Published : 25 Aug 2022 11:03 AM
Last Updated : 25 Aug 2022 11:03 AM
சென்னை: "கடந்த 15 ஆண்டுகளாக போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்த காலத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், தந்தையின் ஆட்சியில் குறைக்கப்பட்ட ஒப்பந்த காலம் தனயனின் ஆட்சியில் மீண்டும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவு முதல்வருக்கு தெரிந்து எடுக்கப்பட்டதா? தெரியாமல் எடுக்கப்பட்டதா? என்பது தெரியவில்லை" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம், அவர்களின் நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றம் மட்டும் தான் மிஞ்சியிருக்கிறது. போக்குவரத்து தொழிலாளர்களின் குறைந்தபட்ச உரிமைகளைக் கூட பாதுகாக்கத் தவறிவிட்ட இந்த ஊதிய ஒப்பந்தம், தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுகள் நீண்ட இழுபறிக்குப் பிறகு திமுக ஆட்சியில் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் எதுவும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மனநிறைவோ, மகிழ்ச்சியோ அளிப்பதாக இல்லை. மாறாக, இருந்த உரிமைகளை இழந்த வேதனைதான் வாட்டுகிறது.
போக்குவரத்துத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் 25 சதவீத ஊதிய உயர்வு கோரிய நிலையில், 5 சதவீதம் மட்டும் தான் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது; ஊதிய உயர்வுக்கான நிலுவைத் தொகை 01.09.2019 முதல் வழங்கப்பட வேண்டிய நிலையில், 01.01.2022 முதல் 7 மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது; அதனால், 28 மாதங்களுக்கான நிலுவைத் தொகை மறுக்கப்பட்டுள்ளது; அதே நேரத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட இடைக்கால நிவாரணம் மட்டும் முழுமையாக பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவது குறித்தோ, 01.04.2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்தோ, கடந்த 2 ஆண்டுகளில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியப் பயன்களை வழங்குவது குறித்தோ எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இவை அனைத்தையும் விட ஊதிய ஒப்பந்த காலத்தை 3 ஆண்டுகளில் இருந்து நான்காண்டுகளாக அதிகரித்திருப்பது தான் தொழிலாளர்களுக்கு செய்யப்பட்ட பெரும் பாதிப்பு ஆகும். அதிலும் குறிப்பாக மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் என்ற இழந்த உரிமையை மீட்டெடுத்துக் கொடுத்தவன் என்ற முறையில் இதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 2000-ஆவது ஆண்டுக்கு முன்பாக மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு வந்த நிலையில், 2001-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, ஊதிய ஒப்பந்த காலத்தை 5 ஆண்டுகளாக நீட்டித்தார். 2006-ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ஒப்பந்த காலத்தை 4 ஆண்டுகளாக கலைஞர் குறைத்தார்.
ஆனால், அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, ஒப்பந்த காலத்தை மீண்டும் 3 ஆண்டுகளாக கலைஞர் குறைத்தார். அதன்பின் கடந்த 15 ஆண்டுகளாக அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், தந்தையின் ஆட்சியில் குறைக்கப்பட்ட ஒப்பந்த காலம் தனயனின் ஆட்சியில் மீண்டும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவு முதல்வருக்கு தெரிந்து எடுக்கப்பட்டதா... தெரியாமல் எடுக்கப்பட்டதா? என்பது தெரியவில்லை. தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிரான இந்த முடிவை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளவோ, நியாயப்படுத்தவோ முடியாது.
ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 83 மாதங்களாக அகவிலைப்படி உயர்த்தப்படவில்லை; கடந்த 2 ஆண்டுகளில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்படவில்லை. இந்த குறைகள் ஊதிய ஒப்பந்தத்தில் சரி செய்யப்பட வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கையாக இருந்தது. ஆனால், இது குறித்து பரிசீலிக்கக் கூட அரசு முன்வராதது மிக மோசமான உரிமை மறுப்பாகும்.
ஊதிய ஒப்பந்தப் பேச்சுகளின் போது, அதிகாரிகள் ஆதிக்கம் தான் நிலவியதாகவும், அதனால் தான் போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் கூட நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இது உண்மையாக இருந்தால், தொழிலாளர்களின் உரிமைகள் பறிபோனதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அதிகாரிகள் அரசுக்கு ஆலோசனைகளை வழங்கலாம்; ஆனால், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அரசு தான் இறுதி முடிவை எடுக்க வேண்டும். ஆனால், அதிகாரிகள் தரப்பில் தரப்பட்ட அழுத்தத்திற்கு பணிந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் என்ற அநீதியை போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீது அரசு திணித்திருக்கிறது. இது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்.
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் என்பதே மிக நீண்ட காலம் ஆகும். அதை 4 ஆண்டுகளாக நீட்டிப்பது அவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி விடும். அதையும் கடந்து 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் என்ற உரிமையை தந்தை கொடுத்தார்; தனயன் எடுத்தார் என்ற பழிச்சொல்லுக்கு இன்றைய முதல்வர் ஆளாகிவிடக் கூடாது. எனவே, ஊதிய ஒப்பந்த காலத்தை மீண்டும் 3 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். அத்துடன் ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் ஓய்வூதியம் மீதான அகவிலைப்படியை உயர்த்த வேண்டும்; கடந்த இரு ஆண்டுகளில் விருப்ப ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியப் பயன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளையும் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT