Published : 25 Aug 2022 11:20 AM
Last Updated : 25 Aug 2022 11:20 AM
சென்னை: 750 கிலோ கடத்தல் கஞ்சா பறிமுதல்: கஞ்சா வலைப்பின்னலை வேருடன் அழிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ''தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில், ஆந்திராவிலிருந்து சரக்குந்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள 750 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. காவல்துறையினரின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது. ஆனால், கஞ்சா ஒழிப்புக்கு இது போதுமானது அல்ல.
காவல்துறையினரால் பிடிபடும் கஞ்சாவை விட 100 மடங்கு கஞ்சா புழக்கத்தில் விடப்படுவதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறேன். காவல்துறையினரின் நடவடிக்கை காரணமாக இது 90 மடங்காகவோ, 95 மடங்காகவோ குறைந்திருக்கலாம். ஆனால், தடைபடவில்லை.
போதைப் பொருட்களுக்கு எதிராக தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று தெரிந்த பிறகும், இலங்கைக்கு கடத்துவதற்காக 750 கிலோ கொண்டுவரப்படுகிறது என்பதிலிருந்தே கஞ்சா வலைப்பின்னல் எவ்வளவு வலிமையாக செயல்பட்டு வருகிறது என்பதை அறியலாம்.
புழக்கத்தில் விடப்படும் கஞ்சாவை பிடிப்பது பத்திரிகை செய்திகளுக்கு மட்டும் தான் பயன்படும். கஞ்சா வலைப்பின்னலை கண்டறிந்து அதை அடியோடு ஒழிப்பது தான் கஞ்சா போதை சீரழிவை முற்றிலுமாக கட்டுப்படுத்த உதவும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT