Published : 25 Oct 2016 12:57 PM
Last Updated : 25 Oct 2016 12:57 PM
தமிழகம் - கேரளத்தை இணைக்கும் ராமக்கல் மெட்டுச் சாலை திட்டம் தாமதம் ஆகி வருவதால் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க 18 கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டம், கோம்பை பேரூராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பண்ணைப்புரம், டி.சிந்தலச்சேரி, பல்வராயன்பட்டி உள்ளிட்ட 18 கிராமங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் முக்கிய கோரிக்கை தமிழகம் கேரளாவை இணைக்கும் ராமக்கல் மெட்டுச்சாலை திட்டம் ஆகும். ஆனால், இதுவரை திட்டப் பணிகள் நடைபெறாததால் வருகிற உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க 18 கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து ‘தி இந்து’விடம் கோம்பையைச் சேர்ந்த பாரதி கவிதை மையத் தலைவர் எஸ்.சீதாராமன் கூறுகையில், ராமக்கல் மெட்டு அடிவாரத்தில் இருந்து மலையின் மீது உள்ள ராமக்கல் மெட்டு வரை 14 கி.மீ. தூரம் உள்ளது. இதில் 7 கி.மீ. வனத்துறை கட்டுப்பாட்டில் வருகிறது. இந்தச் சாலையை அமைத்தால் எளிதாக கேரளாவுக்குச் சென்று வரலாம். ஆனால், சாலை அமைக்க வனத்துறையினர் அனுமதி மறுத்து விட்டனர். இதனையடுத்து, ராமக்கல்மெட்டு சாலை திட்டத்தை நிறைவேற்றக் கோரி, கடந்த 1990-ம் ஆண்டு கிராம மக்களிடம் கையெழுத்து பெற்று எங்களது பாரதி கவிதை மையம் மூலம் 18 ஆயிரம் அஞ்சல் அட்டைகள் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தோம்.
ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர், சில மாதங்களுக்கு முன்பு வனத்துறையினர் அனுமதி பெற்று, புதிய சாலை அமைத்து ராமக்கல்மெட்டு சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், இதுவரை முதற்கட்ட பணிகள் கூட நடக்கவில்லை. தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதால், இதனைக் கண்டித்து நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை 18 கிராம மக்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர் என்றார்.
கோம்பை இளைய ஜமீன்தார் டி.அப்பஜிராஜா கூறுகையில், இந்த சாலை அமைக்க கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் வனத்துறை அனுமதி மறுத்து விட்டதால், பணம் மீண்டும் அரசுக்கு சென்று விட்டது என்றார்.
இடுக்கி மாவட்டம் தலையங்க காவல் பகுதியைச் சேர்ந்த டி.ரங்கசாமி கூறுகையில், எனது சொந்த ஊர் கோம்பை என்பதால் தேர்தலின்போது கோம்பையில் வாக்களிக்கிறேன். ஆனால் கேரளத்தில் ஏலக்காய் தோட்டம் இருப்பதால் அங்கு அடிக்கடி சென்று வருகிறேன். சாலை போட தாமதம் காரணமாக 7 கி.மீ.-ல் செல்ல வேண்டிய கேரளத்துக்கு, குமுளி வழியாக 60 கி.மீ. தூரமும், கம்பம்மெட்டு வழியாக சுமார் 40 கி.மீ. தூரமும், போடிமெட்டு வழியாக சுமார் 50 கி.மீ. தூரமும் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. வாகனக் கட்டணமும் அதிகரிக்கிறது. இதனை தவிர்க்க உடனடியாக ராமக்கல் மெட்டுச் சாலை திட்டத்தை உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ராமக்கல்மெட்டுச் சாலைத் திட்ட மதிப்பீடு விரைவில் அரசின் ஒப்புத லுக்கு அனுப்பப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT