ்த்து அதிகாரம் பெறாமல் தன் தியாகத்தால், உழைப்பால், விசுவாசத்தால் கிளை கழகம் தொடங்கி முதல்வர் ஆனார்.

தற்போது இன்றைக்கு பிரதான எதிர்க்கட்சித் தலைவராக இருந்து, மக்கள் நலன் சார்ந்த கேள்விகளை எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். ஆனால் அதற்கு முதல்வர் அதிமுகவில் அதிகாரப் போட்டி என்று முழு பூசணிக்காய் போற்றில் மறைக்க வண்ணம் பொத்தாம் பொதுவாக பேசுகிறார். திமுகவிலும் அதிகாரப் போட்டி இருந்தது ஏன் உங்களுக்கும் உங்கள் சகோதரருக்கும் அதிகாரப் போட்டி இல்லையா, அதேபோல் வைகோ அதிகாரப் போட்டியில் இருந்து திமுகவில் இருந்து செல்லவில்லையா, அண்ணா காலம் தொடங்கி எத்தனை அதிகாரப் போட்டிகள் நடைபெற்றது என்பது உங்களுக்கு தெரியாதா?

முதல்வர் ஏடாகூடமாக பேசுகிறார், இன்றைக்கு ஒரு கோடியே 40 லட்சம் மக்கள் வாக்களித்து எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். நீங்கள் கொங்கு மண்டலம் சென்றபோது ,அங்கே கூட்டத்தை கூட்ட நீங்கள் செய்த ரகசியங்களை நடுநிலை நாளிதழ்கள் ஆதாரத்தோடு தோடு சுட்டிக்காட்டி உள்ளது. ஆனால் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி சென்றால், அங்கு இயற்கையான கூட்டம் கூடியது,

எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்டால் அதற்குரிய பதிலை, அறிந்த பதிலை கூறவேண்டும். ஆனால் ஜனநாயக கடமை ஆற்றாமல் முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை ஏகடி பேசுவதை இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது பேசிய நாகரிகம், கண்ணியம் இப்போது இல்லாமல் போனது ஏன்? உங்கள் இதுபோன்ற பேச்சை மக்கள் உங்களிடம் எதிர்பார்க்கவில்லை” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x